எல்.முருகன் காழ்ப்பில் உளறுகிறார்.. சிறுத்தைகள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தே தீருவோம்.. விசிக பதிலடி!
சென்னை: திருமாவளவனின் முதல்வராகும் கனவு பலிக்காது எனக் கூறிய மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு பதில் கொடுத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் ஓர் நாள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தே தீரும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க பாஜகவை அகற்றுவது தான் எமது இலக்கு என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், சமூக நீதி பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. அருந்ததியர் இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திருமாவளவன் எப்படி தலித் மக்களின் தலவராக இருக்க முடியும்? எப்படி அவர் தமிழகத்தின் தலைவராக இருக்க முடியும்? திருமாவளவனின் முதல்வராகும் கனவு எல்லாம் பலிக்காது என காட்டமாகக் கூறினார்.

இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனை எதிர்த்தும் மறுபரிசீலனை செய்யவும் திருமாவளவன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் திருமாவளவனை காட்டமாக விமர்சித்துப் பேசினார்.
இந்நிலையில், திருமாவளவனின் முதல்வராகும் கனவு பலிக்காது எனக் கூறிய எல்.முருகனுக்கு விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு பதில் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் வன்னியரசு.
வன்னி அரசு வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய அமைச்சர் எல்.முருகன் அவர்களின் இந்த நிலைப்பாடு பாஜகவின் நிலைப்பாடா அல்லது அவரது நிலைப்பாடா? கடந்த 2009 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுச் சட்டத்தை கொண்டு வந்த போது அதை சட்டப்பேரவையிலும் வெளியிலும் ஆதரித்த இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள். அதனால் தான் இன்று வரை அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது. அதில் எந்த பாதிப்பும் இல்லை.
விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு உள் ஒதுக்கீட்டுக்கு எதிரானதல்ல; கிரீமி லேயருக்கு எதிரானது. ஓபிசி சமூகத்துக்கு கிரீமிலேயர் மூலம் சமூகநீதிக் கோட்பாட்டை சிதைக்கும் பாஜகவின் சதியை அம்பலப்படுத்தி எதிர்த்து வரும் இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள். அதே போல, தலித்துகளுக்குள் கிரிமிலேயரை புகுத்தி சமூகநீதியை அழித்தொழிக்க முயற்சிக்கும் பாஜகவை தொடர்ந்து அம்பலப்படுத்துவதால்,
எல். முருகன் அவர்கள் காழ்ப்புணர்ச்சியில் சமூகநீதி என உளறுகிறார்.
இட ஒதுக்கீட்டில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது நாட்டுக்கே தெரிந்தது தான். ஆகவே,விடுதலைச் சிறுத்தைகளுக்கு பாஜகவில் இருந்து யாரும் பாடம் எடுக்க முடியாது. அருந்தியருக்கான உள் ஒதுக்கீட்டை விடுதலைச் சிறுத்தைகள் ஆதரித்தாலும் எல்.முருகன் அவர்கள் தொடர்ந்து அவதூறையே பரப்பி வருகிறார்.
புதிய தமிழகம், இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் தமிழ்நாட்டில் எதிர்ப்பது அவருக்கு தெரியும். ஆனால், அவர்களை கண்டிக்காமல் விடுதலைச் சிறுத்தைகளையே குறிவைப்பது ஏன்? ஏனென்றால், விடுதலைச் சிறுத்தைகள் பேரியக்கத்தில் தான் அருந்ததியர் சமூகத்தை சார்ந்தோர் அதிகம் இருக்கிறார்கள். பதவியிலும் களமாடுகிறார்கள்.
இந்த கோபத்தில் தான் விடுதலைச் சிறுத்தைகள் மீது வெறுப்பை கொட்டுகிறார். விடுதலைச் சிறுத்தைகள் ஓர் நாள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தே தீரும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியா முழுக்க பாஜகவை அகற்றுவது தான் எமது இலக்கு. அதை நோக்கி பயணிப்போம்.” எனத் தெரிவித்துள்ளார் வன்னி அரசு.












Click it and Unblock the Notifications