நீலாங்கரையில் அவசர ஆலோசனை! இந்த மாசமே மாநாடு நடத்தி ஆகணும்.. நிர்வாகிகளிடம் கட்&ரைட்டாக சொன்ன விஜய்!
சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக விஜய் இன்று தனது சென்னை நீலாங்கரை வீட்டில் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசித்துள்ளார். இந்த மாதமே விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்த வேண்டும் என விஜய் உறுதியாகச் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நடிகர் விஜய், 2026ல் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளார். தற்போது கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார் விஜய். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்காக 85 ஏக்கர் நிலத்தை தவெக கட்சியினர் தேர்வு செய்துள்ளனர். இங்கு வருகிற 23 ஆம் தேதி மாநாட்டை நடத்த விஜய் திட்டமிட்டு உள்ளார்.

விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் அதற்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று கூறி, கடந்த மாதம் 28ஆம் தேதி, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் தவெக சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவை ஆய்வு செய்த காவல் துறையினர், மாநாடு நடத்துவதற்கு நடைமுறை வழிகாட்டுதல் எதுவும் குறிப்பிடவில்லை என்பதால் 21 கேள்விகள் கேட்டு கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
அதனை பெற்றுகொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் 21 கேள்விகளுக்கான பதில் விளக்கத்தினை கடந்த 6 ஆம் தேதி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு போலீசார் நேற்று நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் மாநாடு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநாடு நடைபெறும் தேதியை விஜய் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிக்கான அங்கீகாரத்தை அளித்துள்ளது தேர்தல் ஆணையம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்ட தவெக தலைவர் விஜய், மாநாடு தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில், முதல் அரசியல் மாநாட்டை நடத்துவது குறித்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ள செப்டம்பர் 23 ஆம் தேதிக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் மாநாட்டை உரிய நேரத்தில் நடத்த முடியுமா என்றும், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகவுள்ளது. இந்த மாதமே விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்த வேண்டும் என்று விஜய் உறுதியாக சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் மாநாட்டின் போது விஜய்யின் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக அமைப்புச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயங்கள் தொடர்பாகவும் இன்று விஜய் பேசியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications