விஜய் வெறும் டான்சர்தான்; அவர் எம்.ஜி.ஆர் இல்லை! பொன்ராஜ் விளாசல்
சென்னை: அண்ணாதுரையையும் எம்.ஜிஆரையும் போல நல்ல கருத்துகளைச் சொல்வதற்காக சினிமாவுக்குள் விஜய் நடிக்கச் செல்லவில்லை என்றும் அவர் இதுவரை ஒரு டான்ஸ் ஆடிக் கொண்டு ஒரு பொழுதுபோக்கு படங்களைத் தரக்கூடிய கூத்தாடியாகவே இருந்திருக்கிறார் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பொன்ராஜ் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற தவெக மாநாட்டில் ஊழலை எதிர்த்து மிக ஆவேசமாகப் பேசி இருந்தார் விஜய். கரப்ஷன் என்பது வைரஸ் என்றார். இந்த ஊழல்வாதிகள் எங்கே இருப்பார்கள்? எப்படி இருப்பார்கள் என்பது கண்ணுக்குத் தெரியாது. அவர்களைக் கண்டுபிடிப்பது கடினம். 100% ஊழலை ஒழிக்க முடியுமா? எனத் தெரியவில்லை இருந்தாலும் அதை ஒழிக்க வேண்டும் என்றார்.

ஊழலுக்கு எதிராக இயக்க ரீதியாகவும் கட்சி ரீதியாகவும் பல போராட்டங்களில் முன் நின்றவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பொன்ராஜ். அவர் அப்துல்கலாமுடன் உதவியாளராக இருந்து தூய்மையான அரசியலைப் பேசியவர். அவர் விஜய் பேச்சு குறித்து என்ன சொல்கிறார்? அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "தமிழ்நாட்டில் ஊழல் ஒரு பிரச்சினையாக இருந்தால், அதிமுகவையும் திமுகவையும் ஆதரித்து மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்திருக்கவே மாட்டார்கள். ஊழல் ஒரு பிரச்சினையாக தமிழ்நாட்டில் இல்லை, மக்கள் அதற்குப் பழகிப் போய்விட்டார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஊழலில் மக்களும் ஒரு பங்குதாரர்களாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதுதான் உண்மை. சமூகநீதி என்பது கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் கிடைத்துள்ளது. ஆனால், மத்திய அரசு பொறுப்புகளில் இன்னும் தமிழர்களுக்குச் சரியா சமூக நீதி கிடைக்கவில்லை.
திமுகவும் அதிமுகவும் சமூகநீதி பிரச்சினையில் உரிய உரிமையை வாங்கிக் கொடுத்துள்ளன. இருந்தாலும் ஊழல் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. அதை ஒழிக்க விஜய்யிடம் என்ன திட்டம் இருக்கிறது? அதை அவர் சொல்ல வேண்டாமா? தவெகவில் சுமார் 48 லட்சம் பேர் உறுப்பினராக இணைந்துள்ளதாகச் சொல்கிறார்கள். அப்படி என்றால் 12% வாக்காளர்கள். அதிலும் அதிகம் பேர் இளைஞர்கள்.
இதில் உள்ளவர்கள் எல்லோரும் விஜய் ரசிகர்கள். ஆனால், விஜய் வாக்காளர்கள் இல்லை. அதில், அதிமுக, திமுக, சீமான், காங்கிரஸ் எனப் பல கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் இருக்கிறார்கள். முன்பு விஜய் ரசிகராக இருந்து கொண்டு வேறு கட்சிக்கு வாக்களித்தவர்கள்தான் இவர்கள். இந்த 45 லட்சம் பேரும் நேரடியாக விஜய்க்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று வந்த புதியவர்கள் இல்லை.
விஜய் இன்னும் முழுமையாக அரசியலுக்கு வரவில்லை. ஒரு படத்தில் நடித்து வருகிறார். அது முடிந்ததும்தான் முழுநேர அரசியல். அதுவரை அவர் மனதில் உள்ள கொள்கைகளை, திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் யார் சேர்ப்பார்கள்? அவர் தேர்தலுக்கு முன்பு உள்ள காலகட்டத்தில் என்ன செய்ய இருக்கிறார்? அதற்கு வழிமுறைகள் என்ன? இவை எதிலும் தெளிவு கிடைக்கவில்லை.

மாற்றத்திற்காக வருகிறேன் என்கிறார் விஜய். அப்படித்தான் விஜயகாந்த் வந்தார். அப்படித்தான் கமல்ஹாசன் வந்தார். இப்போது சீமான் கூட அதைத்தான் பேசுகிறார். இருந்தும் மக்கள் ஏன் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை? சீமான் சொல்லாத கொள்கையா? அவரை ஏன் மக்கள் நம்பவில்லை? ஒரு கொள்கையைச் சொன்னால் அதைச் செய்ய முடியுமா? என மக்கள் பார்ப்பார்கள்? சொல்பவர் அதற்குத் தகுதி உள்ளவரா? அவரால் செய்து முடிக்க முடியுமா? என மக்கள் பார்ப்பார்கள். சும்மா ஆட்சியைக் கையில் கொடுத்துவிட மாட்டார்கள். திமுக, அதிமுகவை தாண்டி விஜய்க்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை அவர் சொல்ல வேண்டும். மக்களுக்குப் புரியவைக்க வேண்டும்?
அதிகாரிகள் சொல்வதை அப்படியே கேட்டு ஆட்சி நடத்த விஜய் எதற்கு? அதற்கு ஏற்கெனவே ஸ்டாலின் இருக்கிறாரே? அவரே ஐஏஎஸ் அதிகாரிகள் சொல்வதை மீறி ஒன்று செய்யமுடியவில்லை. அவரை வீழ்த்த நினைக்கும் விஜய்க்கு ஆட்சி நிர்வாகம் பற்றி என்ன தெரியும்? அவருக்குப் பாசிசம் பற்றிய சரியான புரிதல் இல்லையே? பாசிசமும் குடும்ப ஆட்சியும் ஒன்றா? பாசிசம் எப்படி ஜனநாயகத்தைச் சீர்குலைத்து வைத்துள்ளது. அரசு சுயேச்சை நிறுவனங்களை அது எப்படிக் கெடுத்து வைத்துள்ளது? தேர்தல் ஆணையத்தையே அது எப்படி முடக்கப் பார்க்கிறது? இவற்றைப் புரிந்து கொள்ளாமல் பாசிசம், பாயாசம் என்று பேசுகிறார்.
பாசிசம் என்பது ஒட்டுமொத்த மனிதக் குலத்திற்கே எதிரானது. அதை திமுகவுடன் ஒப்பிட்டு ஜஸ்ட் லைக் தட் என விஜய் கடந்து போவது சரியா? விஜய் மேடையில் சிறப்பாகப் பேசினார். அவர் கட்சிக் கொள்கைகள் ஏற்கெனவே இருப்பவைதான். இருந்தாலும் அவரது நிலைப்பாடு சரி. ஆனால், இவை மட்டுமே போதாது? எதிர்காலம் பற்றிய திட்டம் ஒன்றுமே இல்லை. அதைச் சரி செய்யவில்லை என்றால் கட்சி கமல் போலக் காணாமல் போய்விடும்.
கூத்தாடி என்று சொன்னார்கள் எனச் சொல்கிறார் விஜய். அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர் தங்களின் கொள்கைகளைப் பரப்ப வேண்டி சினிமாவுக்கு சென்றார்கள். விஜய் அப்படியா? இதுவரை டான்ஸ் ஆடினார். எண்டர்டெய்ன்மெண்ட் செய்தார். நல்ல கொள்கைகளை சினிமாவில் சொன்னார். அதுதான் அரசியலா?இப்போது விஜய் மாநாட்டுக்கு வந்த கூட்டம் சினிமா கவர்ச்சிக்காக வந்தது. அது அரசியல் விழிப்புணர்வால் வரவில்லை" என்கிறார்.












Click it and Unblock the Notifications