இவர்தான் அடுத்த சுகாதாரத்துறை அமைச்சரா? யாருக்கெல்லாம் பதவி? அசர வைக்கும் புதிய அமைச்சரவை இதுதானா?
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டால் என்ன மாதிரியான மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுக உள் வட்டாரங்களில் இருந்து அமைச்சரவை மாற்றம் தொடர்பான முக்கியமான சில தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வரும் நிலையில் 3 புதிய அமைச்சர்கள் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதன்படி டி.ஆர்.பி போன்ற புதிய முகங்களை அமைச்சரவையில் பார்க்க முடியும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிஆர்பி ராஜா, தமிழரசி, டாக்டர் எழிலன் ஆகியோர் அமைச்சரவையில் இடம் பெற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆவடி நாசர், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உட்பட குறைந்தது 3 அமைச்சர்கள் நீக்கப்படலாம். இவர்கள் மோசமான செயல்பாடு காரணமாக அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், உள்ளாட்சி நிர்வாகம், நிதி, தொழில்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளுக்கு அமைச்சர்கள் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போதுள்ள சில அமைச்சர்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது.
பி.டி.ஆருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அவருக்குப் பதிலாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் திமுக உயர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பிடிஆர் அமைச்சரவை மாற்றம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதுபோக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறைக்கு மாற்றப்பட்டு, சட்டம் மற்றும் நீதிமன்றங்களை வகித்து வரும் எஸ்.ரெகுபதி, தொழில்துறை அமைச்சராக வர வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
அதேபோல், மா. சுப்பிரமணியன் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் இருந்து மாற்றப்பட்டு, நகராட்சி நிர்வாக அமைச்சராக பதவியேற்க வாய்ப்பு உள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ டாக்டர் எழிலன் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பதவியேற்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அமைச்சரவையில் மூத்தவர்களில் ஒருவராக உள்ள கே.என். நேரு வருவாய் நிர்வாகம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக கயல்விழிக்கு பதிலாக மானாமதுரை தொகுதி எம்எல்ஏ ஏ.தமிழரசி நியமிக்கப்பட உள்ளார் என்றும் திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்போது மாற்றம்?
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில்தான் முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை முன்னிட்டு இன்று அல்லது நாளை அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் கையில் அமைச்சர்கள் குறித்த பர்பார்மன்ஸ் ரிப்போர்ட் உள்ளது. பொதுவாக அமைச்சர்களின் செயல்பாடுகள், குறைகள் பற்றி ரிப்போர்ட் முதல்வர் கைக்கு குறிப்பிட்ட மாத இடைவெளியில் செல்வது வழக்கம். எல்லா மாநிலங்களிலும் இது வழக்கத்தில் உள்ளது.
அந்த வகையில் தமிழ்நாடு அமைச்சர்கள் பற்றிய ரிப்போர்ட்டை வைத்து அமைச்சர்களின் நிறை, குறைகளை முதல்வர் ஸ்டாலின் பேச உள்ளார் என்று கூறப்படுகிறது. சில அமைச்சர்களுக்கு டோஸ் விடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications