சட்டென மாறிய முகம்.. "விஜய் அரசியல்!" அந்த ஒரு கேள்விக்கு புஸ்ஸி ஆனந்த் சொன்ன பதிலை பாருங்க
சென்னை: விஜய் மக்கள் மன்ற நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் டெல்லியில் இருந்து சென்னைக்குத் திரும்பிய நிலையில், செய்தியாளர்களிடம் அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
நடிகர் விஜய் கட்சியை ஆரம்பிக்கப் போவதாகக் கடந்த சில ஆண்டுகளாகவே பேச்சு இருந்து வந்தது. அவரது செயல்பாடுகளும் அதை நோக்கியே இருந்தது. பணமதிப்பு நீக்கம் தொடங்கி ஜல்லிக்கட்டு வரை பொது விவகாரங்களிலும் அவர் தொடர்ந்து கருத்துகளைச் சொல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்,

அது மட்டுமின்றி தொகுதி வாரியாக அதிக மார்க் எடுத்த மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்குவது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் என்று சமீப காலங்களில் அவரது நடவடிக்கைகள் தீவிரமானது.
தமிழக வெற்றி கழகம்: இதற்கிடையே நேற்றைய தினம் அவரது அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது. தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் கட்சியைத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த பெயரில் கட்சியைப் பதிவு செய்ய விஜய் மக்கள் மன்ற நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் டெல்லி சென்றிருந்தார். அங்கே தேர்தல் ஆணையத்தில் சென்று அவர் கட்சியைப் பதிவு செய்தார்.
அப்போது விஜய் தரப்பில் இருந்து அறிக்கையும் வெளியானது. அதில் அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டும் நடித்து முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இப்போது வெங்கட்பிரபுவின் GOAT படத்தில் அவர் நடித்து வரும் நிலையில், அதன் பிறகு ஒரு படத்தில் மட்டும் அவர் நடிப்பார் என்று தெரிகிறது.
புஸ்ஸி ஆனந்த்: இதற்கிடையே கட்சியைப் பதிவு செய்த பிறகு புஸ்ஸி ஆனந்த் நேற்றிரவு சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்கள் தலைவர் சொல்லுக்கு இணங்க தமிழக வெற்றி கழகத்தின் கட்சியைப் பதிவு செய்யத் தேவையான ஆவணங்களை டெல்லியில் சமர்ப்பித்தோம். மற்ற அனைத்தையும் எங்கள் தலைவர் தனது விரிவான அறிக்கையில் விளக்கியுள்ளார். அவரது வழிகாட்டுதல் படி நாங்கள் செயல்படுவோம்.
இன்று தான் கட்சியை ஆரம்பித்துள்ளோம். வரும் காலங்களில் அனைத்து பொறுப்புகளுக்கும் நிர்வாகிகளை நியமிக்க உள்ளோம். அவர்களிடம் தேவையான விளக்கங்களைக் கேட்கலாம். இந்த நேரத்தில் தலைவர் அனுமதியைப் பெற்று மட்டுமே என்னால் எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்க முடியும். எல்லா இடங்களில் இருந்தும் விஜய் ரசிகர்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். அனைத்து தரப்பில் இருந்தும் தமிழக வெற்றி கழகத்தை வரவேற்கிறார்கள் என்பதே உண்மை" என்றார்.
ஆரம்பமே இப்படியா.. "தளபதியா.. தலைவரா.." பிரஸ் மீட்டில் கன்பியூஸ் ஆன புஸ்ஸி ஆனந்த்.. அடடே இதை பாருங்க
சட்டென மாறிய முகம்: அதன் பிறகு கிளம்பும் முன்பு செய்தியாளர்களிடம் கட்சிக்கு மக்களிடம் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்ற புஸ்ஸி ஆனந்த் கேட்டார். அதற்கு அங்கிருந்த செய்தியாளர்கள் நல்ல ரெஸ்பான்ஸ் தான் இருக்கு என்று சொல்லவே சட்டென புஸ்ஸி ஆனந்த் முகம் மாறியது. இதைக் கேட்டதும் சந்தோசப்பட்ட புஸ்ஸி ஆனந்த், "நல்ல வரவேற்பு இருந்தால் மக்களுக்கு என்ன தேவையோ நாம் செய்ய வேண்டும்.. அதைக் கண்டிப்பாகச் செய்துவிடலாம்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
விஜய் இப்போது 2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலைக் குறிவைத்தே அரசியலில் இறங்கியுள்ளார். இதன் காரணமாகவே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications