மீண்டும் மீண்டுமா? கரூரில் கால் வைக்கும் விஜய்! 3 நாட்களாய் முகாமிட்ட புள்ளிகள்! ரெடியாகும் மண்டபம்!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நாளை மறுநாள் கரூர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இறுதி கட்ட ஏற்பாடுகளில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மூன்று நாட்களாக கரூரிலேயே முகாமிட்டு இருக்கின்றனர் முக்கிய நிர்வாகிகள்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே கரூரை விட்டு வெளியேறிய விஜய் தனி விமானத்தில் சென்னை புறப்பட்டு சென்றார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் சம்பவம் தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் இரங்கல் பதிவை வெளியிட்டார்.

கரூர் விபத்து
முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் விஜய் பதிலளிக்கவில்லை. அதற்கு பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல தலைவர்களும் உடனடியாக கரூர் விரைந்தனர். இதேபோல பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கரூர் சென்றனர். ஆனால் சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்கு பிறகு தான் விஜய் வீடியோ பதிவையே வெளியிட்டார். இதற்கிடையே தமிழக அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகிகள் சிடிஆர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தது.
விஜய் அரசியல்
இதற்கிடையே சிபிஐ விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இதை அடுத்தே தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் வெளியே வர தொடங்கி இருக்கின்றனர். குறிப்பாக தலைமறைவாக இருந்ததாக சொல்லப்படும் புஸ்ஸி ஆனந்த் விஜய்யுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை வீடியோ கால் மூலம் சந்தித்து வந்த விஜய் அவர்களை நேரில் சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார். 14ஆம் தேதியான நேற்றே அவர் கரூர் செல்வார் என திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான அனுமதி பெறும் வேலைகள் தாமதமானதால் பங்கேற்கவில்லை.
விஜய் கரூர் வருகை
இந்த நிலையில் நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 17ஆம் தேதி விஜய் கரூர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ஒரு தனியார் திருமண மண்டபத்திடம் பேசப்பட்டுள்ளது. டிஜிபி இடம் அனுமதி கேட்கப்பட்ட நிலையில் கரூர் காவல்துறையை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதை அடுத்து கரூர் காவல்துறையிடம் அனுமதி பெறும் முயற்சியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு புறம் இருக்க நாளை மறுநாள் விஜய் வருவதை ஒட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் விஜய் வருவது உறுதியாகத் தெரியவில்லை.
விஜய் ஆறுதல்
கரூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில் மிகுந்த காயம் அடைந்தவர்களையும் வரவழைக்க விஜய் தரப்பு திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக அவர்களுக்கான தனியாக வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கரூர் அழைத்துவரப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி அருண்ராஜ் கரூரில் முகாமிட்டிருக்கும் நிலையில் மேலும் சில நிர்வாகிகளும் கரூர் விரைந்துள்ளனர். ஒருவேளை 17ஆம் தேதி விஜயால் வர முடியவில்லை என்றால் 20ஆம் தேதி வருவார் எனவும் சொல்லப்படுகிறது.
கரூர் காவல்துறை
இது ஒரு புறம் இருக்க விஜய் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க காவல்துறையினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. திருச்சி விமான நிலையத்திலிருந்து கரூர் வரை விஜய் செல்லும் வழியில் பாதுகாப்பு வழங்குவது கரூரிலிருந்து திருமண மண்டபத்திற்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து காவல்துறையினர் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. விஜய் வருகை தொடர்பாக பல்வேறு கேள்விகள், தவெக தரப்பிடம் எழுப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் இதுவரை விஜய் வருகை குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications