வெளிநாட்டு பயணம்.. விஜய் கேள்வி கேட்ட சில நிமிடங்களில்.. வெளியான முதல்வர் ஸ்டாலினின் விளக்கம்!
சென்னை: தவெக தலைவர் விஜய் முதல்வர் ஸ்டாலினின் வெளிநாடு பயணம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினின் வெளிநாடு பயணம் குறித்த விளக்கம் வீடியோவாக வெளியாகி இருக்கிறது. அதில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமிழ்நாடு குறித்தும், அதன் கட்டமைப்பு குறித்தும் வியந்ததாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
அண்மையில் முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து வந்தார். இந்த சுற்றுப்பயணத்தில் மட்டும் ரூ.15.56 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜெர்மன் நிறுவனங்களுடன் ரூ.7,020 கோடி மதிப்பிலான 26 ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

அதேபோல் பிரிட்டனைச் சேர்ந்த 7 நிறுவனங்களுடன் ரூ.8,496 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலமாக மொத்தம் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நாகையில் மக்களை சந்தித்த தவெக தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலினின் வெளிநாடு பயணம் குறித்து சாடி இருந்தார்.
அது வெளிநாட்டு முதலீடா அல்லது வெளிநாடுகளில் முதலீடா என்று விஜய் கேள்வி எழுப்பி இருந்தார். திமுக குடும்பத்தின் சொத்துக்கள் முதலீடாக வெளிநாடுகளுக்கு செல்கிறதா என்ற சந்தேகத்தையும் வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் உங்களில் ஒருவன் வீடியோ மூலமாக வெளிநாடுகளில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில் ஸ்டாலின் பேசுகையில், ஜெர்மனியில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டின் கட்டமைப்பு, படித்த இளைஞர்களின் திறன், அவர்களின் திறன் மேம்பாடு உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்தோம். அதனை அறிந்த முதலீட்டாளர்கள் வியந்து போய்விட்டார்கள். ஜெர்மனியில் அவர்கள் எனக்கு கொடுத்து மரியாதையின் மூலமாகவே, தமிழ்நாடு மீது அவர்கள் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிகளவில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருப்பதை பெருமையாக கூறினார்கள். அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை கொண்டு செல்வதையும், புதிதாக வளர்ந்து வரும் துறைகளின் மீதான கவனம் குறித்தும் அவர்கள் பாராட்டினார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் முதலீடு செய்ய ஆர்வமாய் இருக்கிறார்கள். இந்த மாற்றத்தையும், வளர்ச்சியையும் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறேன்.
அதேபோல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான பல்கலைக்கழகம். பல்வேறு நாடுகளில் இருந்து வந்த பேராசிரியர்கள், மாணவர்கள் முன் பெரியாரின் சிலையை திறந்து வைத்து பேசியது மெய் சிலிர்த்தது. ஜெர்மனியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை சந்தித்த போது, இடஒதுக்கீட்டில் படித்து முன்னேறி தான் வெளிநாடு வந்ததாக கூறினார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications