கரூரில் பேசிக் கொண்டிருந்த போதே மயங்கிய மக்கள்! என்னாச்சுனு கேட்டு, வாட்டர் கேன்களை வீசிய விஜய்!
சென்னை: கரூரில் தவெகவின் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போதே மயங்கி விழுந்த நபர்களுக்கு மேலே இருந்தபடியே விஜய், வாட்டர்கேன்களை தூக்கி வீசியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து பின்னாலேயே ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து மயங்கியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
நாமக்கல்லில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு வந்திருந்த விஜய், தனது பிரச்சார பேருந்து மீது ஏறி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது சிலர் மயங்கி விழுந்தனர். உடனே விஜய் அவர்களுக்கு என்ன ஆச்சு என கேட்டுள்ளார்.

அங்கிருந்தவர்கள் மயங்கிவிட்டார்கள் என சொன்னதும் வாட்டர்கேன்களை விஜய் தூக்கி போட்டதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்திலேயே ஆம்புலன்ஸ் வாகனம் வந்துவிட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 36 பேர் பலியாகிவிட்டனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கரூரில் இருந்து திருச்சி விமான நிலையம் சென்ற விஜய்யை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளிக்காமல் அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார்.
இது தொண்டர்கள் பலருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர், குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர், தமிழக ஆளுநர் உள்ளிட்டோர் ட்வீட் போட்டு ஆறுதல்களை தெரிவித்து வரும் நிலையில் இப்படி பொறுப்பே இல்லாமல் விஜய் செய்தியாளர்கள் சந்திப்பை கடந்து போவது என்னவென சொல்வது? என கேட்கிறார்கள்.
இந்த கரூர் துயரச் சம்பவத்தை விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் இன்று இரவே கரூர் செல்கிறார். அது போல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோரும் செல்கிறார்கள்.
இதுகுறித்து ரஜினிகாந்த் இரங்கல் செய்தியில் கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள் என தெரிவித்துள்ளார்.

அது போல் எம்பியும் நடிகருமான கமல்ஹாசன் தனது இரங்கல் செய்தியில் நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன்.
நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications