ரூ.5570 கோடி மதுரவாயல் திட்டம்! செப்டம்பரில் வரப்போகும் பெரிய மாற்றம்... NHAI போட்ட மாஸ்டர் பிளான்
சென்னை: மதுரவாயல் - துறைமுகம் பாலம் மற்றும் சென்னை புறநகர் போக்குவரத்தை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் சில முக்கிய அறிவிப்புகளை இப்போது வெளியிட்டுள்ளனர். இதில் செப்டம்பர் முதல் கூவம் ஆற்றுப்பகுதியில் மேம்பாலப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதோடு, கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மேல்நிலைச் சாலை மற்றும் செங்கல்பட்டு - திண்டிவனம் 6 வழிச்சாலைத் திட்டங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், திண்டிவனம் - புதுச்சேரி பாதையை விபத்தில்லாச் சாலையாக மாற்றும் பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
சென்னை மாநகரில் பெரிய தலைவலியாக உள்ளது டிராபிக் தான்.. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாகவும், வர்த்தக துறையின் மிகப்பெரிய நம்பிக்கையாகவும் உருவெடுத்து வருகிறது மதுரவாயல் - சென்னை துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலத் திட்டம்.

மதுரவாயல் துறைமுகம்
சுமார் 20.6 கிலோமீட்டர் தொலைவுக்கு, ரூ.5800 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியாவின் மிக நீளமான இந்த 6 வழி இரட்டை அடுக்கு மேம்பாலப் பணியில், இப்போது ஒரு மிக முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்த திட்டத்தில் இதுவரை வெறும் 22 சதவீதப் பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ள சூழலில், வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆற்றுப்பகுதிகளில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
பருவமழை மழை - பெரிய தூண்கள்
கூவம் ஆற்றின் மேல் சுமார் 15.5 கிலோமீட்டர் தொலைவுக்கு பாலம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், செப்டம்பர் முதல் ஜனவரி வரை நீடிக்கும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டும், கூவம் ஆற்றில் ஏற்படக்கூடும் வெள்ளப்பெருக்கைக் கருத்தில் கொண்டும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருநதாலும், பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு இல்லாத வகையில், நிலப்பகுதியில் உள்ள ஏனைய தூண்கள் மற்றும் பாலப் பணிகள் வழக்கம்போல தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சென்னை துறைமுகத்தின் 10-வது நுழைவாயில், மெரினா போர் நினைவிடம், கோயம்பேடு கூவம் ஆற்றங்கரை வழியாக மதுரவாயல் சந்திப்பு வரை அமையவுள்ள இந்த ஈரடுக்கு பாலத்தில் ஒரு ஸ்பெஷாலிட்டியும் உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள்
பாலத்தின் மேல்தளம் துறைமுகத்திற்கு செல்லும் கனரக கான்டெய்னர் லாரிகளுக்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்டு சுங்கக்கட்டணத்துடன் செயல்படும்.. அதேசமயம் பாலத்தின் கீழ்த்தளம் சென்னை மக்களின் தினசரி போக்குவரத்திற்காக முற்றிலும் சுங்கக் கட்டணமின்றித் திறக்கப்பட உள்ளது. தினமும் 11 மணி நேரம் தீவிரமாக நடக்கும் இப்பணிகள் மூலம், நாளொன்றுக்கு 40000 கார்கள் வரை எளிதாகவே பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2047-க்குள் சென்னை துறைமுகத்தின் சரக்குக் கையாளும் திறன் 200 மில்லியன் டன்களாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விரைவுச்சாலை சென்னை நகரப் போக்குவரத்து நெரிசலுக்குப் பெரிய விடிவுகாலமாக அமையும் என்றே தெரிகிறது..
ஆனால் பருவமழை காரணமாக செப்டம்பர் முதல் கூவம் ஆற்றுப்பகுதியில் பணிகள் நிறுத்தப்படுவதால், இந்த பாலம் முழுமையாக நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வர 2029-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை காத்திருக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய கள நிலவரம்.!!
சென்னை புறநகர் டிராபிக் சிக்கல்
இதனிடையே, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில் மேலும் சில முக்கிய திட்டங்களை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, கிளாம்பாக்கம் - மகேந்திரா சிட்டி இடையே ரூ.3,186 கோடியில் மேல்நிலைச் சாலை அமைத்து அதை மெட்ரோ ரயிலுடன் இணைக்க ஆய்வுகள் நடப்பதுடன், ரூ.3,098 கோடியில் செங்கல்பட்டு - திண்டிவனம் சாலை 6 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. மேலும், ரூ.147 கோடியில் திண்டிவனம் - புதுச்சேரி பாதையில் விபத்துகள் அதிகம் நேரிடும் 7 இடங்களைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன், பயணிகளின் சுமையைக் குறைக்க 60 கி.மீ இடைவெளிக்குள் கூடுதல் சுங்கச்சாவடிகள் அமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications