கூட்டணியில் இருந்து விலகலா? திடீரென அண்ணா அறிவாலயம் வந்த வைகோ.. ஸ்டாலினுடன் நடந்த மீட்டிங்!
சென்னை: கருணாநிதிக்கு அளித்த வாக்குறுதிபடி, என்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக நிற்பேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வைகோ ஆலோசனை நடத்தினார். இதன் மூலமாக திமுக - மதிமுக கூட்டணி பிரிய வாய்ப்பு உள்ளது என்ற பேச்சுகள் முடிவுக்கு வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அதிமுக - பாஜக தங்கள் கூட்டணியை உறுதி செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல அதிமுக - பாஜக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகளை இழுக்க முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை தங்கள் கூட்டணியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பாஜகவுடன் பேச்சுவார்த்தை?
இதனிடையே மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேசி வருகிறோம். வாஜ்பாய் காலத்தில் ஏற்கனவே அந்த கட்சி எங்களுடன் கூட்டணி அமைத்துள்ளனர். செப்டம்பர் மாதத்தில் இறுதி செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனால் மதிமுகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா என்ற கேள்வி எழுந்தது.
மறுத்த வைகோ
ஆனால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மதிமுக எம்பி துரை வைகோ இருவரும் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தனர். அதேபோல் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் அக்கட்சியினர் அறிவுறுத்தினர். அதுமட்டுமல்லாமல் திமுக கூட்டணியில் மதிமுக தொடரும் என்று கூறி இருந்தார்.
ஸ்டாலின் முன் நடந்த சம்பவம்
இந்த சூழலில் 2021ஆம் ஆண்டு பல்லடம் தொகுதியில் மதிமுக சார்பாக போட்டியிட்ட முத்து ரத்தினம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 2019ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் மதிமுக இணைந்த பின், மதிமுகவில் இருந்து விலகிய எந்த நிர்வாகியும் ஸ்டாலின் முன்னிலையில் சேர்க்கப்படவில்லை.
அண்ணா அறிவாலயம் வந்த வைகோ
இதனால் திமுக - மதிமுக இடையில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக இப்படியொரு சம்பவம் அரங்கேறியதாக பார்க்கப்பட்டது.இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். மதிமுக - திமுக இடையில் பிரச்சனை நடந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், வைகோ அண்ணா அறிவாலயத்திற்கு வந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
வைகோ பேட்டி
இதன்பின் சில மணி நேர ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து வைகோ பேசுகையில், முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். திமுக அரசுக்கு எதிராக எந்த பிரச்சனையிலும் நாங்கள் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை, பேசவும் மாட்டேன். இந்துத்துவ சனாதன சக்திகள் இமயமலையை கூட அசைக்கலாம், திராவிட கொள்கைகளை அசைக்க முடியாது.
முடிவுக்கு வந்த சர்ச்சை
கருணாநிதிக்கு அளித்த வாக்குறுதிபடி, என்றும் முதல்வர் ஸ்டாலினுடன் உறுதியாக இருப்பேன். வரும் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையாக வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்தார். வைகோவின் இந்த சந்திப்பு இரு கட்சிகளுக்கு இடையிலான உரசலை முடித்து வைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications