காத்திருந்து காத்திருந்து.. நேரம் தான் நல்லா இருக்கு! வர்றாங்க விஜயதாரணி..நயினாரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸில் மிகப் பிரபலமாக இருந்த விஜயதரணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார் விஜயதரணி. அமித்ஷாவையே சந்தித்து பேசும் அளவுக்கு செல்வாக்கு இருந்தும் பல ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டது போல இருந்தார். இந்த நிலையில் தற்போது தமிழக பாஜக துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அண்ணாமலையால் ஓரங்கட்டப்பட்டிருந்த விஜயதரணிக்கு தலைமையிடம் பேசி பதவி கொடுத்தது நயினார் நாகேந்திரன் தான் என்கின்றனர் பாஜகவினர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதாரணி தொடர்ந்து மூன்று முறை கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விளவங்கோடு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி நிலையில் திடீரென அவர் பாஜகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த அவர் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற போது தனக்கு சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் செல்வப்பெருந்தகை அந்த இடத்தை பிடித்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியையும் அவர் குறி வைத்து காய்களை நகர்த்தி வந்தார். சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் பதவி செல்வபெருந்தகைக்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கேஎஸ் அழகிரி வசம் இருந்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியும் செல்வப் பெருந்தகைக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் தமிழக சட்டமன்ற குழு தலைவர் பதவி ராஜேஷ்குமாருக்கு வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என எதிர்பார்த்தார் விஜயதாரணி.
ஆனால் காங்கிரஸ் தலைமை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி மீது கடுமையான கோபத்தில் இருந்த விஜயதாரணி குறித்து அறிந்து கொண்டனர் பாஜக தலைவர்கள். இதை அடுத்து அவரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் இணைய வைத்தனர். இதற்காக பல நாட்கள் டெல்லியில் முகாமிட்டிருந்த விஜயதாரணி ஒரு வழியாக பாஜகவில் இணைந்தார். கன்னியாகுமரி தொகுதியில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வரும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அந்த சீட்டு வழங்கப்பட்டது.
கட்சியின் சீனியரான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கன்னியாகுமரியில் தனி செல்வாக்கு இருக்கிறது. கடந்த 2014 மக்களவை தேர்தலில் தமிழக முழுவதும் அதிமுக பெருவெற்றி வெற்ற நிலையில் கன்னியாகுமரியில் வெற்றி பெற்றதற்கு காரணம் பொன் ராதாகிருஷ்ணன் என்ற தனிப்பட்ட நபரின் இமேஜ் தான் என தேசிய தலைமை நம்பியதால் அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இந்நிலையில் 2024 தேர்தலிலும் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட்டார். நாடாளுமன்ற எம்பி சீட்டு கிடைக்கும் என காத்திருந்த விஜயதாரணிக்கு அதிர்ச்சியே கிடைத்தது.
அதை தொடர்ந்து விளவங்கோடு சட்டசபை தேர்தலும் நடைபெற இருப்பதால் எம்எல்ஏ செட் விஜயதாரணிக்கு வழங்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனாலும் அதிலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மூன்று முறை எம்எல்ஏவாக இருந்து இரண்டு வருட கால பதவியை விட்டுவிட்டு பாஜகவில் சேர்ந்தும் தனக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்பதால் மிகுந்த அதிருப்தியில் இருந்தார் விஜயதரணி. மக்களவைத் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய வந்த அமித்ஷாவை நேரில் சந்தித்து தனது பிரச்சனைகளை எடுத்துக் கூறினார்.
இருந்த போதும் விஜயதாரணிக்கு எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை. அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை தன்னைத் தவிர கட்சியில் வேறு யாரும் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக சில நிர்வாகிகளை ஓரங்கட்டியதாக புகார் எழுந்த நிலையில் அதில் விஜயதாரணியம் ஒருவர் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் மாற்றப்பட்ட நிலையில் 2026 மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு அதிரடி மாற்றங்களை அரங்கேற்றி வருகிறார்.
குறிப்பாக கட்சியில் இருக்கும் சீனியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் கட்சியில் புதிதாக பலரையும் கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார். அந்த வகையில் நடிகை மீனா தமிழக பாஜகவில் இணைய இருப்பதாக சொல்லப்படும் நிலையில் ஏற்கனவே கட்சியில் இருக்கும் நிர்வாகிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் சரத்குமார், ராதிகா, விஜயதரணி உள்ளிட்டவர்களுக்கு துணைத்தலைவர் அந்தஸ்திலான பதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இணையாக செல்வாக்கு இருக்கும் விஜயதரணியை முன்னிலைப்படுத்தும் வகையில் அவருக்கு மாநில பொறுப்பு வழங்கப்படும் என்கின்றனர். அண்ணாமலையின் கடும் எதிர்ப்பையும் மீறி நயினார் நாகேந்திரன் மற்றொரு நிர்வாகிக்கும் பதவி பெற முயற்சித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications