அவர் பிராமணர் இல்லை.. இந்துவின் A2B ஓட்டலை பாஜக டார்கெட் செய்வது ஏன்? சனாதனம் என சொல்லும் வன்னியரசு
சென்னை: பிராமணர் இல்லை என்ற காரணத்துக்காக இந்துவால் நடத்தப்படும் A2B உணவகத்துக்கு எதிராக பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்து உள்ளார்.
பிரபல நடிகர் சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலுக்கு A2B உரிமையாளர் ஸ்ரீநிவாச ராஜா பேட்டி ஒன்றை அளித்து இருந்தார். அதில், "சைவ உணவக தொழில் ஒரு காலத்தில் பெரும்பாலும் ஐயர்கள் கையில்தான் இருந்தது. அதன் பின்னர் மெல்ல மெல்ல மாறுதலுக்கு வந்தது. இந்த மாற்றம் எப்படி நடந்தது?" என்று வினவினார்.

இதற்கு பதிலளித்த A2B உரிமையாளர் ஸ்ரீநிவாச ராஜா, "இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை ஏற்பட முக்கிய காரணம் தந்தை பெரியார்தான். குலத் தொழில் முறையை மாற்றிக் காட்டியவர் தந்தை பெரியார். யார் எந்த தொழிலையும் செய்யலாம் என்று சொன்னார். காலம் மாறியது. அரசின் ஆதரவு கிடைக்கிறது. வங்கிகள் லோன் தருகின்றன. ஒரு குறுப்பிட்ட சமுதாயம் மட்டுமே செய்து கொண்டு இருந்த தொழிலை தற்போது யார் வேண்டுமானாலும் செய்யலாம். கடலில் யார் வேண்டுமானாலும் மீன் பிடிக்கலாம்." என்றார்.
இதனால் அவரது உணவகத்தையே புறக்கணிக்க வேண்டும் என இந்துத்துவாவின் ட்விட்டரில் ஹேஷ்டேக் ஒன்றையும் டிரெண்ட் செய்தார்கள். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட வன்னியரசு, "பொதுவாகவே என்னுடைய உணவு அசைவம் தான். சைவ உணவு ஓட்டல் பக்கம் போவதென்றால் கொஞ்சம் ஒவ்வாமையே ஏற்படும். ஆனாலும் அடையாறு ஆனந்தபவன் உரிமையாளரின் பேட்டியால் முக்கியத்துவமாகிறது சைவ உணவு. முன்பு அய்யர் ஓட்டல், அய்யங்கார் ஓட்டல் என இருந்தது. இப்போது பார்ப்பனரல்லாதோரும் சைவ உணவகங்களை நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.
குறிப்பிட்ட சாதி மட்டுமே நடத்தி வந்த உணவு கடைகள் இப்போது எல்லோருமே நடத்துவதற்கு காரணம் தந்தை பெரியார் என அடையாறு ஆனந்த பவன் ஓட்டல் உரிமையாளர் பேட்டியில் சொன்னதும், சங்பரிவாரக் கும்பல் அடையாறு ஆனந்த பவனை புறக்கணிக்க பரப்புரை செய்து வருகிறார்கள். ஓபிசி இந்துக்கள் மீது எவ்வளவு வன்மத்தை கொண்டுள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். அடையாறு ஆனந்தபவன் குழுமம் அடுத்து அசைவ உணவகங்களையும் ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும். #willeatatA2B" என்று குறிப்பிட்டு இருந்தார்.
அவர் வெளியிட்ட மற்றொரு ட்வீட்டில், "இந்து மதத்துக்கும் இந்துத்துவத்துக்கும் உள்ள வித்தியாசத்தை A2B ஓட்டல் விவகாரத்திலேயே பார்க்கலாம். அடையாறு ஆனந்த பவன் உரிமையாளர் ராஜா ஒரு இந்து தான். ஆனால், இந்துக்களுக்கான கட்சின்னு பெருமை பொங்க பேசும் பாஜக, எதற்காக இந்து நடத்தும் ஓட்டலை புறக்கணிக்க பரப்புரை செய்கிறது.
ஆனந்த பவன் உரிமையாளர் பார்ப்பனர் இல்லை என்பதைத்தவிர வேறொன்றும் இல்லை. இந்துவாகவே இருந்தாலும் இவ்வளவு வெறுப்பை கக்குவது தான் இந்துத்துவம். அது தான் சனாதனம். இந்த இந்துத்துவத்தை தான் நாம் வேரறுக்க வேண்டும் என்று சொல்கிறோம். ஓபிசி இந்துக்கள் இந்த சனாதனக் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்." என்று குறிப்பிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications