1 ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் ஆர்டிஓ ஆபீஸ்களில் வாகனங்கள் பதிவு.. இன்று முதல் என்னென்ன நன்மை
சென்னை: சொந்த பயன்பாட்டு வாகனங்களை பதிவு செய்வதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு கொண்டுவர தேவையில்லை என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் என்ன மாற்றங்கள் ஏற்படும்.. வாகனம் விற்போருக்கும், வாகனம் வாங்குவோருக்கும் என்னென்ன நன்மை. லஞ்சம் குறையுமா என்பது குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்ப்போம்.
பொதுவாக புதிய வாகனங்கள் வாங்கும்போது, அந்த வாகனங்களை பதிவு செய்வதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு (ஆர்.டி.ஓ.) கொண்டு செல்ல வேண்டியது கட்டாயம் என்று இருந்தது. அங்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வாகனங்களின் ஆவணங்களை சரிபார்த்து, வாகனங்களின் என்ஜின் எண்களை ஆய்வு செய்து பின்னர் வாகனங்களுக்கான பதிவு எண்களை வழங்குவது நடைமுறையை செய்து வந்தார்கள்.இதன் காரணமாக வாகனங்கள் எல்லாமே ஆர்டிஓ அலுவலகத்தில் மணி கணக்கில் காத்திருக்கும்.

ஆர்டிஓ ஆபீஸ் போக வேண்டாம்
வாகன உரிமையாளர்கள் அல்லது வாகன விற்பனையாளர்களின் பிரதிநிதிகள் புதிய வாகனங்களை ஆர்.டி.ஓ. அலுவலகங்களுக்கு கொண்டு சென்று ஒரு நாள் முழுக்க அங்கேயே இருப்பார்கள். இந்த நடைமுறை தற்போது மாறி உள்ளது. ஏனெனில் புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தின்படி சொந்த பயன்பாட்டு வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆர்.டி.ஓ. அலுவலகங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவையில்லை
நீதிமன்றம் உத்தரவால் மாற்றம்
ஆனால் புதிய நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்படாமல் இருந்து வந்தது. இது தொடர்பாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மோட்டார் வாகன புதிய சட்டத்திருத்தத்தின்படி சொந்த பயன்பாட்டு புதிய வாகனங்களை ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு கொண்டு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இந்த புதிய நடைமுறையை தமிழக அரசு இன்று முதல் 150 ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மற்றும் யூனிட் அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்த புதிய முறைப்படி புதிய வாகனங்களுக்கான விற்பனை ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வாகன இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நம்பர் பிளேட்டில் பதிவு
பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து பதிவு எண்களை ஒதுக்கீடு செய்து வருகிறார்கள். வாகன பதிவு எண்களை விற்பனை முகவர்கள் நம்பர் பிளேட்டில் பதிவு செய்து வாகனங்களில் அதனை பொருத்திய பின்னரே வாகன உரிமையாளர்களிடம் புதிய வாகனங்களை ஒப்படைப்பார்கள்.
பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஸ்மார்ட் கார்டு வடிவிலான ஆர்.சி. புத்தகங்களை ஆர்.டி.ஓ. அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும். அதே போன்று, சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட வாகன விற்பனையாளர்கள் நிறுவனங்களுக்கு திடீரென அவ்வப்போது சென்று வாகனங்களையும், விற்பனை ரசீதுகளையும் ஆய்வு செய்வார்கள்.
என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?
சொந்தப் பயன்பாட்டுக்காக விற்கப்படும் புதிய வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் நேரில் ஆய்வு செய்ய வேண்டியதில்லை. வாகனத்தை விற்பனை செய்யும் டீலர்களே (விற்பனையாளர்கள்), வாடிக்கையாளரின் ஆவணங்களை Vahan இணையதளம் மூலம் பதிவேற்றி, பதிவுக்கட்டணம் மற்றும் சாலை வரியைச் செலுத்தி, ஆன்லைனிலேயே பதிவை முடித்துவிடுவார்கள்.
ஆதார் சரிபார்ப்பு: வாடிக்கையாளரின் ஆதார் விவரங்கள் மூலம் அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, பதிவு எண் தானாகவே ஒதுக்கப்பட்டு விடும்.
வாகனம் வாங்குவோருக்கு என்ன நன்மை?
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வாகனத்தை ஓட்டிச் செல்வது அல்லது டீலர்கள் மூலம் கொண்டு செல்வது என்ற அலைச்சலும், நேர விரயமும் முற்றிலும் இனி குறையும். வாகனத்தைப் பதிவு செய்வதற்காக டீலர்கள் வசூலிக்கும் தனிச் சேவைக் கட்டணம் இனி இருக்காது.
பதிவு நடைமுறை ஆன்லைனில் நடப்பதால், செயல்முறை வெளிப்படைத்தன்மையுடனும், விரைவாகவும் முடியும். அதேபோல் ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவசியம் இனி இருக்காது.
லஞ்சம் குறையுமா?
இந்த மாற்றம் லஞ்சம் மற்றும் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தைக் குறைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. வாகனத்தை நேரில் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால், இடைத்தரகர்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் நுழையவோ அல்லது பொதுமக்களை அணுகவோ தேவை இல்லை.பதிவு நடைமுறை முழுவதும் ஆன்லைன் மற்றும் ஆதார் சரிபார்ப்பு மூலம் வெளிப்படைத்தன்மையுடன் (Transparency) நடைபெறுவதால், அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில் அணுகிப் பணிகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் இனிமேல் இருக்காது. அனைத்துக் கட்டணங்களும் ஆன்லைனிலேயே செலுத்தப்படுவதால், பணப் பரிமாற்றத்திற்கான வாய்ப்புகள் குறையும்.
வாகனம் விற்போருக்கு (டீலர்களுக்கு) என்ன நன்மை?
வாகனங்களை ஆர்டிஓ அலுவலகத்திற்கு கொண்டு சென்று வரும் போக்குவரத்துச் செலவு, பணியாளர்களின் வேலைப்பளு மற்றும் நேரம் மிச்சமாகும். வாகனப் பதிவு விரைவாக முடிவதால், வாடிக்கையாளர்களுக்கு வாகன டெலிவரியை இன்னும் விரைவாக வழங்க முடியும்.
தொந்தரவு இல்லாத பதிவு நடைமுறை மூலம் வாடிக்கையாளர் திருப்தியை அதிகரிக்க முடியும்.
ஒட்டு மொத்தமாக இந்த மாற்றம் பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியும், விரைவான சேவையையும் கிடைக்கும. அதே சமயம், வணிக பயன்பாட்டு வாகனங்கள் (மஞ்சள் பலகை வாகனங்கள்) மற்றும் மாற்றம் செய்யப்பட்ட வாகனங்கள் ஆகியவை தொடர்ந்து ஆர்டிஓ அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.












Click it and Unblock the Notifications