கல்லூரிகளில் கோ எஜுகேஷன் ஒழிப்பு? கல்வியாளர்கள் கருத்து என்ன? நன்மையா, பிற்போக்குத்தனமா?
சென்னை: கல்லூரிகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி வகுப்புகள் நடத்த அரசு பரிசீலித்து வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி எதன் அடிப்படையில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டாரோ தெரியவில்லை, ஆனால் அதன் மீதான விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.
இதனிடையே அமைச்சர் பொன்முடியின் பரிசீலனையில் உள்ள அந்த புதிய திட்டம் குறித்து கருத்துக்களை அறிவதற்காக நாம் சில கல்வியாளர்களிடம் பேசினாம். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் பின் வருமாறு;

திருவாசகம்
சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் திருவாசகம் இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் கூறுகையில், ''கல்லூரிகளில் ஆண்கள் பெண்களுக்கு தனித்தனி வகுப்புகள் என்பதை ஏற்கவே முடியாது. ஒரு பாலராக படிக்கும் கல்லூரிகளை இரு பாலராக மாற்றுவதை தான் உலகத்தில் நான் கண்டும் இருக்கிறேன், அறிந்தும் இருக்கிறேன். இப்போது தான் முதல் முறையாக இரு பாலர் பயில்வதை ஒரு பாலராக மாற்ற பரிசீலிப்பதாக நான் கேள்வியே படுகிறேன். இது ஒரு விந்தையான செயலாக உள்ளது. இதனால் அமைச்சர் பொன்முடி கூறியதை நான் ஏற்க மறுக்கிறேன்.''

ஊக்கப்படுத்த மாட்டேன்
''ஒரு பாலராக கல்வி பயின்று பிறகு வேலை, திருமணம் என அடுத்தடுத்த நிலைகளுக்கு மாணவர்கள் செல்லும் போது அவர்களுக்கு பல பிரச்சனைகள் உருவாகலாம். ஒருவருக்கு ஒருவர் சரியான புரிதல் இல்லாமல் போய்விடும். அதனால் இந்த புதிய முறையை எந்த வகையிலும் நான் ஊக்கப்படுத்தமாட்டேன்.'' இவ்வாறு சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் திருவாசகம் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

துறைத் தலைவர்
இதனிடையே கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் மாஸ்காம் துறைத் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் பிச்சாண்டி அமைச்சர் பொன்முடி கருத்தை வரவேற்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ''ஆண்கள் பெண்களுக்கு தனித்தனி வகுப்புகள் நடத்தும் திட்டத்தை நான் வரவேற்கிறேன். இதனால் பெண்கள் முழுமையாக கல்வி கற்கும் சூழல் உருவாகும். கோ எஜுகேஷன் முறையில் காலை மாலை வகுப்புகள் நடந்தாலும், பெரும்பாலான பெற்றோர்கள் மாலை வேளை கல்லூரிக்கு பெண் பிள்ளைகளை அனுப்பத் தயங்குகின்றனர்.''

வரவேற்கிறேன்
அதுமட்டுமல்லாமல் கோ எஜுகேஷன் என்றால் ஆண்கள் பாதி பெண்கள் பாதி பேர் மட்டுமே ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் சேர முடியும். இதே தனித்தனி வகுப்புகள் என்றால் பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி முழுமையான வாய்ப்பு அந்தக் கல்லூரியில் சேர்ந்து பயில கிடைக்கும். ஆகையால் என்னை பொறுத்தவரை அமைச்சர் பொன்முடி பரீசிலித்து வரும் இந்த புதிய முறையை வரவேற்கிறேன். இவ்வாறு ஓய்வு பெற்ற பேராசிரியர் பிச்சாண்டி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

வாசுகி எதிர்ப்பு
இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி இது தொடர்பாக வெளியிட்ட பதிவில், பாலின அடிப்படையில் வகுப்புகளை பிரிப்பது இருபாலருக்குமான இடைவெளியை அதிகரிக்கும் எனக் கூறியிருக்கிறார். மேலும், மாணவர், ஆசிரியர் அமைப்புகள் எவரும் இக்கோரிக்கையை எழுப்பாத போது அரசு இதை பரிசீலிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது எனவும் வினவியுள்ளார்.

மாறுபட்ட கருத்துக்கள்
கல்லூரிகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி வகுப்புகள் நடத்தும் விவகாரத்தில் இப்படி மாறுபட்ட கருத்துக்கள் எழத் தொடங்கியுள்ளன. இதனால் இந்த விஷயத்தில் அரசு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு உடனடி வாய்ப்பில்லை என்பது மட்டும் தெளிவாகிறது.












Click it and Unblock the Notifications