எம்.எஸ். சுப்புலக்ஷ்மி தோற்றத்தில் வித்யா பாலன்.. யார் இந்த எம்.எஸ்? சாதித்தது என்ன?
நடிகை வித்யா பாலன் இந்த ஆண்டு கர்நாடக இசை மேதை எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் பிறந்தநாளைப் புதுமையாகக் கொண்டாடி இருந்தார். காஞ்சிபுரம் பட்டுப்புடவை கட்டிக் கொண்டு இளம் தலைமுறையின் கவனத்தை எம்.எஸ். பக்கம் திருப்பி இருந்தார். அச்சு அசல் அவர் எம்.எஸ். போலவே இருந்ததைப் பலரும் சுட்டிக்காட்டி இருந்தனர்.
பழைய தலைமுறைக்கு எம்.எஸ் யார்? அவர் சாதனை என்ன? என்பது தெரியும். ஆனால், இன்றைய இளம் கர்நாடக இசைக்கலைஞர்களுக்கே அவர் யார் என்பது தெரியாது என்பதுதான் துரதிருஷ்டம். அவரைப் போல செப்புச்சிலை மாதிரி மடி உடுத்தி இருக்கும் இசைக்கலைஞர்கள் மிகமிக குறைவு. கல் பதித்த தோடு, வைர மூக்குத்தி எல்லாம் இன்றை இசைக்கலைஞர்களின் அடையாளம் இல்லை. காலம் மலையேறிவிட்டது. அப்படியான நிலையில் வித்யா பாலன் ஒரு விஷப்பரீட்சையைச் செய்து எம்.எஸ். உருவத்திற்கு ஒரு ஒளியைக் கூட்டி இருக்கிறார். உண்மையில் யார் இந்த எம்.எஸ்? அவர் சாதித்தது என்ன?

எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பாடிய 'காற்றினிலே வரும் கீதம்' பாடல்தான் தனக்குப் பிடித்த பாடல் மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் என்று சொன்னார். எம்.எஸ். பாடியது தமிழில். அதைப் பாராட்டிப் பேசியதோ அந்த மொழிக்குச் சம்பந்தமே இல்லாத மலையாள எழுத்தாளர். அந்தளவுக்கு மொழிகளைக் கடந்து எம்.எஸ் புகழை அன்றைய ஆல் இண்டியா ரேடியோ பரவ செய்திருந்தது. இன்றைக்கு இசை உலகில் பல ராக்ஸ்டார் வந்துவிட்டார்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் எம்.எஸ்தான் இந்தியாவின் ராக்ஸ்டாராக இருந்தார். சுப்புலக்ஷ்மியின் இசைக் கச்சேரியைக் கேட்ட அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, 'நான் நாட்டின் தலைவன்தான். நீங்களோ கர்நாடக இசையின் அரசி' என்றார்.
1916 ஆம் ஆண்டு பிறந்த சுப்புலக்ஷ்மியின் நூற்றாண்டு 2016 ஆண்டு கொண்டாடப்பட்டது. சுமார் 70 ஆண்டுகாலம் அவர் வாழ்ந்தார். அதில் இசையை தவிர அவர் வேறு எதற்கும் முக்கியத்துவம் அளித்ததில்லை. அவர் 'குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா' என்று கண்களை மூடிக்கொண்டு பாடினால் அவர் முகத்தில் ஒரு ஒளி உண்டாகும். அவரது 5 கல் பேசரி மூக்குத்தி எந்த இருளிலும் தனியே அது ஒரு ஒளியை வீசும். எம்.எஸ் இந்தியாவைத் தாண்டி பல நாடுகளில் பாடி இருக்கிறார். ஐரோப்பா, வடமெரிக்கா என அவர் குரல் எங்கும் காற்றில் கலந்து வீசியது. அதன் உச்சமாக ஐநா சபையில் அவர் கச்சேரி நடத்தினார். பல பஜனைகளில் அவர் பங்கேறு பாடினார். அந்தளவுக்கு அவரது குரலில் ஒரு ஈர்ப்பு விசை இருந்தது. காந்த சக்தி கலந்திருந்தது.

அவர் வாழ்ந்த காலத்தில் காலை ஆறுமணிக்கே தனது இசைப் பயணத்தை ஒவ்வொரு நாளும் தொடங்கி விடுவார். மல்லிகைப் பூ மாதிரி பஞ்சுபோல் இருக்கும் இட்லி அப்படி இல்லை என்றால் நைசான தோசையுடன் ஒரு ஃபில்டர் காபி ஆகியவற்றுடன் அவரது காலை உணவு தொடங்கும். அதன்பின்னர் இசை மணம் வீட்டில் பரவும். கூடவே தனது தம்பூராவை மீட்டும் அவரது விரல்கள் வீட்டில் அக்கம்பக்கத்து மனிதனைக் கூட ஆன்மிக மனநிலைக்கு இட்டு சென்றுவிடும் வல்லமை பெற்றிருந்தது. அந்தக் காலத்தில் தேவதாசி குடும்ப பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த சுப்புலக்ஷ்மியின் தாய் மதுரை சண்முகவடிவு பாரம்பரிய இசை உலகளவில் பெரிய புகழ்பெற்றவராக இருந்தார். எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் பாட்டி ஒரு வயலின் இசைக்கலைஞர்.
மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட எம்.எஸ். சுப்புலக்ஷ்மி தனது முதல் கச்சேரியை 11 வயதில் திருச்சிராப்பள்ளியில் நிகழ்த்தினார். இதுவே அவரது பொது நிகழ்ச்சி. பின்னர் 10 ஆண்டுகள் கழித்து அவர் சென்னைக்குக் குடியேறினார். இங்கேதான் அவர் சதாசிவத்தைச் சந்தித்தார். இவர் பிரபல எழுத்தாளர் கல்கியுடன் இணைந்து அவரது பெயரில் பத்திரிகை நடத்தி வந்தார். அதற்கு முன்னர் விடுதலை போராட்ட வீரர் வீரமுரசு சுப்பிரமணிய சிவாவின் சீடர்களில் ஒருவராக வலம் வந்தார் சதாசிவம்.
சதாசிவத்திற்குச் சென்னை சாஸ்திரிய சங்கீத உலகில் பெரிய தொடர்பு இருந்தது. பிற்காலத்தில் பட்டுப்புடவையும் மடிசாருமாகக் காட்சி தந்த எம்.எஸ். சுப்புலக்ஷ்மி தொடக்கக் கால சினிமாவில் மாடர்ன் உடையின் சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்தவர். அவர் புத்தகத்தைப்பிடிப்பதைப்போல நடித்தது அந்தக் காலத்தில் மாபெரும் புரட்சியாகக் கருதப்பட்டது. பின்னாளில் இவரேதான் காஞ்சிபுரம் பட்டு, தலைக்கு ஏற்ப மல்லி, எண்ணெய் பூசிப் படிய வாரிய தலை, முழுக்க முழுக்க மங்களகரமான மஞ்சள், நெற்றியில் சூரியனைப் போன்று உதிக்கும் ஒரு பொட்டு என எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் முகம் தனித்துவமானது.

சுப்புலக்ஷ்மிக்கும் சதாசிவத்திற்கும் 1940 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அது சதாசிவத்திற்கு மறுமணம் என்பது கூடுதல் தகவல். இந்தக் கல்யாணம் நடந்தபோது நாடு விடுதலை பெறவே இல்லை. 1945இல் எம்.எஸ். எல்லிஸ் டங்கன் இயக்கத்தில் 'மீரா' படத்தில் நடித்தார். அந்தப் படம் அந்தக் காலத்தில் வெளியான பான் இண்டியா படமாக வெற்றிக் கொடி வீசி பறந்தது. டங்கன் ஒரு அமெரிக்க இயக்குநர். அவர் தமிழ்நாட்டுப் படங்களை இயக்கியதால் அதற்கு மாநிலம் கடந்து ஒரு மவுசு உருவானது. இதனால் எம்.எஸ் இசை உலகை மீறிய ஒரு செல்வாக்கைப் பெற்றார்.
எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் இசைக்கச்சேரி என்றால் சபாக்கள் நிரம்பி வழிந்தது. அவர் நினைத்திருந்தால் தனது இசை திறமையை வைத்து பணமூட்டைகளைக் கட்டி வீட்டில் நிரப்பி இருக்கலாம். ஆனால், எந்தக் கர்நாட்டிக் இசைக் கலைஞரும் செய்யாத சாதனைகளைச் செய்தார். நாட்டு நன்மைக்காக, தர்ம காரியங்களுக்காக, பொதுமக்கள் சேவைக்காக என எம்.எஸ் பணம் வாங்காமல் கச்சேரிகளைச் செய்தார். அதில் வந்த பணத்தை பொதுச்சேவைக்கு அள்ளி அள்ளி கொடுத்தார்.
இவர் வாழ்ந்த காலத்தில் மெட்ராஸ் கார்பரேஷன் இவரைக் கவுரவிக்க முடிவு செய்தது. அவர் குடியிருந்த சாலைக்கு எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி சாலை எனப் பெயரைச் சூட முடிவு செய்தது. அதே தெருவில்தான் இசை உலக ஜாம்பவான் டி.கே.பட்டம்மாள் வாழ்ந்து வந்தார். அவர் இருக்கும் காலத்தில் தனக்கு அந்தப் பெருமை பொருத்தமாக இருக்காது என முடிவு செய்த சுப்புலக்ஷ்மி, பெயர் சூட்டுவதாக இருந்தால் பட்டம்மாள் பெயரை வைக்கவேண்டும் என்று பரிந்துரைத்தார். அந்தளவுக்கு மூத்தவர்களை மதிக்கும் பண்பு அவரிடம் இருந்தது.
சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தைக் கட்டுவதற்காக எழுத்தாளர் கல்கி நிதி திரட்டிய போது சுப்புலக்ஷ்மி பாடினார். அது பணமாக மாறியது. எட்டயபுரத்தில் 1947இல் பாரதி மண்டபத்தை கல்கி கட்டி, அதை அன்றைய கவர்னர் ஜென்ரல் ராஜாஜியை வைத்துத் திறந்த போது அங்கே பாடினார். அதற்காக நிதி திரட்டிய போது பாடினார். இப்படி தன் தேவைக்கு என்று மட்டும் வாழாத எம்.எஸ்.சுப்புலக்ஷ்மிக்கு 1998இல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இணையில்லா இசை சேவை செய்துவந்த இவரது குரல் 11 டிசம்பர் 2004 அன்றுதான் ஒரு வரலாற்றுச் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து அடங்கியது. அப்போது அவருக்கு 88வயது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications