நான் முதல்வனால் UPSC-யில் சாதித்த சிவச்சந்திரன்! சொந்தம் கொண்டாடும் அகாடமிகள்! அதெப்படி திமிங்கலம்?
சென்னை: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் தமிழக அளவில் பி.சிவச்சந்திரன் முதலிடமும் தேசிய அளவில் 23ஆம் இடமும் பெற்றுள்ளனர். அவர் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் சிவச்சந்திரன் தங்கள் மாணவன் என பிரபல நாளிதழ்களில் இரு ஐஏஎஸ் அகாடமிகள் விளம்பரம் கொடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஐஏஎஸ் ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து 1009 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் நிலை தேர்வு, செப்டம்பர் மாதத்தில் முதன்மை தேர்வு நடைபெற்றது.
ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நேர்காணல் நடைபெற்றது. இந்த நிலையில் யூபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் இந்திய அளவில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபேய் முதலிடம் பெற்று இருக்கிறார்.

தமிழகத்தில் மாணவர் பி.சிவச்சந்திரன் தமிழக அளவில் முதலிடம் பெற்று இருக்கிறார். அகில இந்திய அளவில் இவர் 23ஆம் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் மோனிகா என்ற மாணவி அகில இந்திய அளவில் 39ஆம் இடம் பெற்றிருக்கிறார். இவரும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் வழியில் முதன்மை தேர்வு எழுதிய காமராஜ், சங்கர பாண்டியன் ஆகிய தேர்வர்கள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் படித்த சுமார் 134 பேர் நேர்முகத் தேர்வுக்கு சென்ற நிலையில் 50 பேர் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தேர்வில் வெற்றி பெற நான் முதல்வன் திட்டம் உதவிகரமாக இருந்தது என மாணவர் சிவச்சந்திரன் நெகிழ்ச்சியுடன் கூறி இருந்தார்.
இதனிடையே நான் முதல்வன் திட்டத்தில் படித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்த அவர்," எது மகிழ்ச்சி? நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த #நான்_முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் #UPSC தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது!" என கூறியிருந்தார்.

இந்த நிலையில் மாணவர் சிவச்சந்திரனை பிரபலமான இரு ஐஏஎஸ் அகாடமிகள் சொந்தம் கொண்டாடி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று பிரபல நாளிதழின் முதல் பக்கத்திலும் கடைசி பக்கத்திலும் யூபிஎஸ்சி தேர்வில் தங்கள் மாணவர்கள் வெற்றி பெற்றதாக இரு நிறுவனங்கள் சார்பில் விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது.
அந்த விளம்பரங்களில் பி.சிவச்சந்திரன் என அவரது புகைப்படத்தோடு தங்கள் மாணவர் தேசிய அளவில் 23ஆம் இடமும் தமிழக அளவில் முதல் இடமும் பெற்று இருக்கிறார் என பெருமையுடன் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக ஒரே நாளிதழில் முதல் பக்கத்தில் ஒரு பிரபல நிறுவனத்தின் விளம்பரத்திலும், கடைசி பக்கத்தில் மற்றொரு நிறுவனத்தின் விளம்பரத்திலும் சிவச்சந்திரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. தற்போது இது தொடர்பாக விவாதம் எழுந்திருக்கிறது.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இரு ஐஏஎஸ் அகாடமி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க இயன்ற போது அவர்கள் அழைப்பை எடுக்கவில்லை. இந்த நிலையில் வெவ்வேறு காலகட்டங்களில் அவர் அந்த நிறுவனங்களில் படித்திருக்கலாம் அப்போது தேர்ச்சி பெறாததால் இறுதியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வெற்றி பெற்று இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். உண்மையில் சிவச்சந்திரனுக்கு தெரிந்த இந்த விளம்பரங்கள் கொடுக்கப்பட்டதா? உண்மையிலேயே அவர் அங்கு படித்தாரா? என்பதை அவர் தான் கூற வேண்டும்.
ஆனால், "முதலில் தேர்வுக்கு தன்னிச்சையாகவே படித்து, வழிகாட்டி யாரும் இல்லாததால் வெற்றி பெறுவதில் தாமதமாவதை அறிந்து முதன்மை தேர்வுக்காக நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்து படித்தேன். கடின உழைப்பால் இந்த வெற்றி சாத்தியமானது" என சிவச்சந்திரன் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications