வண்டலூரில் ஜாலியாக சுற்றி திரிந்த அனு, ரமேஷ்.. சிவகார்த்திகேயனின் வெள்ளைப்புலிக்கு இப்படியொரு நிலைமை
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த முக்கிய விலங்குகள் ஒரே வாரத்தில் உயிரிழந்த சம்பவம் பார்க் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது... இதில் நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்த புலியும் அடக்கமாகும்.. இந்த சம்பவம் சென்னையில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.. என்ன நடந்தது?
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள எந்த உயிரினத்தை வேண்டுமானாலும் பொது மக்கள் தத்தெடுக்கலாம். இந்தத் திட்டத்தை 2009-ம் ஆண்டு பூங்கா நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. அந்தவகையில் பலரும் பல விலங்குகளை தத்தெடுத்து வருகிறார்கள்..

வெள்ளைப்புலி அனுவைத் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்
அந்தவகையில், 2006 ம் ஆண்டு டெல்லி உயிரியல் பூங்காவிலிருந்து அனு என்கிற வெள்ளைப் புலி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குக் கொண்டுவரப்பட்டது. அனு வண்டலூரில் 4 முறை குட்டிகளை ஈன்றுள்ளது. கடைசியாக 2014 மே மாதம், பீஷ்மர் என்ற ஆண் வெள்ளைப் புலிக்கும், அனு வெள்ளைப் புலிக்கும் 3 குட்டிகள் பிறந்தன.
இந்த புலி குட்டிகளில் ஓர் ஆணும், இரண்டு பெண்ணும் அடங்கும். இவைகளுக்கு தாரா, மீரா, பீமா எனப் பெயரிடப்பட்டது. கடந்த 2014-ல் நடிகர் சிவகார்த்திகேயன் அனு வெள்ளைப்புலியை தத்தெடுத்தார்.. அப்போது அனுக்கு 14 வயதாகியிருந்தது..
வெள்ளைப்புலியின் ஒரு நாள் பராமரிப்புச் செலவு 1196 ரூபாய் ஆகும்.. எனவே அடுத்த 6 மாதங்களுக்கான வெள்ளைப்புலி அனுவின் செலவை சிவகார்த்திகேயன் அன்றைய தினமே ஏற்றுக்கொண்டார். அதன்படி 6 மாத பராமரிப்புச் செலவு 2.12 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பூங்கா நிர்வாகத்திடம் வழங்கினார்.. இப்போது அனுவுக்கு 23 வயதாகிறது.
சமீபத்தில் விலங்குகள் தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பிரக்கருதி என்ற பெண் யானையையும் நடிகர் சிவகார்த்திகேயன் 6 மாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளார்..
நடிகர் சிவகார்த்திகேயன்
இப்படிப்பட்ட சூழலில், அனு இப்போது இறந்துவிட்டதாம்.. இதுகுறித்து பூங்கா மருத்துவர்கள் சொல்லும்போது, 23 வயதான 'அனு' என்ற வெள்ளைப்புலி வயது மூப்பும் உடல்நலக் குறைவும் காரணமாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளித்ததிலும் பலன் காணப்படாததால், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் 'அனு' உயிரிழந்தது.
அதே நேரத்தில், 22 வயதான 'ரமேஷ்' என்ற சிறுத்தைக்கும் வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்திருந்தபோதிலும், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது.
ஒரே வாரத்தில் சிங்கம், புலி, சிறுத்தை
இருவரின் உடல்கள் பூங்கா ஊழியர்களால் மீட்கப்பட்டு, வளாகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை முடிந்து முழு அறிக்கை வெளியான பின்னரே, உடல்நலக் குறைவு காரணமாகவா அல்லது ஏதேனும் நோய் தொற்றினாலா உயிரிழந்தன என்பதை உறுதி செய்யப்படும்.
இதற்கு முன், கடந்த 4 நாட்களுக்கு முன்பு பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரு பெண் சிங்கமும் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது. இந்த ஒரே வாரத்தில் சிங்கம், சிறுத்தை மற்றும் வெள்ளைப்புலி என மூன்று முக்கிய விலங்குகள் உயிரிழந்த சம்பவம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications