விஜய்யை வழி நடத்துவது யார்? குழப்பம் ஏன்? வலுக்கும் சர்ச்சை! யோசிக்குமா தவெக?
சென்னை: நீட் விவகாரத்தில் விஜய்யை யாரோ தவறாக வழி நடத்துவதாகவும் அவருக்கு பொதுப் பட்டியல் பற்றிய தெளிவான பார்வை இல்லை என்றும் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கருத்து கூறியுள்ளார். விஜய் முன்வைக்கும் சிறப்பு பொதுப் பட்டியல் என்ற திட்டம் நடைமுறைக்கு உதவாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய விஜய், ஒன்றிய அரசு என்ற சொல்லை தொடர்ந்து பயன்படுத்தினார். கூடவே நீட் தேர்வுக்கு எதிராக திமுக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை மனப்பூர்வமாக ஆதரிப்பதாகவும் கூறியிருந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "நீட் தேர்வு முறையால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். ஆகவே, அது கூடாது. இந்தத் தேர்வு மாநில உரிமைக்கு எதிராக உள்ளது. இதை மாற்ற வேண்டும் என்றால் என்ன வழி, கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். முன்பு மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. அதை மாற்றிவிட்டார்கள். இதற்கு தீர்வு ஏற்படுபவரைச் சிறப்பு பொதுப்பட்டியலை உருவாக்க வேண்டும். அதன் மூலம் முழு சுதந்திரம் மாநில அரசுக்கு வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நீட் வேண்டாம் என்றே கூறிவருகின்றன. அதேபோல கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்துப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில்தான் விஜய் திடீரென்று சிறப்பு தனி பொதுப்பட்டியல் என்று ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளார். அது நடைமுறைக்கு உதவாத கருத்து என்றும் அவர் பாஜகவையும் திமுகவையும் ஒரே நேரத்தில் சமாதானப்படுத்த முயல்கிறார் என்றும் பத்திரிகையாளர் லக்ஷ்மி கூறியுள்ளார்.
விஜய்யின் பேச்சு குறித்துப் பேசிய லக்ஷ்மி, “ரஜினியைப் பெரிய கதாநாயகனாக நினைத்து படம் பார்த்த தலைமுறை இன்றைக்கு இல்லை. அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. இப்போது உள்ள நடுத்தர அல்லது இளம் தலைமுறை ரசிகர்கள் அதிகம் விஜய்யின் படத்தைப் பார்த்து வளர்ந்தவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே, அவருக்கு மிகப்பெரிய செல்வாக்கு திரையுலகில் இருக்கிறது. அதை விட்டுவிட்டுத்தான் அவர் அரசியல் செய்ய வருகிறார்.
அந்த வகையில் அவருக்கு ஒரு ஆதரவு தமிழ்நாட்டில் இருக்கிறது. கடந்த கூட்டத்தில் நீட் பற்றி பேசாத விஜய் இப்போது தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி இருக்கிறார். அவர் இப்போது அல்ல, அனிதா மரணத்திற்கு வீடு தேடிச் சென்றபோதே அவரது நிலைப்பாடு என்ன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. அப்போது அவர் வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை. இப்போது பேசி இருக்கிறார். இதுதான் வித்தியாசம்.
ஆனால், விஜய் நீட் பற்றி பேசியதில் ஒரு தெளிவு இல்லை என்றுதான் நான் சொல்வேன். அவர் குழப்பத்தில் இருக்கிறார். ஒன்று நீட் விலக்கு கேட்க வேண்டும். அல்லது தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் எனச் சொல்ல வேண்டும். இல்லை என்றால் நீட் பற்றிய குறைகளைக் களைந்து அதை முறைப்படுத்துங்கள் என்று சொல்ல வேண்டும்.
அவர் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுங்கள் என்பது சரி. பொதுப்பட்டியல் வேண்டாம் என்பதும் சரி. ஆனால், ஒரு சிறப்பு பொதுப் பட்டியலை இரண்டு தரப்பும் ஏற்கும்வரை உருவாக்கி அதில் கல்விக்கான மாநில உரிமையை வழங்குங்கள் என்கிறார். பொதுப் பட்டியல் என்பதில் மத்திய அரசின் கைதான் ஓங்கி இருக்கும். அப்படிப் பார்த்தால் சிறப்பு பொதுப் பட்டியலில் மட்டும் எப்படி மத்திய அரசின் அதிகாரம் குறைக்கப்படும்? அதில் என்ன பலன் கிடைக்கும்? இங்குதான் விஜய் பேச்சில் குழப்பம் உள்ளதாக நான் பார்க்கிறேன். அவரை யார் வழி நடத்துகிறார்கள்? அவருக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.
நீட் விசயத்தில் விஜய்க்கு தெளிவான புரிதல் இல்லை அல்லது அவருக்கு எழுதிக் கொடுப்பவர்கள் அவரை தவறாக வழி நடத்துகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. மாநிலப் பட்டியலில் 66 பொறுப்புகள் உள்ளன. பொதுப்பட்டியலில் 97 பொறுப்புகள் உள்ளன. இவர் சொல்வது போல சிறப்பு பொதுப்பட்டியல் எல்லாம் கொண்டுவர முடியாது. ஏற்கெனவே 1976இல் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தில் கல்வி, சுகாதாரம் மாநிலப் பட்டியலிலிருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிட்டது. ஆகவே, அதை முற்றாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றுங்கள் என்று கேட்பதே சரி.
விஜய் எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் ஆகிய மருத்துவக்கல்லூரிக்கு மட்டும் நீட் வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். அப்படி என்றால், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மத்திய அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்றால் நீட் எழுத வேண்டும் என்பது எப்படிச் சரியாக இருக்கும்? பலரும் என்ன சொல்கிறார்கள், நீட் தேர்வே முறைகேடாக நடக்கிறது என்றுதானே? அப்படி இருக்கும் போது தமிழ்நாடு கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்கிறேன் என்று சொல்லும் விஜய், எய்ம்ஸ், ஜிப்மருக்கு நீட் வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். இது எப்படிச் சரி? அப்போது மட்டும் ஊழல் நடக்காதா?
நீட் தேர்வை வெளிப்படையாக எதிர்ப்பதாக இருந்தால், அதில் உள்ள ஊழலைப் பற்றியும் பேசுங்கள். அதைப் பேசாமல் எப்படி அரசியல் கட்சியாக இருக்க முடியும்? தேர்வில் வெற்றி பெறுபவர்களை அழைத்துப் பாராட்டி பரிசு தருவது ஒரு அரசியல் கட்சியின் வேலை இல்லை. அதை என்.ஜி.ஓ செய்யும். அதைத்தாண்டி அதில் உள்ள ஊழலை ஒழிக்கப் போராடுவதுதான் அரசியல் கட்சியின் வேலை. அதை ஏன் செய்யாமல் விஜய் தவிர்க்கிறார்.
மாநில அரசையும் ஆதரிக்கிறார். மத்திய அரசையும் ஆதரிக்கிறார். நீட் விவகாரத்தில் இரண்டு தரப்புக்கும் நடுவில் நிற்கிறார். கூடவே இளைய தலைமுறை மத்தியில் தவறான நம்பிக்கையை விதைக்கிறார். அவர்களை தவறாக வழிநடத்துகிறார். ஆகவே, அவர் முதலில் பொதுப்பட்டியல் பற்றிய தெளிவான புரிதலுக்கு வரவேண்டும்"என்கிறார்.












Click it and Unblock the Notifications