பாஜகவின் ‘பி’ டீம் தான் விஜய்! போட்டு உடைத்த திருச்சி சூர்யா? 2026 மெகா ப்ளான்?
சென்னை: விஜய் கட்சி தொடங்கியதற்குப் பின்னால் பாஜகவின் மறைமுக திட்டம் ஒன்று ஒளிந்திருப்பதாகவும் தவெக என்பது பாஜகவின் 'பி' டீம் தான் என்றும் திருச்சி சூர்யா பேட்டி ஒன்றில் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த 20 ஆம் தேதி பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட சூர்யா சிவா, தொடர்ந்து பாஜக பற்றிய உட்கட்சி விவகாரங்களை அவரது எக்ஸ் பக்கத்தில் போட்டு அம்பலப்படுத்தி வருகிறார். கூடவே தமிழிசையை அவர் தொடர்ந்து டார்கெட் செய்து விமர்சனம் செய்து வருகிறார். பாஜக மாநிலத் தலைவராக தமிழிசை செளந்தரராஜன் இருந்த காலகட்டத்தில் ஒரு முறை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அப்போது அவரது மகன் 'பாஜக ஒழிக’ என்று பின்னால் நின்று சத்தம் போட்ட விவகாரம் புயலைக் கிளப்பியது. அது தொடர்பான வீடியோ வைரலானது.

அதை சில நாட்கள் முன்னதாக எடுத்துப் போட்டு, சூர்யா விமர்சித்துள்ளார். ’பாஜக ஒழிக என்று நான் சொல்லவில்லை. அக்கா உங்க பையன் தான் சொல்கிறார் ' அதில் ஜாடையாக விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் தனது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டு வருவதாகவும், அதன் பின்புலத்தில் உள்ளவர்களை விரைவில் அம்பலப்படுத்த உள்ளதாகவும் கூறியிருந்தார். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தல் பாதைக்குத் தமிழிசை திரும்பியதற்குப் பின்னர், சூர்யா அவரை குறிவைத்துத் தாக்கி வந்தார்.
அதற்கு என்ன காரணம் என்று விசாரிக்கையில், பாஜக தேசிய தலைமைக்கு திமுக திருச்சி சிவாவின் மகன் தான் சூர்யா என எடுத்துக் காட்டி, இவரை ஓரங்கட்டியதற்குப் பின்னணியில் தமிழிசை பங்கு உள்ளது எனவேதான் அவரை சூர்யா விமர்சித்து வருகிறார் என்கிறது கமலாலய வட்டாரம்.
இந்நிலையில் விஜய் கட்சி ஆரம்பிப்பதற்குப் பின்னால் பாஜகவின் தூண்டுதல் உள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் திருச்சி சூர்யா. அதாவது பாஜகவின் பி டீம் தான் தவெக என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார். திமுகவை அடுத்த தேர்தலில் வெற்றி பெறவிடாமல் தடுக்கவே விஜய் என்ற ஆயுதத்தை பாஜக கையில் எடுத்துள்ளது என்றும் இது நீண்டகால திட்டம் என்றும் விளக்கியுள்ளார்.
இது பற்றி திருச்சி சூர்யா ஒரு யூடியூப்க்கு அளித்துள்ள பேட்டியில், "அண்ணாமலை நினைத்திருந்தால் திருச்சியில் என்னை வேட்பாளராக நிறுத்தி இருக்க முடியும். ஆனால் எனக்குச் சீட்டுக் கொடுக்கக் கூடாது என்றே கழுத்தை அறுத்தார். இன்னும் வெளிப்படையாகச் சொன்னால், எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் திருச்சியில் அமமுக வேட்பாளரை டம்மியாக நிறுத்தினார். அமமுக 4வது இடம் வந்திருக்கிறது. நாம் தமிழர் 3வது இடம். இதைவிடக் கேவலம் என்ன இருக்கிறது சொல்லுங்கள். என் பெயருக்கு முன்னால் இருக்கின்ற திருச்சியைக் கூட எடுத்துவிடலாமா என்று யோசித்து வருகிறேன்.
தற்பெருமையாகச் சொல்லவில்லை. நான் நின்றிருந்தால், நல்ல வாய்ப்பு பாஜகவுக்குக் கிடைத்திருக்கும். அதிமுக வேட்பாளர் ஒன்று பிரபலம் இல்லை. அமமுக வேட்பாளரும் அப்படித்தான். மதிமுகவுக்கு பம்பரம்தான் அடையாளம். அவர் இந்த முறை தீப்பெட்டி சின்னத்தில் நின்றார். ஆகவே, நல்ல பிரகாசமான வாய்ப்பு இருந்தது. கட்சியில் நான் இணைந்தபோதே அண்ணாமலை நிர்வாகிகள் மத்தியில் என்னை எம்பி வேட்பாளர் என்று முன்பே பல முறை பேசி இருக்கிறார். ஆனால், சமயம் பார்த்து அதைச் செய்யத் தவறிவிட்டார்.
நான் தான் அவர் பிறந்தநாளுக்கு எல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கிறேன். கோயமுத்தூரிலேயே கூட அண்ணாமலைக்கு போஸ்டர் அடித்து ஒட்ட ஆள் இல்லை. நான் தான் சென்னை, திருச்சி என்று போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கிறேன். எனக்கே அவர் நல்லது செய்யவில்லை” என்றவர் விஜய் அரசியல் பற்றிப் பேசி இருக்கிறார். அதாவது தமிழ்நாட்டில் பாஜக இரண்டு நடிகர்களைத்தான் டாக்கெட் செய்தது. அதில் ஒருவர் ரஜினி. அடுத்து விஜய். இந்த இருவரின் பின்னால் பாஜகவின் திட்டம் ஒளிந்துள்ளது என்பதைப் போட்டு உடைத்துள்ளார் திருச்சி சூர்யா.
"ரஜினியை வைத்து தனிக்கட்சி தொடங்க பாஜக பல முயற்சிகளைச் செய்தது. ஆனால், கடைசி வரை வருகிறேன் என்று சொன்ன ரஜினி அதிலிருந்து தப்பித்துவிட்டார். அவரைத் தொடர்ந்து விஜய்யை பாஜக மேலிடம் தயார் செய்தது. மோடி கடந்த 2019 தேர்தல் சமயத்தில் தமிழகம் வந்த போது கோவையில் விஜய்யைச் சந்தித்தார். அப்போது பாஜக ஒரு வியூகத்தை வகுக்கத் தொடங்கிவிட்டது. அதை வைத்துத்தான் விஜய் இப்போது கட்சி ஆரம்பித்துள்ளார். விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களைப் போட்டார். இறுதியில் அவர் ஒருவர் மட்டும்தான் விருத்தாசலத்தில் வெற்றி பெற்றார். அதன்பின்னர் தான் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.
அதைப்போல விஜய் எடுத்தவுடன் முதல்வராக முடியாது. அவரது கட்சி முதல் தேர்தலில் 8% வாக்குகளைப் பெறும். அதை நம்பித்தான் பாஜக அவரை களத்தில் இறக்குகிறது. அவர் திமுகவை ஆட்சிக்கு வராமல் தடுக்க உதவுவார். விஜய் கட்சியின் பின்னால் பாஜக இருப்பதைப் போல தெரியக் கூடாது என்பதே திட்டம். அப்படித் தெரிந்தால் ஓட்டு விழாது. அதனால் தான் அவர் தனியாகக் களம் காண்கிறார்.
இன்று ஒரு தொகுதிக்கு எவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டும் தெரியுமா? அப்படிப் பார்த்தால் விஜய் கடந்த 40 படங்களில் வாங்கிய மொத்த வருமானமும் போய்விடும். அதை அவர் உணர மாட்டாரா என்ன? விஜய் அரசியலுக்கு வருவதற்குப் பின்னால் பாஜகவின் திட்டம் கட்டாயம் உள்ளது. அவர் பாஜக பி டீம் தான். அதில் சந்தேகமே இல்லை.
இந்த முறை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ், டிடிவி தினகரனை வைத்து பாஜக முயற்சி செய்தது பார்த்தது. அதில் ஒரு பலனுமே இல்லை என்பதைப் புரிந்து கொண்டுள்ளனர்" என்கிறார்












Click it and Unblock the Notifications