பெரம்பூரிலேயே பணம் இல்லை.. தொண்டர்கள் கலக்கம்? பிரச்சார களத்தில் தவெக சொதப்பல்கள்
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 233 தொகுதிகளில் தனித்து களம் கண்டுள்ள தவெக, தேர்தல் பிரச்சார களத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் சரியான போட்டியாக ஈடுகொடுத்து நிற்க முடியாமல் தவித்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம் இந்த 2026 தேர்தல் களத்தில் பலரும் எதிர்பார்க்காத விதமாகத் தனித்துவிடப்பட்டுள்ளது. விஜய், விக்கிரவாண்டி மாநாட்டில் தங்களது கட்சியுடன் சிலர் கூட்டணிக்கு நம்பி வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். அதிகாரப் பங்கு என அவர் வெளிப்படையாக அறிவித்தும் அந்த ஆஃபரை எந்தக் கட்சியும் தேர்வு செய்யவில்லை.

கடைசிக் கட்டமாக திமுக கூட்டணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகனின் தேர்வில்கூட விஜய் இடம் பெறவில்லை. அவரும் தனித்தே தமிழகம் முழுவதும் களம் காண்கிறார். திமுகவில் இடது இடதுசாரி கட்சிகள் மற்றும் மக்கள் நீதி மையம், தேமுதிக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக, காங்கிரஸ் , விசிக எனப் பெரிய பட்டியலே உள்ளது.
திருமாவளவன், பிரேமலதா, கமலஹாசன் முதல் வைகோ வரை தனித்தனியாக திமுக கூட்டணிக்கு வாக்குக் கேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிமுக அணியில் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் முதல் பிரதமர் மோடி வரை வாக்கு சேகரிப்பில் களம் ஆடி வருகின்றனர்.
இந்த இரண்டு பெரிய கட்சிகளைச் சமாளிக்கும் விதமாக தவெக என்ற புதிய கட்சி விஜய்யை மட்டுமே நம்பி இருக்கிறது.
அவரால் தமிழ்நாடு முழுவதும் முழுமையாகப் பிரச்சாரம் செய்யமுடியவில்லை. இவரைவிட வயதில் மூத்தவரான எடப்பாடி பழனிசாமி பட்டி தொட்டி முழுக்க பறந்து பறந்து பேசிவருகிறார். அதற்கு இணையாக மு.க.ஸ்டாலினும் உதயநிதியும் முழு வீச்சாகக் களமாடி வருகின்றனர்.
இப்படி அரசியல் அனுபவம் மிக்க பெரிய முதலைகள் உலாவும் தேர்தல் களத்தில் தனியாக நின்று விஜய் பிரச்சாரம் செய்கிறார்.
ஆனால், 233 தொகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள தவெக வேட்பாளர்களுக்கு விஜய்யின் பங்களிப்பு போதுமானதாக இல்லை என்பதே களம் சொல்லும் உண்மையாக உள்ளது. மேலும், விஜய்யினால், தொடர்ந்து ஒரு மணிநேரம் பேச முடியவில்லை. 4 வரிகளை மனப்பாடம் செய்து அதையே போகும் இடங்களில் எல்லாம் சினிமா வசனம் போல் பேசுகிறார். அதைக் கேட்டு அவரது ரசிகர்கள் உற்சாகம் பெறுகிறார்கள்.
அவரது பேச்சு பொதுவாக்காதோர்களுக்குச் சரியான தீனி போடவில்லை. அதை அவரால் இதுவரை இட்டு நிரப்ப முடியவில்லை. விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் கூட அவரது கட்சியினரால் ஆளும் கட்சியான திமுகவுக்கும் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் இணையாக ஈடுகொடுத்து பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியாமல் தவெகவினர் திணறுகின்றனர்.
கோயமுத்தூர் கொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி தீவிர பிரச்சாரம் செய்துவருகிறார். அனைத்து தரப்பையும் அதிமுக திமுக வேட்பாளர்கள் இங்கே சென்று சேர்ந்துள்ளனர். தவெக வேட்பாளர் கே.பி.ஆர் சதீஷ் தனக்கான பிரச்சாரத்திற்கு 10 நபர்களை ஒருங்கிணைக்கவே முடியாமல் தண்ணீர் குடித்து வருகிறார்.
சூலூரில் ஒரு காய்கறி வியாபாரி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் தவெக வேட்பாளர் திணறினார். அது மக்கள் மத்தியில் பின்னடைவை உண்டாகியுள்ளது. விஜய்யின் 5 நிமிட பிரச்சாரத்திற்குக் கூட்டம் கூடுகிறது. அவர் போன பிற்பாடும் ஒவ்வொரு தொகுதியில் உள்ள தவெக வேட்பாளர்களின் பிரச்சாரத்திற்கு அதே அளவு செல்வாக்கு உள்ளதா என்றால், பல தொகுதிகளில் இல்லை என்றே சொல்ல வேண்டி உள்ளது.
விஜய்யின் கட்சியினர் ஒரு திரைப்பட ரிலீசுக்கு அளிக்கும் முக்கியத்துவம் என்பது வேறு. அது முதல் நாள் முதல் காட்சியுடன் முடிந்துவிடும் விசயம். ஆனால், தேர்தல் களம் என்பது கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தொடர்ந்து பணி செய்யவேண்டும். மக்களை தினம் தினம் தன்வயப்படுத்த வேண்டும். அதில், தவெக வேட்பாளர்கள் யாரும் சோபிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூட, தொகுதியில் நின்று ஆடவில்லை. அவர் ஊடகங்களைப் பார்த்தாலே தெறித்து ஓடுகிறார்.
நேற்று தி நகரில் விஜய்யின் பிரச்சாரம் மற்ற இடங்களை ஒப்பிடும்போது பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றே பலரும் சமூக வலைத்தளங்களில் எழுதி வருகிறார்கள். ஒரு தலைவராக விஜய்யின் பங்களிப்பை மீறி, தனி ஒரு வேட்பாளராக அவரவர் தனித்து ஆட வேண்டும். அதற்கு வியூகம் வகுத்துச் செயல்பட வேண்டும். அப்படி 233 தொகுதியில் வேகமாகச் செயல்படும் தவெக வேட்பாளர்கள் மிகமிக குறைவு. விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இதை வைத்து ஆட்சியைப் பிடிக்கமுடியுமா? என்பது சந்தேகம் தான். அரசியல் அலை விஜய் பக்கம் உள்ளது. அது இளைஞர்களின் அலைதான். மக்களின் அலை என்று அதைக் கூட முடியாது. சென்னை எழும்பூரில் தவெக நட்சத்திர வேட்பாளர் ராஜ் மோகன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யும் தொண்டர்கள் சூளை அனந்த கிருஷ்ணன் தெருவில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.
அங்குள்ள பலர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்குத் தமிழ்நாட்டில் வாக்குகளே இல்லை. இந்த நிலையில் உள்ளது பிரச்சாரம்.
மக்களை அறிந்து, தொகுதி எல்லைகளை உணர்ந்து தவெக பிரச்சாரம் செய்யவில்லை. யாரோ தேர்தல் வியூக வகுப்பாளர்களின் வழிகாட்டுதலை அல்லது அட்டவணையை வைத்து பிரச்சாரத்தைச் சொதப்பலாகச் செய்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.
ஆனால், திமுகவும் அதிமுகவும் முறையாக வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு வீடு வீடாகப் போய் வாக்குச் சேகரிப்பில் முழு வீச்சாக இறங்கி வேலை செய்கிறார்கள். டிவிகேவில் முறையான பேச்சாளர்களும் இல்லை. தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என்பதே தவெகவுக்கு எட்டாத கனியாக உள்ளது.
தவெக வேட்பாளர்கள் கிராமப்புறங்களில் முழுதாக இறங்கி வேலை செய்யவில்லை. வெறும் விசிலை ஊதிக்கொண்டு வாக்குக் கேட்கிறார்கள். திட்டமிடல் முறையாக இல்லை. இதைவிட எல்லாம் நம்ப முடியாத ஒரு தகவல். விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் தவெகவினர் பிரச்சாரம் செய்ய போதிய நிதி கிடைக்காமல் தவிக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
ஆங்கில ஊடகத்திற்குப் பேட்டி அளித்துள்ள வியாசர்பாடி தவெக தேர்தல் பணியாளர் முதலில் தினம் சாப்பாட்டுச் செலவுக்காக 500 முதல் 1000 வரை செலவுக்கு அளித்து வந்த நிலையில், கடந்த ஒருவாரமாக நிதி முறையாகப் பகிரப்படவில்லை என்று கூறியுள்ளார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகள் தேர்தல் களத்தைக் கரைத்துக் குடித்துவிட்டு வேலைப் பார்க்கும் சூழலில் மூன்று வயதுக் குழந்தையான தவெக, களத்தில் பரிதாபகரமாக உள்ளது என்பதே முக்கிய செய்தியாகியுள்ளது.
-கடற்கரய்












Click it and Unblock the Notifications