"விவாகரத்து வரை வந்த திருமணம்" விஜய் முதல்வராவதில் தொடரும் சிக்கல்! 30 வருடம் முன்பே வந்த எச்சரிக்கை
சென்னை: தமிழகச் சட்டமன்றத்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையும் சூழலில்.. கோட்டை யாருக்கு என்பதில் 'க்ளைமாக்ஸ்' சஸ்பென்ஸ் நீடிக்கிறது. 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், மெஜாரிட்டிக்கு தேவையான 118ஐ எட்ட முடியாமல் விஜய் தவிக்கும் இந்தச் சூழல், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி நாடாளுமன்றத்தில் ஒலித்த ஒரு புகழ்பெற்ற உரையை அப்படியே கண்முன்னே நிறுத்துகிறது.
தமிழ்நாடு தேர்தலில் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களைப் பெற முடியாமல் தவெக திணி வருகிறது. இதுவரை விஜய் மூன்று முறை ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்துவிட்டார்.. ஆனால், ஆளுநர் தனது முடிவில் மிக உறுதியாக இருக்கிறார். அதாவது 118 எம்.எல்.ஏக்களின் கையெழுத்து அடங்கிய கடிதத்தைக் கொண்டு வாருங்கள். அப்போதுதான் பதவியேற்பு பற்றிப் பேச முடியும் என்பதை கவர்னர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

ஆளுநர்
ஒருபுறம் கெடுபிடி காட்டினாலும், "விஜய்யைத் தவிர வேறு எந்தக் கட்சியையும் (திமுக அல்லது அதிமுக) ஆட்சி அமைக்க அழைக்க மாட்டேன்" என்ற உறுதியை ஆளுநர் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆளுநர் மாளிகையின் கதவுகள் விஜய்க்காகத் திறக்கப்படுமா அல்லது 'ஆளுநர் ஆட்சி' எனும் முட்டுக்கட்டை விழுமா? என்பதே முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
என்ன நடந்தது
இன்றைய தமிழக அரசியல் சூழலைப் பார்க்கும் பலரும், 1997ல் பாஜக தலைவர் பிரமோத் மகாஜன் ஆற்றிய உரையை ஒப்பிட்டு பார்க்கிறார்கள்.. 1996 நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 161 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜ.கவின் வாஜ்பாயை ஆட்சி அமைக்க அழைத்தார் அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா.
சிவசேனா போன்ற தோழமைக் கட்சிகளுடன் சேர்த்து பா.ஜ.கவிடம் 194 இடங்கள் இருந்தன. திமுக, டி.டி.பி போன்ற மாநிலக் கட்சிகளிடம் வாஜ்பாய் ஆதரவு கோரினார். ஆனால், மதச்சார்பின்மைக்குச் சிக்கல் வரும் எனச் சொல்லி பாஜகவை இந்த கட்சிகள் ஆதரிக்கவில்லை. பெரும்பான்மை கிடைக்காது என்பது உறுதியானதும், நாடாளுமன்றத்தில் ஒரு உரையை ஆற்றிவிட்டு, வெறும் 13 நாட்களில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் வாஜ்பாய்.
தேவகவுடா
வாஜ்பாய் அரசு கவிழ்ந்த பிறகு, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் இணைந்து 'யுனைடெட் ஃப்ரண்ட்' என்ற கூட்டணியை உருவாக்கின. இந்த அணிக்கு 190 இடங்களே இருந்தன. ஆனால், 140 இடங்களை வைத்திருந்த காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து ஆதரவு தர முன்வந்தது. காங்கிரஸின் இந்தத் தயவில், 1996 ஜூன் 1-ம் தேதி ஹெச்.டி. தேவகவுடா இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றார்.
தேவகவுடாவின் ஆட்சி நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. இருப்பினும், அப்போது காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற சீதாராம் கேசரிக்கும் பிரதமருக்கும் இடையே ஈகோ யுத்தம் தொடங்கியது. பிரதமர் தனக்குச் சரியான முக்கியத்துவம் தரவில்லை என்று கேசரி கருதினார். அதே சமயம், காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான பழைய ஊழல் வழக்குகள் வேகம் எடுக்கத் தொடங்கின. இதில் பிரதமர் தலையிட்டு தங்களைக் காப்பாற்ற வேண்டும் எனக் கேசரி எதிர்பார்த்தார்.. ஆனால் தேவகவுடா அதற்கு மறுத்துவிட்டார்.
மீண்டும் வாபஸ்
இதனால் கோபமடைந்த கேசரி, 1997 மார்ச் 30ம் தேதி குடியரசுத் தலைவரைச் சந்தித்துத் தனது ஆதரவை வாபஸ் பெற்றார். 1997 ஏப்ரல் 11-ம் தேதி நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில், தேவகவுடா அரசுக்கு ஆதரவாக 190 வாக்குகளும், எதிராக 292 வாக்குகளும் விழுந்தன. ஆச்சரியமாக, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே அன்று அரசுக்கு எதிராக வாக்களித்தன.
இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது பாஜக எம்பி பிரமோத் மகாஜன் பேசிய பேச்சு, நகைச்சுவையும் நையாண்டியும் கலந்த ஒரு அரசியல் பாடம். ராமகாந்த் கலாப் தலைமையிலான நாடாளுமன்றக் குழு சீனா சென்றிருந்தபோது, அங்கிருந்தவர்கள் இந்திய ஜனநாயகம் எப்படிச் செயல்படுகிறது என்று கேட்டுள்ளனர். அதற்கு மகாஜன் கொடுத்த விளக்கம் ஒரு நகைச்சுவையாகவே இருந்துள்ளது.
உரை
இதை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட மகாஜன், "நாங்கள் சீனா சென்றபோது, இந்திய ஜனநாயகம் குறித்து கேட்டனர். அதற்கு நான்... என் பெயர் பிரமோத் மகாஜன். நான் மிகப்பெரிய கட்சியைச் சேர்ந்தவன், ஆனால் எதிர்க்கட்சியில் இருக்கிறேன் என்றேன். இதைக் கேட்டுச் சீனர்கள் அதிர்ச்சியடைந்தனர். காங்கிரஸ் எம்.பி ஸ்ரீவல்ல பாணிகிராஹியைக் காட்டி, இவர் இரண்டாவது பெரிய கட்சியைச் சேர்ந்தவர்; ஆட்சிக்கு வெளியே இருந்து ஆதரவு தருகிறார் என்றேன்.
சி.பி.எம் (CPI-M) எம்.ஏ.பேபியை காட்டி.. இவர் மூன்றாவது பெரிய கட்சி; முன்னணிக்குள் இருக்கிறார், ஆனால் ஆட்சியில் இல்லை என்றேன். கடைசியாகத் தலைவராக வந்த ராமகாந்த் கலாப்பை காட்டி, இவர் தான் இவரது கட்சியின் ஒரே எம்பி.. ஆனால், இவர்தான் அமைச்சரவையில் இருக்கிறார் என்றேன்.. தேவகவுடா அரசுக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான உறவு ஒரு விசித்திரமான திருமணம் போன்றது. மாப்பிள்ளைக்கும் (தேவகவுடா), பெண் வீட்டாருக்கும் (காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி) முதல் நாளிலிருந்தே தகராறு. தேனிலவே இன்னும் தொடங்கவில்லை, அதற்குள் விவாகரத்து நிலைக்கு வந்துவிட்டார்கள்!" என்றார்.
ரொம்ப முக்கியம்
காங்கிரஸ் அளித்த 'வெளியிலிருந்து ஆதரவு' பற்றி மகாஜன் சொன்ன ஒரு வர்த்தகம் இன்றும் பிரபலம்.. இன்றைய அரசியல் சூழலுக்கும் அது பொருந்தியே போகிறது. அதாவது மகாஜன், "வெளியிலிருந்து ஆதரவு தருவது என்பது, ஒருவர் ஏணியைப் பிடித்துக் கொண்டிருப்பது போன்றது. நீங்கள் உச்சாணிக் கொம்பிற்குச் சென்றவுடன் அந்த ஏணியை உருவிவிடுவார்கள். இது ஆதரவு அல்ல, ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான ஒரு முன்னேற்பாடு!"
பிரமோத் மகாஜன் சொன்னது போலவே தேவகவுடா அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு இந்திய அரசியல் பல திருப்பங்களைக் கண்டது.. காங்கிரஸ் ஆதரவுடன் ஐ.கே. குஜ்ரால் பிரதமரானார்.. ஆனால் மீண்டும் ஆதரவு வாபஸ் பெறப்பட்டு ஆட்சி கவிழ்ந்தது. ஜெயலலிதா ஆதரவோடு வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆதரவை வாபஸ் பெற்றதால் வெறும் 13 மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது.
கடைசியாக திமுக உள்ளிட்ட பிராந்திய கட்சிகளின் ஆதரவோடு வாஜ்பாய் ஆட்சியை அமைத்தார். 1999 முதல் 2004 வரை வாஜ்பாய் தலைமையில் நிலையான என்.டி.ஏ ஆட்சி அமைந்தது. அதன் பிறகு 2004 முதல் 2014 வரை மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடந்தது.












Click it and Unblock the Notifications