கவுதமன் வந்துட்டாரு.. ஜவாஹிருல்லாவும் சொல்லிட்டாரு.. கள்ளக்குறிச்சியில் விழுந்த துல்லிய "கேள்விகள்"
சென்னை: கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு காரணமான காவல் துறை மட்டுமல்லாமல் அனைத்து நிலை அரசு ஊழியர்களையும் சட்டத்தின் பிடியில் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 132க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் நிலையில், இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர்... இதில் மேலும் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

கண்டனம்: கள்ளச்சாராய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேபோல எதிர்க்கட்சிகளும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
அந்தவகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீது தெரிவித்திருக்கும் கொந்தளிப்பு வரிகள், இன்றைய தினம் தமிழகத்தின் கவனத்தை பெற்று வருகின்றன..
செய்தியாளர்களிடம் இன்று எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "இவ்வளவு மரணம் ஏற்பட்டிருக்கிறது, ஆனால், திமுகவின் கூட்டணி கட்சிகள் இந்த விஷயத்தை கண்டுகொள்ளவில்லை. 25 வருடங்கள் கூட்டணி தொடரும் என்ற காங்கிரஸ் கட்சிக்கு எது நடந்தாலும் கவலையில்லை. அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் மட்டும் முக்கியம்.
மன்னிக்க மாட்டார்கள்: கம்யூனிஸ்ட்கள் மேம்போக்காக பேசியிருக்கிறார்கள். திருமாவளவன் கட்சி, போராட்டத்தை அறிவித்திருக்கிறது. இதனால், என்ன பயன்? தேர்தலுக்கு மட்டும் கூட்டணி வையுங்கள்.. அது முடிந்ததுமே மக்களுக்காக குரல் கொடுங்கள். ஆளுங்கட்சிக்கு மட்டும் துணை போயிடாதீங்க.. இல்லாட்டி மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மொத்தத்தில் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவிக்காதது வேதனை அளிக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில், தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் டைரக்டர் கவுதமன் கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.. அந்த அறிக்கையில், உடனடியாக பூரண மதுவிலக்கு கொள்கையை பிரகடனப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
கவுதமன் தன்னுடைய அறிக்கையில், "விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 13 உயிர்களும் செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் 8 உயிர்களும் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி உயிர்விட்ட ஓராண்டிற்குள் தற்போது கள்ளக்குறிச்சியில் 40க்கும் மேற்பட்ட உயிர்கள் செத்து, 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
கயவர்கள்: தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்கின்ற கயவர்களுக்கு துணை நிற்கின்ற ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் இந்த உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும். 50-க்கும் மேற்பட்ட பலியான உயிர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக தமிழ்நாடு அரசு உடனடியாக பூரண மதுவிலக்கு கொள்கையை பிரகடனப்படுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கூண்டோடு டிரான்ஸ்பர்: "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் துல்லியமாக விசாரிக்கப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்குக் காரணமான காவல் துறை உட்பட அனைத்து நிலை அரசு ஊழியர்கள் அனைவரும் சட்டத்தின் பிடியில் நிறுத்தப்பட வேண்டும்.
சாதாரணப் பணியிட மாற்ற நடவடிக்கை மட்டும் போதாது. இந்தச் சம்பவத்திற்குத் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் மெத்தனாலை தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசு ஊழியர்கள்: அனைத்து நிலை அரசு ஊழியர்களையும் சட்டத்தின் பிடியில் நிறுத்தப்பட வேண்டும் என்று ஜவாஹிருல்லாவும் வலியுறுத்தியிருக்கிறார்.. கவுதமனும் வலியுறுத்தியிருப்பது தமிழக மக்களின் கவனத்தை பெற்றுள்ளது..!!!












Click it and Unblock the Notifications