44-வது செஸ் ஒலிம்பியாட்! ஹைலைட்ஸ் என்னென்ன? வெளிச்சத்துக்கு வராத ருசிகர தகவல்கள் இதோ!
சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியால் அந்த நகரமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
187 நாடுகளில் இருந்து வீரர்கள், பார்வையாளர்கள் தமிழகம் வருகை தரவுள்ளதால் முன்னேற்பாடு பணிகள் அசுர வேகத்தில் நடந்து வருகிறது.
இதனிடையே செஸ் ஒலிம்பியாட் பற்றி நீங்க அறியாத ருசிகர தகவல்கள் வருமாறு;

செஸ் போட்டி
*44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்த 23 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
*மாவட்ட ஆட்சியர்களுடன் ஒருங்கிணைந்து, மாவட்டங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட திட்டம்.
*24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைத்து விளையாட்டு வீரர்களுக்கும், அமைப்பாளர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாக வழங்க நடவடிக்கை.

டிஜிட்டல் போர்டு
*சர்வதேச செஸ் விளையாட்டு போட்டிகளை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் போட்டி நடைபெறும் அரங்குகளில் டிஜிட்டல் போர்டுகளை வைக்கச் சொல்லியுள்ளார் முதல்வர்.
*பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில், 52,000 சதுர அடியில் சதுரங்க விளையாட்டு வீரர்கள் விளையாடுவதற்காக நவீன உள் விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.
*44வது சர்வதேச சதுரங்கப் போட்டி, பல்லவர் காலச் சிற்பக் கலையினை பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெற உள்ளது.

187 நாடுகள்
*செஸ் ஒலிம்பியாட்டில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
*தமிழ்நாட்டிற்கு வருகை தரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வரவேற்க மிகச் சிறப்பான ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
*வெளிநாடுகளிலிருந்து வருகின்ற வீரர்கள், பத்திரிகையாளர்கள், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பினர் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய நட்சத்திர விடுதிகளில் 2,000 அறைகள் முன் பதிவு.

தொடக்க விழா
*சர்வதேச சதுரங்க போட்டிக்கான தொடக்க விழா மிகப் பிரம்மாண்டமாக சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் 28.7.2022 அன்று நடைபெற உள்ளது.
*இத்தொடக்க விழாவில், தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை உலக மக்கள் அனைவரும் அறியும் வகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு.

ஒலிம்பியாட் தீபம்
*செஸ் ஒலிம்பியாட் போட்டியினை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு 92 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது.
*44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு ஜூன் 19-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்து கொண்டு ஒலிம்பியாட் தீபத்தினை ஏற்றி வைத்து, தீபச்சுடர் ஓட்டத்தினை தொடங்கி வைத்தார்.
*இந்த ஒலிம்பியாட் தீபம் நாற்பது நாட்களில் இந்தியாவில் 26 மாநிலங்களில் உள்ள 75 நகரங்களில் பயணித்து இறுதியாக மாமல்லபுரம் வந்தடைய உள்ளது.












Click it and Unblock the Notifications