5 நாட்கள்.. 5 சம்பவம்! சல்லி சல்லியாக நொறுக்கிட்டீங்களே! அடித்து சொன்ன அதிமுக.. விக்கித்து போன பாஜக!
சென்னை: கடந்த ஒரே வாரத்தில் அதிமுக - பாஜக இடையிலான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து தலைவர்கள் மாறி மாறி இரண்டு தரப்பிலும் தெரிவிக்கும் கருத்துக்களால் மிகப்பெரிய மோதல் வெடித்துள்ளது. அதிமுக - பாஜக இடையில் அப்படி என்னதான் நடக்கிறது? வாருங்கள் பார்க்கலாம்!
அதிமுக பாஜக இடையில் தற்போது அதிகாரபூர்வ கூட்டணி இல்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. நாங்கள் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக கூட்டணி அமைப்போம்.
இப்போது மட்டுமே கூட்டணி முறிந்துள்ளது என்று அண்ணாமலை பல்வேறு மேடைகளில் கூறினாலும், அதிமுக தலைவர்கள் யாரும் இதுவரை கூட்டணி நீடிப்பதாக கூறவில்லை. லோக்சபா தேர்தலில் இவர்கள் கூட்டணி வைப்பார்களா என்ற கேள்வி நிலவி வரும் நிலையில்தான் அதிமுக - பாஜக தலைவர்கள் மாறி மாறி வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் கடந்த 5 நாட்களில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் இரண்டு தரப்பு உறவை மிகவும் மோசமாக்கி உள்ளது.

பொன்னையன்
சம்பவம் 1 - அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் கடந்த வாரம் அதிமுக ஐடி விங் மாநாட்டில் சரியாக 5 நாட்களுக்கு முன் பாஜகவிற்கு எதிராக கடுமையான சில கருத்துக்களை வைத்தார். அதில், பாஜக தன்னை எதிர்க்கட்சி போல காட்ட நினைக்கிறது. அதற்கான பிம்பத்தை பாஜக ஏற்படுத்துகிறது. அதை நம்முடைய ஐடி விங் நிர்வாகிகள் முறியடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சிக்கு வர நினைத்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள் தமிழ்நாடு இன, மொழி, திராவிட உணர்வு உள்ள மாநிலம். இங்கு பா.ஜ.க வின் பருப்பு வேகாது. பா.ஜ.க.தான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி என்ற மாயை உருவாக்கப்படுகிறது. அது உண்மையில்லை என்று பொன்னையன் தெரிவித்தார்.

திரி கிள்ளி போட்டது
அதிமுக - பாஜக உறவில் அதன்பின் வெடிக்க போகும் வெடிகளுக்கு இந்த பொன்னையன் பேச்சு திரி கிள்ளி போட்டது. இதை எடப்பாடி பழனிச்சாமி பொன்னையனின் தனிப்பட்ட கருத்து என்று சொல்லி மறுதலிப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு ஜெயக்குமாரும் பாஜகவிற்கு எதிராக கருத்து சொன்னார். சம்பவம் 2.. ஜெயக்குமார் பாஜக குறித்து அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளை மக்கள் ஏற்க வாய்ப்பே இல்லை. அவரவர் நாங்கள் இத்தனை இடங்களை பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவது. அதற்காக முயற்சி செய்வது ஆகியவற்றில் தவறு இல்லை. ஆனால் மக்கள் தேசிய கட்சிகளுக்கு ஆதரவு தர மாட்டார்கள் என்று கூறினார்.

பொன்னையன்
பொன்னையனை தொடர்ந்து ஜெயக்குமாரும் இப்படி பேசிய பாஜக தரப்பை கிலியில் ஆழ்த்தி இருக்கிறதாம். சம்பவம் 3 - இதையடுத்து உடனே பாய்ந்து வந்த பாஜக துணை தலைவர் துரைசாமி, தமிழ்நாட்டில் அதிமுகவிற்கு அதிக எம்எல்ஏக்கள் இருந்தாலும் பாஜகதான் எதிர்க்கட்சி போல செயல்படுகிறது, பொன்னையன் பாஜக பற்றி பேசியது தவறு. எடப்பாடி பழனிச்சாமியும் எதிர்கட்சித் தலைவராக வலுவாக செய்லபடவில்லை. ஆனால் பாஜக தொடர்ந்து எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொன்னையன் தவறான கருத்துக்களை தெரிவிக்கிறார். இது பற்றி அதிமுக அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும். அவர் ஏன் இப்படி பேசினார் என்று கட்சிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று விபி துரைசாமி கோபமாக குறிப்பிட்டார்.

செல்லூர் ராஜு
சம்பவம் 4 - இதனால் கோபம் அடைந்த செல்லூர் ராஜு, பொன்னையன் கட்சி வளர்ச்சிக்காக அப்படி பேசி இருக்கிறார். கூட்டம் திரட்டுவது எல்லாம் பெரிய விஷயமே அல்ல. அதெல்லாம் எளிதாக செய்ய முடியும். பாஜகவிற்கு கூடுவது காக்கா கூட்டம்; அதிமுகவுக்கு கூடுவது கொள்கை கூட்டம். பாஜகவை வளர்க்க அண்ணாமலை ஏதேதோ செய்கிறார். தமிழிசை, எல் முருகனுக்கு பதவி கிடைத்தது போல அண்ணாமலை தனக்கு பதவி கிடைக்கும் என்று ஆசைப்படுகிறார். அதற்காக ஏதேதோ செய்கிறார் என்று செல்லூர் ராஜு போட்டு உடைத்து இருக்கிறார்.

விரிசல்
சம்பவம் 5 - இதற்கு பாஜக தரப்பில் இருந்து பதிலடி தந்த கரு நாகராஜன், விரட்டியதும் ஓடும் காக்கா கூட்டம் ப.ஜக. அல்ல. இதை எளிதாக விரட்ட முடியாது. எங்களை எளிதாக கடந்து போகவும் முடியாது. இது ஒற்றுமை கூட்டம். எந்த மாற்றத்தையும் தரக்கூடிய சக்தி படைத்த கூட்டம், என்று கரு நாகராஜன் தெரிவித்துள்ளார். அதிமுக, பாஜக தலைவர்கள் இவ்வளவு பேசியும், இதுவரை அண்ணாமலை - எடப்பாடி பழனிச்சாமி இதில் நேரடியாக கருத்து தெரிவிக்காமல் சைலண்ட்டாக இருக்கிறார்கள்.

பாஜக என்ன சொல்கிறது
பாஜக தரப்பில் விசாரித்ததில், நாங்கள் வளரவே கூடாது என்று அதிமுக நினைக்கிறதா? எப்போதும் அவர்களுக்கு கீழ் இருக்க வேண்டுமா? அரசுக்கு எதிராக அதிமுகவை போராட விடாமல் நாங்கள் தடுக்கிறோமா. எதிர்க்கட்சி என்றால் அவர்கள் இறங்கி போராடட்டும், யார் தடுத்தார்கள். ஏன் எங்களை விமர்சிக்கிறார்கள், என்று கமலாலய சென்னை தலைகள் சிலர் தெரிவிக்கிறார்கள். அதிமுகவின் சமீபத்திய கருத்துக்களால் பாஜக செம அப்செட்டில் இருக்கிறதாம்.

அதிமுக என்ன சொல்கிறது
ஆனால் ரத்தத்தின் ரத்தங்களோ.. பாஜக வளர்ச்சியில் பிரச்சனை இல்லை. ஆனால் இப்போதே நாங்கதான் எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொள்வது தவறு. எதிர்க்கட்சி என்றால் தனியாக நிற்கட்டும். எங்கள் தயவில் 4 எம்எல்ஏக்களை வாங்கிவிட்டனர். இப்போது எங்களுக்கு எதிராகவே பேசுவது என்ன நியாயம். நாங்கள் இன்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததே. இதுதான் அவர்களின் உண்மையான பலம். அதை உணர்ந்து அவர்கள் அரசியல் செய்தால் நன்றாக இருக்கும், என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசி உள்ளனர்.












Click it and Unblock the Notifications