வேட்டையை தொடங்கிய திமுக அரசு.. பாஜக எஸ்ஜி சூர்யாவுக்கு சிக்கல்! 153(A) -என்னென்ன பிரிவு பாத்தீங்களா?
சென்னை: பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவர் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. என்னென்ன பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். விரிவாக பார்ப்போம்.
பாஜக மாநில செயலாளராக இருப்பவர் எஸ்ஜி சூர்யா. சமூக வலைதளங்கள் தீவிரமாக செயல்பட்டு வரும் இவர், திமுக, இடதுசாரிகள் என எதிர்க்கட்சிகளையும் தமிழ்நாடு அரசையும் தொடர்ந்து விமர்சித்து பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு வெங்கடேசனை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில், "கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் பறிபோன தூய்மை பணியாளர் உயிர் - கள்ள மௌனம் காக்கும் புரச்சீ போராளி மதுரை எம்.பி சு.வெங்கடேசன்!
புரச்சீ போராளி, விளம்பர அரசியல் பிரியர் மதுரை எம்.பி திரு.சு வெங்கடேசன் அவர்களுக்கு வணக்கம்! மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12-வது வார்டு உறுப்பினர் விசுவநாதன், மலம் கலந்த நீரில் இறங்கி கட்டாயப்படுத்தி வேலை செய்ய சொன்னதன் காரணமாக உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று பின்னர் சிகிச்சை பலனின்றி தூய்மை பணியாளர் ஒருவர் இறந்து உள்ளார்.
சட்டப்படி குற்றம் என தெரிந்தும் அந்த பாவப்பட்ட தூய்மை பணியாளரை அந்த கழிவு நீர் கால்வாயில் இறங்கி வேலை செய்ய சொன்னது உங்கள் சக தோழர், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் விசுவநாதன் தான். இறந்தவர் பட்டியலின சகோதரர். எங்கே உங்கள் செங்கொடி? எங்கே உங்கள் போராட்ட குணம்? எங்கே உங்கள் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள்?
ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக என்றால் உடனே முந்திக் கொண்டு வருவீர்கள், இப்பொழுது எங்கே சென்று விட்டீர்கள்? பதுங்கி விட்டீர்களா? அல்ல பம்மி விட்டீர்களா? ஏன் உங்களது செங்கொடி உங்கள் சக தோழர்களுக்கு எதிராக ஏறாதா? அல்லது உங்கள் செங்கொடி பட்டியலின சமுதாய சகோதரர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கி போராடாதா?
பிரிவினைவாதம் பேசி சிவப்பு கொடியை போர்த்திக் கொண்டு அரசியல் செய்யும் உங்கள் போலி அரசியல் அந்த மலக்குழியை விட மோசமாக துர்நாற்றம் வீசுகிறது. மனிதனாக வாழ வழி தேடுங்கள் தோழரே!" என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும், மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியே இல்லை என்றும் சமூக வலைதளங்களில் அவருக்கு பலர் பதிலளித்தனர்.

இது தொடர்பாக சு வெங்கடேசன் காவல் நிலையத்தில் புகாரளித்து இருந்தார். இந்த நிலையில் சென்னையில் இருந்த எஸ்ஜி சூர்யாவை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர் மீது 153 (A), 505 (1) (B), 504, 505(1)(C), 66(D) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 153 (A) பிரிவு என்பது இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துவதற்காக பதியப்படுவதாகும். இதில் கைது செய்யப்படுபவருக்கு ஜாமீன் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது கைதுக்கு தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, எச் ராஜா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications