"வடகலை & தென்கலை இரண்டுமே ஒரே பூ காம்பின் இரு இதழ்கள்.." நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து
சென்னை: வடகலை, தென்கலை குறித்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வடகலை & தென்கலை இரண்டும் ஒரு பூ காம்பில் உள்ள இரு இதழ்கள் என்று கருத்து தெரிவித்தார். மேலும், குருக்களின் பெயரில் மோதலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என இரு பிரிவினருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள 18 திவ்யதேசங்களில் ஒன்று சின்னகாஞ்சி விளக்கொளி பெருமாள் என்று அழைக்கப்படும் தீபப்பிரகாசர் கோவில். இங்கு விழாக்களின் போது, கோயிலுக்கு வெளியில் தென்கலை மந்திரமும், திருநாமம் படுவார்கள்.

வடகலை தென்கலை வழக்கு
ஆனால் இந்த தென்கலை மந்திரம், தென்கலை வாழி திருநாமம் பாட அனுமதி மறுத்த சமீபத்தில் கோவில் செயல் அலுவலர் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் கோயில் செயல் அலுவலரின் உத்தரவை எதிர்த்து தென்கலை பிரிவைச் சேர்ந்த ஸ்ரீரங்காச்சாரி, ஸ்ரீனிவாசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கோயிலில் தென்கலை மந்திரம் பாட அனுமதியளித்து 1915ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட முன்சீப் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையும் 1918ம் ஆண்டு அந்த முன்சீப் நீதிமன்ற உத்தரவைச் சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்ததையும் சுட்டிக்காட்டினர்.
தள்ளுபடி
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உரிமையியல் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உயர் நீதிமன்றத்தைப் பயன்படுத்த முடியாது எனத் தெரிவித்தார். அதேநேரம் அந்த தீர்ப்பை அமல்படுத்தக் கோரி சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் எனக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், கோயில் விழாக்களின் போது வடகலை - தென்கலை பிரிவினர் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்ததாகக் குறிப்பிட்ட நீதிபதி, விழாக்கள் அமைதியாக நடக்கவே கோவில் செயல் அலுவலர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
அறிவுரை
அப்போது நீதிபதி மேலும் கூறுகையில், "வடகலை மற்றும் தென்கலை என இரண்டுமே ஒரு பூ காம்பின் இரு இதழ்கள். இரு பிரிவுகளும் பெருமாளுக்குச் சொந்தமானவை தான். இரு பிரிவுகளின் குருமார்களும் பெருமாளின் பாத கமலத்தில் இளைப்பாறும் நிலையில், அவர்களின் சீடர்கள் குருக்களின் பெயரால் மோதல்களைத் தவிர்த்து, ஒன்று சேர்ந்து குருக்களின் பாதைக்குக் கவுரவம் அளித்து நம்பிக்கை பாதையில் நடைபோட வேண்டும்" என்று பிரிவினருக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications