"ஆள விடுங்க.." அதிமுக- பாஜக கூட்டணி முறிவு.. அண்ணாமலையிடம் கேளுங்கள்.. ஜகா வாங்கும் வி.பி.துரைசாமி
சென்னை: அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ள நிலையில், இரு தரப்பு தலைவர்களும் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், இந்த விவகாரத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் அதிமுக- பாஜக இடையே பல ஆண்டுகளாகக் கூட்டணி தொடர்ந்து வருகிறது. இருப்பினும், இரு கட்சிகளுக்கும் இடையே சில காலமாகவே புகைச்சல் நீடித்தே வருகிறது. இரு தலைவர்களும் மாறி மாறி விமர்சித்தே வந்துள்ளனர்.

பாஜக மாநில தலைவர்கள் அதிமுகவைத் தொடர்ந்து விமர்சிப்பதே வருகின்றனர். அதேநேரம் மறுபுறம் தேசியளவில் பார்க்கும் போது பாஜக தலைவர்கள் அதிமுக குறித்து எதுவும் சொல்வதில்லை.
அண்ணாமலை: இதற்கிடையே இந்த மோதல் கடந்த சில நாட்களில் அடுத்த கட்டத்திற்குச் சென்றது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்ணாமலை கூறிய சில கருத்துகளை அதிமுகவை கொதிப்படையச் செய்தது. அதாவது மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து அண்ணா ஓடியதாக அண்ணாமலை கூறவே அதற்கு அதிமுக தலைவர்கள் ஆவேசமாகப் பதிலடி கொடுத்தனர்.
யாராக இருந்தாலும் மறைந்த தலைவர்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அண்ணா குறித்து அவதூறாகப் பேசினால் நாக்கு அழுகிவிடும் என்றும் பதிலடி கொடுத்தார். அதேபோல மற்றொரு மாஜி அமைச்சரான ஜெயக்குமாரும் அண்ணாமலை பேச்சுக்கு மிகக் கடுமையாகப் பதிலடி கொடுத்தார்.
சிவி சண்முகம்: இந்த விவகாரத்தில் மாஜி அமைச்சர் சிவி சண்முகமும் அண்ணாமலையை மிக காட்டமாக விமர்சித்தார். அண்ணாமலை செல்வது பாதயாத்திரை இல்லை.. வசூல் யாத்திரை என்று விமர்சித்த அவர், மோடி மீண்டும் பிரதமராவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை என்பதாலேயே அவர் இப்படிப் பேசுவதாகச் சாடினார். இதுவே இறுதி எச்சரிக்கை என்று கூறிய சிவி சண்முகம், அதிமுக தலைவர்கள் குறித்து அண்ணாமலை பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சாடியிருந்தார்.
அதற்கு அண்ணாமலையும் பதிலடி கொடுத்திருந்தார். அதாவது, சிவி சண்முகம் மாலை 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார் என்றும் 6 மணிக்கு பின்பு ஒரு மாதிரி பேசுவார் என்றும் விமர்சித்திருந்தார். மேலும், தான் கூறியதில் எந்தவொரு பொய்யும் இல்லை என்ற அவர், தனது பேச்சைப் பின்வாங்கப் போவதில்லை என்றும் சிவி சண்முகம் எனக்குப் பாடம் எடுக்கக் கூடாது என்றும் பேசியிருந்தார்.
இப்படி இரு தரப்பும் மாறி மாறி விமர்சிக்க அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று கூறி பெரும் பரபரப்பைக் கிளப்பினார் ஜெயக்குமார்.. மேலும், இது அதிமுகவின் அதிகாரப்பூர்வ முடிவு என்றும் அதையே தான் அறிவிப்பதாகவும் கூறியிருந்தார். இரு கட்சிகளுக்கும் இடையே புகைச்சல் இருப்பது அனைவருக்கும் தெரியும் என்ற போதிலும், கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை அதிமுக எடுக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
விபி துரைசாமி சொல்வது என்ன: இது தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரு கட்சிகளும் கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்றாகப் பயணித்து வந்த நிலையில், திடீரென பாஜக உடனான கூட்டணியை முறிப்பதாக அதிமுக அறிவித்து இருக்கிறது. இந்தக் கூட்டணி முறிந்துள்ளது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் பல கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே இது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமியை தொடர்பு கொண்டு கருத்துக் கேட்டோம்.
இருப்பினும், இந்த விவகாரம் குறித்து எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி மறுத்துவிட்டார். இந்த விவகாரத்தில் பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை கருத்து கூறுவதே சரியாக இருக்கும் என்று குறிப்பிட்டு அவர் பதில் கூற மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications