Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

New land: புதிதாக சொத்துக்களை வாங்க போகிறீர்களா? உடனே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொந்த நிலம் உள்ளவர்கள், புதிதாக வாங்க போகிறவர்கள் சொத்தை வாங்கிய உடனேயே என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். இது போன்று தெரியாமல் சொத்துகளை வாங்குவதால் பலருக்கு பெரிய பிரச்சினைகளை கொடுக்கிறது.

இதுகுறித்து இன்றைய தகவல் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சொத்து வாங்கும் முன்பும், வாங்கிய பின்பும் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான சட்ட நடைமுறைகளில் ஒன்று பட்டா மாறுதல். தமிழகத்தில் நிலமோ அல்லது வீடோ வாங்கும்போது, பலரும் பட்டா மாறுதல் பற்றிய முழுமையான விவரங்கள் இன்றி சிரமத்தைச் சந்திக்கின்றனர். இதனால் சட்டச் சிக்கல்கள் ஏற்படுவதோடு, சில சமயங்களில் பெரிய இழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது. எனவே, புதிய நிலம் அல்லது வீடு வாங்குபவர்கள் பட்டா மாறுதலின் முக்கியத்துவத்தையும் அதன் செயல்முறைகளையும் அறிந்து கொள்வது அவசியம்.

Patta change

பட்டா என்பது உங்கள் நிலத்தின் அல்லது வீட்டின் உரிமையை அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் ஒரு சாசனம். தமிழக அரசின் வருவாய்த் துறையால் வழங்கப்படும் இந்த ஆவணம், ஒரு சொத்தின் உரிமையை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சட்டபூர்வமாக மாற்றும் செயல்முறையே பட்டா மாறுதல் எனப்படுகிறது.

பட்டா மாற்றம்

சொத்து வாங்கியவுடன் பட்டா மாற்றம் செய்வது கட்டாயமானதாகும். இது அரசு நலத்திட்டங்கள், வங்கிக் கடன் பெறுதல், சொத்தை விற்பனை செய்தல் போன்ற பல முக்கிய விவகாரங்களுக்கு அடிப்படையாக அமைகிறது. உதாரணமாக, வீட்டுமனைப் பட்டா திட்டத்தின் கீழ் பயன்பெறவோ அல்லது நிலத்தை அடமானம் வைத்து வங்கியில் கடன் பெறவோ பட்டா அவசியம். பட்டா இல்லாதபட்சத்தில், உங்கள் சொத்தின் மீதான உரிமையை முறையாக உறுதிப்படுத்த முடியாது.

பட்டா மாறுதல்

பட்டா மாறுதலுக்குச் சில அடிப்படை ஆவணங்கள் கட்டாயமாகத் தேவைப்படும். கிரையப் பத்திரம், செட்டில்மென்ட் பத்திரம், பாகப்பிரிவினைப் பத்திரம், தானப் பத்திரம், பரிவர்த்தனைப் பத்திரம் அல்லது விடுதலைப் பத்திரம் ஆகியவை மிகவும் முக்கியமானவை. இந்த ஆவணங்கள் இல்லாமல் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடையாள சான்று

மேற்கூறிய பத்திரங்களுடன், கூடுதல் அடையாளச் சான்றுகளாக ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட் போன்றவை அவசியம். குடியிருப்புச் சான்றாக மின்சார ரசீது, தொலைபேசி ரசீது அல்லது ரேஷன் கார்டு போன்றவையும் தேவைப்படும். அனைத்து ஆவணங்களின் நகல்களுடன், சரிபார்ப்பதற்காக அசல் ஆவணங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.

வாரிசுச் சான்றிதழ்

வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்யும்போது, வாரிசுச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ் கட்டாயமாகும். இந்த ஆவணங்கள் இல்லாதபட்சத்தில், பட்டா மாறுதல் செயல்முறை தாமதப்படுத்தப்படும் அல்லது ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது. ஆகவே, உரிய ஆவணங்களைச் சேகரித்து விண்ணப்பிப்பது முக்கியமானதாகும்.

தற்போது பட்டா மாறுதல் முழுவதுமாக ஆன்லைன் மயமாகியுள்ளது. https://eservices.tn.gov.in அல்லது https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளங்கள் மூலம் பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல்

ஆன்லைனில் விண்ணப்பிக்க, முதலில் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் மூலம் புதிய பயனராகப் பதிவு செய்ய வேண்டும். ஓ.டி.பி சரிபார்ப்பு முடிந்ததும் உள்நுழைந்து, முகப்புப் பக்கத்தில் "பட்டா மாறுதல் விண்ணப்பம்" என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் சொத்தில் உட்பிரிவு உள்ளதா இல்லையா என்பதையும் குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தில் பெயர், தொடர்பு எண், முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்ய வேண்டும். சர்வே எண், சொத்து விவரங்கள், பரப்பளவு போன்ற நிலம் தொடர்பான தகவல்களையும் துல்லியமாகப் பதிவிட வேண்டும். அனைத்துத் தேவையான ஆவணங்களையும் PDF வடிவில் பதிவேற்றம் செய்த பிறகு, விண்ணப்பத்தை இறுதியாகச் சமர்ப்பிக்கலாம்.

ஆன்லைனில் கண்காணிக்கலாம்

விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, உங்களுக்கு ஒரு தனிப்பட்ட விண்ணப்ப எண் வழங்கப்படும். இந்த எண்ணைப் பயன்படுத்தி உங்கள் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைலிலேயே தொடர்ந்து கண்காணிக்க முடியும். பிறகு, வருவாய் அதிகாரிகள் உங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலித்து, கள ஆய்வு மேற்கொள்வார்கள். அனைத்து விவரங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில், பட்டா மாற்றம் விரைவாக அங்கீகரிக்கப்படும்.

பட்டா பெயர் மாறுதல்

பட்டா பெயர் மாறுதல் அங்கீகரிக்கப்பட்ட பின், உங்கள் கிராம நிர்வாக அலுவலகத்தில் (VAO) சில முக்கிய விஷயங்களை உறுதிப்படுத்த வேண்டும். எஃப்.எம்.பி (FMB) வரைபடத்தில் உங்கள் சர்வே எண் பிரிக்கப்பட்டு, சரியாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்ப்பது முக்கியம். இது உங்கள் நிலத்தின் எல்லைகளைத் தெளிவாகக் காட்டும் ஒரு முக்கியமான ஆவணமாகும்.

அத்துடன், சொத்துக்களின் முதன்மைப் பதிவேடான ஏ-பதிவேட்டில் உங்கள் பெயர் சரியாகச் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். சிட்டா மற்றும் அடங்கல் பதிவேடுகளிலும் மாற்றங்கள் முறையாகச் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது கட்டாயம். இந்த அனைத்துப் பதிவேடுகளும் உங்கள் உரிமையை சட்டரீதியாக உறுதிப்படுத்தும் அடிப்படை ஆவணங்களாகும்.

விண்ணப்பிக்கும் முன், உங்கள் சொத்து எந்தத் தாலுகா எல்லைக்கு உட்பட்டது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வது அவசியம். தவறான தாலுகாவில் விண்ணப்பித்தால், அது நிராகரிக்கப்படும். மேலும், நிலத்தின் சர்வே எண், சப்-டிவிஷன் எண் போன்றவற்றை மிகவும் துல்லியமாகக் குறிப்பிட வேண்டும்.

பழைய பட்டாதாரர் பெயர்

வாங்கிய நிலத்தின் பழைய பட்டாதாரர் பெயரையும், புதிய பட்டாதாரர் பெயரையும் பதிவு ஆவணத்தில் உள்ளபடி சிறிதும் பிழையின்றிச் சரியாகப் பதிய வேண்டும். எந்த ஒரு விவரத்திலும் சிறிய பிழை ஏற்பட்டாலும், விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்டு, பட்டா மாறுதல் தாமதமாகும். அனைத்து ஆவணங்களும் தெளிவாக ஸ்கேன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆன்லைன் வசதி வந்த பிறகு, பட்டா மாற்றச் செயல்முறை எளிமையாகியுள்ளது. ஏழை எளிய மக்களும் தாலுகா அலுவலகத்திற்கு அலைந்து திரியாமல், வீட்டில் இருந்தபடியே தங்கள் பட்டா மாற்றத்தை முடிக்க முடிகிறது. இதனால் நேரமும் பணமும் மிச்சமாகிறது. மேலும், விண்ணப்பத்தின் நிலையை உடனுக்குடன் ஆன்லைனில் கண்காணிக்கலாம்.

பட்டா மாற்ற விதிகள்

ஆகவே, புதிதாக நிலம் வாங்கும்போது பட்டா மாறுதல் பற்றிய விதிமுறைகளை முழுமையாகத் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். சரியான ஆவணங்களுடன் கவனமாக ஆன்லைனில் விண்ணப்பித்து, பட்டா மாற்றம் முடிந்த பின்னரும், அனைத்துப் பதிவேடுகளிலும் மாற்றங்கள் சரியாகச் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகளைச் சரியாகப் பின்பற்றாவிட்டால், எதிர்காலத்தில் பெரிய சட்டச் சிக்கல்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+