விஜய் விஷயத்தில் ட்விஸ்ட்! காங்கிரஸ்+கம்யூனிஸ்ட்டுகள் இணைவது சாத்தியமா? திருமாவளவன் சொன்ன விளக்கம்
சென்னை: விஜய் தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகளை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி விஜய் உடன் இருக்கிறது. கூட்டணிக்கு போனால்.. கேரளாவில் காங்கிரஸை எதிர்த்துவிட்டு.. இங்க மட்டும் கூட்டணியா? என்கிற கேள்வி எழும். எனவே இந்த கூட்டணி சாத்தியமா? என்று சந்தேகம் இருந்தது. இந்நிலையில் இது குறித்து திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
விஜய் இந்த சட்டமன்ற தேர்தலில் நடத்திக்காட்டிய மேஜிக் அதிமுக மற்றும் திமுக கட்சிகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. என்னதான் விஜய் பெரிய கட்சியாக வளர்ந்திருந்தாலும், தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு வளரவில்லை. எனவே கூட்டணி கட்சிகளை எதிர்பார்த்து தவெக காத்திருக்கிறது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், கூட்டணிக்கு முதல் ஆளாய் வந்து சேர்ந்தது காங்கிரஸ். தொக்காக 5 எம்எல்ஏக்களையும் கூட்டி வந்து, ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தது. இருப்பினும் இன்னும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே விஜய் முதலமைச்சராக முடியும். எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை விஜய் தரப்பு நாடியிருக்கிறது.
ஆதரவு கேட்பதெல்லலாம் தப்பு இல்லை. ஆனால், இதில் சில கூட்டணி சிக்கல்கள் இருப்பதாக பேசப்பட்டு வருகின்றன. விஜய் உடன் காங்கிரஸ் ஏற்கெனவே சேர்ந்திருக்கிறது. இந்த கூட்டணியில் சிபிஐ மற்றும் சிபிஎம் சேர்ந்தால் எப்படி சரியாக இருக்கும். கேரளாவில் காங்கிரஸை எதிர்த்துவிட்டு இங்கு வந்து, காங்கிரஸ் அங்கம் பெரும் கூட்டணியில் எப்படி இணைய முடியும்? என்பதே கேள்வியாக இருந்தது.
ஆனால், இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். "கடந்த காலங்களில் காங்கிரஸுடன் இணைந்துதான் கம்யூனிஸ்ட்டுகள் தமிழகத்தில் பயணித்திருந்தனர். இந்தியா கூட்டணியில், கடந்த ஆட்சியில் காங்கிரஸுடன் இணைந்துதான் அவர்கள் பயணித்திருந்தனர்.
இருப்பினும் தமிழ்நாட்டில் அரசியல் நிலைப்பாடு என்பது வேறு.. பிற மாநிலங்களில் கையாளும் அரசியல் நிலைப்பாடு என்பது வேறு. அந்த வகையில் இந்த கூட்டணி விவகாரம் குறித்து கட்சியின் மாநில மற்றும் மாநில செயற்குழுவில் பேசி முடிவெடுப்பதாக இடதுசாரிகள் அறிவித்திருக்கின்றனர். ஆகவே அவர்களோடு எங்கள் தோழமை தொடரும் வரையில், இணைந்து முடிவெடுப்பதை நாங்கள் விரும்புகிறோம்" என்று கூறியிருக்கிறார்.
விஜய்யின் தேவை என்ன?
விஜய்யை பொறுத்தவரை, அவரது தமிழக வெற்றிக் கழகம் கட்சி 108 இடங்களில் ஜெயித்திருக்கிறது. விஜய் இரண்டு இடங்களில் போட்டியிட்டு ஜெயித்திருக்கிறார் என்பதால், ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டி வரும். அப்படி பார்த்தால் மொத்தம் 107 இடங்கள்தான். காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களின் ஆதரவை தெரிவித்திருக்கிறது. மொத்தமாக பார்த்தால் 112 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். ஆனால் 118 எம்எல்ஏக்கள் இருந்தால்தான் ஆட்சி அமைக்க முடியும்.
எனவேதான் விஜய் தரப்பு விசிக, சிபிஎம், சிபிஐ கட்சிகளை அணுகியிருக்கிறது. இந்த கட்சிகளிடம் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது. இது கிடைத்தால் விஜய்தான் முதலமைச்சர்.


Click it and Unblock the Notifications
