விஜயின் கொள்கை என்ன?; உதயநிதியா? விஜய்யா? யார் பெரியவர்?: போட்டு உடைத்த கருணாஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கம் பிரச்சினை பற்றி இத்தனை வருடங்களாக வாய் திறக்காத விஜய், கட்சி தொடங்கிய பிறகு கட்டிட நிதி அளிக்க முன்வந்தது ஏன்? என்று நடிகர் கருணாஸ் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

திரைத்துறையில் விஜய் இருந்தபோது அவர் பேசிய வசனங்கள் சர்ச்சையைக் கிளப்பி வந்தன. அவர் படத்தில் இடம்பெற்ற காட்சிகள் கூட சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றன. அதே சர்ச்சைகள் அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது நடந்தது. தமிழக வெற்றிக் கழகம் என்று எழுதுவதில் ஒற்றுப் போடாமல் தமிழைத் தவறாக எழுதினார். அது சர்ச்சையானது. பின்னர் அதைச் சரிசெய்தார்கள். தவெகவை ஆங்கிலத்தில் டிவிகே என்று போட்டார்கள். அதே பெயரில் வேல்முருகன் ஒரு கட்சியை நடத்தி வருகிறார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியை ஆங்கிலத்தில் அவர் டிவிகே என்றே எழுதி வருகிறார். அதைக்கூடக் கவனிக்காமல் செய்யலாமா என ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது. இப்போது கட்சியின் கொடியை அறிவித்துள்ளார்.

Vijay TVK

அதில் யானை சின்னம் உள்ளதால் அதனை பகுஜன் சமாஜ் கட்சி எதிர்க்கிறது. மாநிலக் கட்சியான பாமகவுக்குத் தொடக்கக் காலத்தில் யானைதான் சின்னமாக இருந்தது. மாயாவதியின் பிஎஸ்பி தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெற்ற போது பாமகவின் யானை சின்னம் பறிபோனது. தேர்தல் ஆணையத்தின் விதிப்படி மற்ற கட்சிகளின் சின்னங்களைப் பயன்படுத்துவது தவறு. இது அடிப்படையான விதிமுறை. அதைக் கூட அறியாமல் யானை சின்னத்தைக் கொடியில் பயன்படுத்தி இருக்கிறார் விஜய்.

மேலும் நாதக தனது கட்சியின் வண்ணமாகச் சிவப்பு, மஞ்சளைப் பயன்படுத்தி வருகிறது. வெள்ளாளர் கட்சியான ஒரு அமைப்பு விஜய் பயன்படுத்தி உள்ள அதே வண்ணத்தைப் பயன்படுத்தி வருகிறது. அதை எல்லாம் உணராமல் ஒரு கொடியை தயாரிக்கிறார் விஜய். ஆகவே சர்ச்சை உண்டாகி வருகிறது. இந்நிலையில் விஜய் கட்சி தொடங்கியது பற்றி நடிகர் கருணாஸ் பல கேள்விகளை முன்வைத்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக சமூக பிரச்சனைகள் பற்றி வாய் திறக்காமலிருந்த விஜய் இப்போது திடீரென்று கட்சித் தொடங்க வேண்டிய தேவை என்ன? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

விஜய் அரசியல் பிரவேசம் பற்றி கருணாஸ் பேசுகையில், "தமிழ்நாட்டில் இன்னும் 100 கட்சிகள் உருவாகலாம். யார் கட்சி ஆரம்பித்தாலும் அந்தக் கொடியைப் பிடிப்பதற்கு தமிழன் தயாராக இருப்பான். ஒரு கட்சியில் இடமில்லை என்றால், வேறு கட்சியில் பதவியை வாங்கிக் கொண்டு தனித்து தெரிய வேண்டும் என்பது பலரது விருப்பமாக இருக்கிறது. அதை மாற்ற முடியாது. அரசியலில் சமூக சேவை செய்ய வேண்டி விஜய் வருகிறார். அது நல்ல எண்ணம்தான். ஆனால், நினைப்பதைப் போல அரசியல் எளிமையானதல்ல. யார் வந்தாலும் உடனே எம்ஜிஆருடன் ஒப்பிடுகிறார்கள். அவர் அரசியலுக்குள் வருவதற்காக படிப்படியாக ஒரு அஸ்திவாரத்தைப் போட்டார். மேலும் எம்ஜிஆர் காலகட்ட அரசியல் வேறு. இன்றுள்ள அரசியல் வேறு" என்கிறார் நடிகர் கருணாஸ்.

Vijay TVK

தொடர்ந்து பேசியுள்ள அவர், "ஒருமுறை வடிவேல் திமுகவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றார். அவரைப் பார்க்க எங்குப் பார்த்தாலும் கட்டுக்கடங்காத கூட்டம். கடைசியில் என்ன நடந்தது? அந்தக் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறியதா? இல்லையே? ஒருத்தனை ஓட்டுப் போட வைப்பது என்பது சின்ன விசயம் இல்லை. வழக்கமாக ஒரு சின்னத்திற்கு ஓட்டுப் போட்டு ஓட்டுப் போட்டுப் பழகிய ஒருவனை அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாது. அண்ணாதுரை 1949இல் கட்சியை ஆரம்பித்தார். அவர் ஆட்சிக்கு வர 1966 ஆனது. பல ஆண்டுகள் இடைப்பட்ட பயணம் இருந்துள்ளது.

ஒரு கொள்கையை உருவாக்கி அதை ஊர் முழுக்கப் போய் பேசிப் பேசி திமுகவை அவர் வளர்த்தார். அதை புரியவைத்தார். ஆகவேதான் இன்றுவரை திமுகவில் உள்ளவன் வேறு கட்சிக்கு மாறமாட்டேன் என்கிறான். அப்படி என்றால் விஜய் கட்சியின் கொள்கை என்ன? அவர் மற்ற கட்சிகளைவிட எங்கே வேறுபட்டு நிற்கிறார்? நான் கூட கட்சி ஆரம்பிக்கவில்லை. முதலில் அறக்கட்டளையைத்தான் தொடங்கினேன். அதன் மூலம் 10 பேரைப் படிக்கவைக்கலாம் என நினைத்து அதைச் செய்தேன். ஆனால், நான் அரசியல்வாதியாக்கப்பட்டேன். தேவரைப் பற்றி நான் பேசியதால் என் மீது சாதி சாயம் பூசப்பட்டது.

இன்று எந்தத் தலைவரைப் பற்றிப் பேசினாலும் சாதி சாயம் பூசுகிறார்கள். பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுகிறார்கள். அப்படி என்றால், விஜய் வந்து என்ன செய்யப் போகிறார்? ஜெயலலிதா இருந்தபோது, 'தலைவா' படத்தில் 'டைம் டு லீட்' என்று போட்டதால் பிரச்சினை வெடித்தது. விஜய் கொடநாடு போய் ஜெயலலிதாவைச் சந்திக்கும்படி ஆனது. நேரம் வரும்போது தலைமை ஏற்பேன் என்றாரே? இத்தனைக் காலம் எங்கே போனார்? கடந்த 25 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் ஏற்பட்டதே? அப்போது என்ன செய்தார்? எதற்குமே குரல் கொடுக்காத விஜய், எந்தப் பிரச்சினையிலும் தலையிடாத விஜய், திடீரென்று ஏன் அரசியலுக்கு வருகிறார்?

Vijay TVK

நடிகர் சங்கம் பிரச்சினை பல ஆண்டுகளாகச் சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி வாய் திறக்கவே இல்லை விஜய். இப்போது கட்சி ஆரம்பித்ததும் சங்கக் கட்டிடம் கட்ட நிதி கொடுக்கிறார். சில ஆண்டுகளாக நீட் போன்ற பிரச்சினைகளைப் பேசுகிறார். இப்போது விஜய் என்ன நினைக்கிறார்? ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி வருகிறார். உதயநிதி பெரிய நடிகரா? விஜய் பெரிய நடிகரா? என்றால் விஜய் தான் பெரிய நடிகர். உதயநிதி பெரிய அரசியல்வாதியா? விஜய் பெரிய அரசியல்வாதியா? என்றால் உதயநிதிதான் பெரிய அரசியல்வாதி. எனவே விஜய் என்ன நோக்கத்திற்காக அரசியலுக்கு வந்துள்ளார் என்பதை அவர் விளக்க வேண்டும். மாநாட்டில் கட்சியின் கொள்கை, கொடி பற்றி எல்லாம் விளக்கம் அளிக்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார். அதை முதலில் கேட்போம். அவர் சொல்வதில் நியாயம் இருக்கிறது? உண்மை உள்ளது என்றால் வரவேற்போம்.

அவரை வரக்கூடாது என்று சொல்ல நான் யார்? அவர் நினைப்பதைப் போல அரசியல் எளிமையானதல்ல. அதை அவர் புரிந்து கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. அவர் ரசிகர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டார்கள். அதை வரவேற்று நான் வாழ்த்து தெரிவித்தேன். அவர் கொள்கை பிடித்திருந்தால் அதையும் வரவேற்பேன். எனக்கு மனத் தடைகள் ஒன்றும் இல்லை" என்று பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+