NEET: ஒரே ஒரு லெட்டர்! கண்டித்த முரசொலி.. "சிக்னல்" தந்த ஆளுநர் ரவி.. 1 வாரத்தில் நடந்தது என்ன?
சென்னை: நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு முன்பே அதை பற்றிய தன்னுடைய நிலைப்பாட்டை ஆளுநர் ஆர். என் ரவி வெளிப்படையாக கடிதம் ஒன்றில் தெரிவித்து இருந்தார். அதன்பின்பே அவர் தமிழ்நாடு அரசுக்கு நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பி இருக்கிறார்.
Recommended Video
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி திருப்பி அனுப்பி இருக்கிறார். இந்த மசோதாவிற்கு எப்படியாவது ஒப்புதல் பெற வேண்டும் என்று ஆளும் திமுக அரசு தீவிரமாக முயன்று வந்தது. இதனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கூட தமிழ்நாடு எம்பிக்கள் பல நாள் காத்திருந்து சந்தித்தனர்.
பிரதமர் மோடிக்கும் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்து வந்தார். முக்கியமாக பிரதமர் மோடி தமிழ்நாடு மருத்துவமனைகளை திறக்க கலந்து கொண்ட ஆன்லைன் கூட்டத்தில் கூட முதல்வர் ஸ்டாலின் நீட் விலக்கு பற்றி பேசி இருந்தார்.

ஆளுநர் சிக்னல்
இதில் தமிழ்நாடு அரசு மூலமும், ஆளும் திமுக தரப்பு மூலமும் தொடர்ந்து ஆளுநர் ஆர். என் ரவிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் ஆளுநர் ஆர். என் ரவி இதில் எந்த முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். செப்டம்பர் மாதம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் 4 மாதம் ஆகியும் ஆளுநர் இந்த மசோதா மீதான நடவடிக்கையை எடுக்கவில்லை. இந்த நிலையில்தான் குடியரசுத் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர். என்.ரவி வாழ்த்து செய்தி வெளியிட்டு கடிதம் எழுதி இருந்தார்.

ஒரு லெட்டர்
அவரின் அந்த லெட்டர்தான் நீட் விவகாரத்தை பூதாகரமாக்கியது. தமிழ்நாடு ஆளுநர் குடியரசு தினவிழாவையொட்டி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் நீட் குறித்தும், இந்தி மொழி குறித்தும் பேசி இருந்தார். மற்ற மாநில மாணவர்களை போல தமிழ்நாடு மாணவர்களும் பிற மொழிகளை கற்க வேண்டும். நீட் தேர்வு மூலம் தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை உயர்ந்துள்ளது என்று ஆளுநர் ஆர். என். ரவி குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பும் கடுமையாக நிலவி வரும் நிலையில் ஆளுநர் ஆர். என். ரவி இப்படி பேசியது பெரிய அளவில் சர்ச்சையானது.

பெரிதாக்கியது
நீட் விவகாரத்தில் ஆளுநர் - அரசு தரப்பு இடையிலான மோதலை இது பெரிதாக்கியது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக இதில் கோபத்தை காட்டிக்கொள்ளவில்லை. மாறாக திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி மட்டும் விமர்சனங்களை வைத்தது. திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் ஆளுநருக்கு எதிராக காட்டமான கட்டுரை ஒன்றும் வெளியிடப்பட்டது. "'கொக்கென்று நினைத்தாரோ; தமிழக ஆளுநர் ரவி!" என்ற தலைப்பில் முரசொலியில் இந்த கட்டுரை வெளியானது.

முரசொலி என்ன சொன்னது ?
அதில், தமிழக ஆளுநர் பொறுப்பேற்றுள்ள ரவி சில நேரங்களில் தனது அதிகார எல்லை மீறி செயல்படத் தொடங்கியுள்ளாரோ என எண்ணிடத் தோன்றுகிறது? இன்றைய தமிழக ஆளுநர் ரவி, தமிழக ஆளுநராக பொறுப்பேற்பதற்கு முன் நாகாலாந்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றிய போது, அவர் நடந்து கொண்ட விதம் பெரும் விமர்சனத்திற்கு ஆளாகின. ரவி, ஆளுநர் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு, மற்ற இந்திய மாநிலங்களைப் போன்றது அல்ல; என்பதை முதலில் அவர் உணர வேண்டும்! இந்த மண், அரசியலில் புடம் போடப்பட்ட மண்!

இது தமிழ்நாடு
இங்கே குக்கிராமங்களில் வசிப்பவர்கள் கூட அரசியல் தெளிவு மிகுந்தவர்கள். ஆளுநர் ரவி எத்தகைய கருத்தையும், தெரிவிக்கும் முன் தமிழகத்தைப் புரிந்து கொண்டு - அதன் வரலாற்றைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு கூறுவது, அவரது பதவிக்குப் பெருமை சேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்! ஏறத்தாழ 7 கோடி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய தமிழகச் சட்ட மன்றம் ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிய தீர்மானத்தின் மீது எந்தக் கருத்தும் தெரிவிக்காது - சட்டத்தின் சந்து பொந்துகளில் பதுங்கிக் கொண்டு இருப்பது எந்தவித நியாயம் என்பதை ஆளுநர் ரவி தெரிவிக்க வேண்டும்!., இது நாகலாந்து அல்ல.. தமிழ்நாடு என்று அந்த கட்டுரையில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

மோதல்
ஆளுநரின் வாழ்த்து கடிதம் குடியரசுத் தினத்திற்கு பின் அனுப்பப்பட்ட நிலையில் இந்த கட்டுரை 29ம் தேதி வெளியிடப்பட்டது. இதன்பின்தான் ஆளுநர் - திமுக இடையே மோதல் வெடித்தது. ஆனால் மறுநாளே முதல்வர் ஸ்டாலினும், ஆளுநர் ரவியும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் மகாத்மா காந்தியின் 75வது நினைவு நாள் விழாவில் இருவரும் சந்தித்துக்கொண்டனர். ஆனாலும் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

அறிக்கை
ஜனவரி 30ம் தேதி ஆளுநர் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடந்த நிலையில் பிப்ரவரி 1ம் தேதி நீட் விலக்கு மசோதாவை ஆளுனர் ஆர். என் ரவி சபாநாயகருக்கு திருப்பி அனுப்பி உள்ளார். அதாவது சந்திப்பு நடந்த இரண்டு நாட்களில் இந்த முடிவை ஆளுநர் எடுத்துள்ளார். ஆளுநர் வாழ்த்து கடிதம் அனுப்பிய 1 வாரத்தில் இவ்வளவு சம்பவங்கள் நடந்து உள்ளன. நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு முன்பே அதை பற்றிய தன்னுடைய நிலைப்பாட்டை ஆளுநர் ஆர். என் ரவி வெளிப்படையாக தெரிவித்து உள்ளார்.

அடுத்த கட்டம்
இதனால் தமிழ்நாடு அரசு இந்த முடிவை எதிர்பார்த்துதான் இருந்தது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதே மசோதாவை மீண்டும் தாக்கல் செய்து அதை நிறைவேற்றி, ஆளுநருக்கு திருப்பி அனுப்ப திமுக முடிவு செய்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அல்லது அதற்கு முன்பே அவசர கூட்டம் நடக்கும் வாய்ப்புகளும் உள்ளன. இது போக முதல்வர் ஸ்டாலின் மசோதாவை தாக்கல் செய்யும் போது முக்கியமான உரை ஒன்றை நிகழ்த்த வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications