பரந்தூரால் கிடைத்த பாஸிட்டிவ் ரெஸ்பான்ஸ்! விஜய் செம ஹாப்பியாம்! அடுத்து என்ன?
சென்னை: கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக கள அரசியலுக்கு வந்த விஜய் நேற்று பரந்தூரில் விமான நிலையத்திற்கு எதிராக போராடிய மக்களை சந்தித்தார். இந்த நிலையில் விஜயின் வருகைக்கு கிடைத்த பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் தமிழக வெற்றிக் கழகத்தினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை அடுத்து வேங்கைவயல், அரிட்டாபட்டி என அடுத்தடுத்து பல்வேறு பகுதிகளுக்கு விஜய் பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதாக மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளது. மேலும் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 12 கிராமங்களில் சுமார் 5ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது.

குறிப்பாக பரந்தூர், ஏகனாபுரம், அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம் , நாகப்பட்டு, நெல்வாய், மகா தேவி மங்கலம், உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் நீர்நிலை பகுதிகளையும் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 910 நாட்களுக்கு மேலாக விமான நிலையத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை சந்திக்கிறார் என அறிவிக்கப்பட்டதோடு அதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வந்த நிலையில், நேற்று பல்வேறு கட்டுப்பாடுகளுக்கிடையே விஜய் மக்களை சந்தித்தார்.
தொடர்ந்து கேரவனில் வந்த அவருக்கு பூங்கொத்து கொடுத்து, பச்சைத் துண்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் துண்டை கொடுத்து வரவேற்பளித்தனர். தொடர்ந்து அந்த வாகனத்தில் நின்றபடியே அப்பகுதி மக்கள், தொண்டர்களிடையே பேசினார் விஜய். தனது முதல் மாநாட்டைப் போலவே, கள அரசியல் நிகழ்ச்சியிலும் நேரடியாக பாஜக, திமுகவை விமர்சித்துப் பேசினார் விஜய். குறிப்பாக பரந்தூர் விமான நிலைய பணிகளை ஏதோ ஒரு காரணத்திற்காக தான் ஆட்சியாளர்கள் செய்கிறார்கள் என விஜய் பேசியது ஆளும் கட்சியை கொந்தளிக்க வைத்துள்ளது.
வழக்கம் போலவே அமைச்சர்கள், திமுகவினர் விஜயை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இன்று செய்தியாளர்களை சந்தித்த பெரும்பாலான அமைச்சர்கள் விஜய் குறித்து பேசி இருக்கின்றனர். நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் விஜய் குறித்த பேச்சு தான் இருந்தது. 910 நாட்களுக்கு மேலாக பரந்தூர் மக்கள் போராடி வரும் நிலையில் அவ்வளவாக கிடைக்காத ஊடக வெளிச்சம், நேற்று ஒரே நாளில் கிடைத்தது. உள்ளூர் சேனல் தொடங்கி நேஷனல் சேனல்கள் வரை பரந்தூரில் குவிந்திருந்தன.
இதனால் பரந்தூர் மக்கள் போராட்டம் குறித்து இளைஞர்கள் அதிக அளவில் தேடத் தொடங்கி இருக்கின்றனர். வட இந்திய ஊடகங்களும் விஜய்யின் வருகை காரணமாக இந்த விவகாரம் குறித்து பேச ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் நேற்று அனைத்து தொலைக் காட்சிகளிலும் விஜயின் பரந்தூர் வருகை குறித்த பேச்சு தான் விவாதமாக இருந்தது. இதனால் மிகவும் உற்சாகம் அடைந்திருக்கிறது விஜய் தரப்பு. முதல் கள அரசியல் பயணம் வெற்றிகரமாக அமைந்ததால் அடுத்தடுத்து கள அரசியல் பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் விஜய்.
குறிப்பாக நீண்ட நாட்களாக குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருக்கும் வேங்கை வயல் சம்பவம், மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக போராடிவரும் மக்கள் ஆகியோரை சந்திக்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார். இதனால் அடுத்தடுத்து விஜயின் கள அரசியல் பயணம் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டு அனிதா, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை விஜய் நேரில் சென்று விஜய் ஆறுதல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
