டிடிவியின் நள்ளிரவு ஆபரேஷன்! 200+ தொகுதி கன்ஃபார்ம்.. தெம்பில் விஜய்! விசிகவில் உருவான உள்குத்து!
சென்னை: தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சியமைக்க இன்னும் சில எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், ஒவ்வொரு மணி நேரமும் புதிய திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், அமமுக, அதிமுக, திமுக என அனைத்து தரப்பிலும் நடைபெறும் ரகசிய ஆலோசனைகள் அரசியல் வட்டாரத்தை அதிரவைத்துள்ளன. இந்நிலையில், தவெகவை ஆதரிக்க விசிக தலைவர் தொல் திருமாவளவனுக்கு கட்சிக்குள் நெருக்கடி அதிகரித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்ததன் மூலம் தவெக பலம் 113 ஆக உயர்ந்தது. பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு கடிதம் வழங்கியது.

இதனால் தவெகவின் எண்ணிக்கை 117 வரை சென்றது. ஆனால் விஜய் வென்ற 2 தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம், சபாநாயகர் உள்ளிட்டவை காரணமாக பெரும்பான்மைக்கு இன்னும் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு தேவைப்படும் நிலை தொடர்கிறது.
தமிழக வெற்றிக்கழகம்
இதனால், ஆளுநர் ஆர்.என். அர்லேகர் இதுவரை விஜய்யை ஆட்சியமைக்க அதிகாரப்பூர்வமாக அழைக்கவில்லை. "118 எம்.எல்.ஏ.க்களின் உறுதியான ஆதரவு அவசியம்" என்ற நிலைப்பாட்டை ஆளுநர் மாளிகை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால்தான் விஜய் மூன்று முறை ஆளுநரை சந்தித்தும் முடிவு எதுவும் வெளியாகவில்லை. இந்த சூழலில் விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் முடிவு மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
விசிக
விசிகவின் 2 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைத்தால், தவெக தரப்பு பெரும்பான்மையை நெருங்கும் சூழல் உருவாகும். ஆனால் இதில்தான் புதிய சிக்கல் எழுந்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வாக்கு விவரங்களை ஆய்வு செய்த விசிக நிர்வாகிகள், கடந்த முறை விசிகவுக்கு வாக்களித்த கணிசமான வாக்குகள் இந்த முறை தவெகவுக்கு மாறியிருப்பதை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணி
இதனால் கட்சிக்குள் இருவிதமான கருத்துகள் உருவாகியுள்ளன. "விஜய்யை எதிர்க்க முடியாது, அவருக்கு ஆதரவு கொடுத்தால் தான் எதிர்காலத்தில் கட்சி வளர்ச்சி இருக்கும்" என்று ஒரு தரப்பு வலியுறுத்துகிறது. மற்றொரு தரப்பு, "திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவது அரசியல் தற்கொலை" என்று எச்சரித்து வருகிறது. இதுவே திருமாவளவனுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிடிவி தினகரன்
இதற்கிடையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நடத்திய நள்ளிரவு அரசியல் ஆபரேசன் தமிழக அரசியலை மேலும் சூடுபிடிக்க வைத்தது. அமமுக எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ் ஆதரவு கடிதம் தொடர்பாக முதலில் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த தினகரன், பின்னர் அது போலி கடிதம் என கூறினார். ஆனால் அதற்கு பதிலடியாக தவெக தரப்பு வீடியோ வெளியிட்டு, "காமராஜ் தன்னிச்சையாகவே ஆதரவு கடிதம் கொடுத்தார்" என விளக்கம் அளித்தது.
குதிரை பேரம்
இதன் மூலம், தவெக மீது "குதிரை பேரம்" குற்றச்சாட்டு எழுப்பப்பட்டாலும், அதையே அரசியல் ஆயுதமாக மாற்ற முயற்சிக்கிறது விஜய் தரப்பு. "எங்களுக்கு யாரையும் வாங்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் ஆதரவு போதுமானது" என்ற நிலைப்பாட்டை தவெக வலியுறுத்தி வருகிறது. அதேநேரத்தில் அதிமுகவிலும் அமைதியான பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட சிலர் தனியாக நகர்கிறார்களா என்ற சந்தேகம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி
"தவெகவுக்கு ஆதரவு என்றால் அதிமுக சிதறும்" என்ற அச்சம் எடப்பாடி தரப்பில் நிலவுகிறது. இதனால் தான் எம்.எல்.ஏ.க்களை புதுச்சேரியில் தங்க வைத்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின்றன. இதற்கிடையில் திமுக தரப்பிலும் குழப்பம் குறையவில்லை. விஜய் ஒருமுறை ஆட்சியில் அமர்ந்துவிட்டால், எம்.ஜி.ஆர். போல நிரந்தர அரசியல் சக்தியாக மாறிவிடுவார் என்ற அச்சம் இளம் தலைவர்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் ஆட்சி
அதனால்தான், "விஜய் ஆட்சிக்கு வரக்கூடாது" என்ற அரசியல் கணக்கு பல்வேறு மட்டங்களில் ஓடுகிறது என தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் விஜய் தரப்பு மட்டும் தன்னம்பிக்கையுடன் உள்ளது. "மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். ஆட்சி அமையாவிட்டாலும் மீண்டும் தேர்தலை சந்திக்க தயார். அடுத்த முறை 200 இடங்களுக்கு மேல் வெல்வோம்" என்று விஜய் கட்சிக்குள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் முதல்வராவாரா?
இதனால், தமிழக அரசியல் அடுத்த 24 மணி நேரத்தில் எப்படி நகரும் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. விஜய் முதல்வராவாரா? திமுக-அதிமுக இணைவு சாத்தியமா? விசிக எந்த முடிவு எடுக்கும்? ஆளுநரின் அடுத்த நகர்வு என்ன? என்ற கேள்விகளுடன் தமிழக அரசியல் தற்போது திரில்லர் நிலைக்கு சென்றுள்ளது.












Click it and Unblock the Notifications