அந்த மனசுதான்யா கடவுள்.. ஆம்புலன்சாக மாறிய தனியார் பேருந்து.. ஓட்டுநரால் தப்பித்த கோவை பெண்
கோவை: பரபரப்பான வாழ்க்கை முறையில் சக மனிதர்களின் வலி, வேதனையை காது கொடுத்து கேட்பதற்கு கூட பலருக்கும் நேரமில்லை. பொது இடங்களில் பாதிப்பு ஏற்படும்போது கூட உதவுவோர் மிகவும் குறைவு. கோவை தனியார் பேருந்தில் பயணித்த பயணி திடீரென மயக்கம் போட்டுள்ளார். பேருந்து ஓட்டுநர், நடத்துநர் துரிதமாக செயல்பட்டு, மின்னல் வேகத்தில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செலுத்தி அவரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நமது வாழ்க்கை முறை மிகவும் பரபரப்பான முறைக்கு மாறியுள்ளது. உணவு பழக்க வழக்கம் மாறியது, ஆரோக்கியத்தில் அக்கறையின்மையால் உடல்நலக்குறைவு அதிகம் ஏற்படுகிறது. நன்றாக இருப்போர் திடீரென மயக்கம் போடுவது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. விளையாட்டு வீரர்கள், நடன கலைஞர்கள் கூட திடீரென மயக்கம் போட்டு உடல் நலம் பாதிப்பது வாடிக்கையாகிவிட்டது.

பயணிக்கு திக் திக்
பயணத்தின் போதும் கூட உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து கோவை நோக்கி ஸ்ரீ கணேசா என்கிற தனியார் பேருந்து நேற்று வந்துள்ளது. அந்த பேருந்தை ஓட்டுநர் லோகேஷ் இயக்கி வந்தார். பேருந்து கோவை பீளமேடு அருகே வந்தபோது, அதில் பயணம் செய்த பெண் பயணி ஒருவருக்கு திடீரென மயக்கம் போட்டுள்ளார். அருகில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பயணிகள் நடத்துநர் பிரகாஷ் மற்றும் ஓட்டுநர் லோகேஷிடம் தகவல் தெரிவித்தனர். துளியும் தாமதிக்காமல் சமயோஜிதமாக சிந்தித்து ஓட்டுநர் லோகேஷ் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பேருந்தை இயக்கியுள்ளார். வேகமாக சென்று பேருந்தை அவசர சிகிச்சைப் பிரிவு நுழைவாயில் அருகே நிறுத்தியுள்ளார். பிறகு அங்கிருந்த மருத்துவப் பணியாளர்கள், அந்த பெண் பயணியை மீட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சபாஷ் ஓட்டுநர், நடத்துனர்
சுமார் இரண்டு மணி நேர தொடர் சிகிச்சைக்குப் பிறகு அந்த பெண் பயணியின் உடல்நலம் தேறி நினைவு வந்துள்ளது. இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பயணி ஒருவர் மயங்கியதை அறிந்தவுடன், நொடி கூட தாமதிக்காமல் பேருந்தை மருத்துவமனைக்கே செலுத்தி அவரது உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர் லோகேஷ் மற்றும் நடத்துநர் பிரகாஷுக்கு பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். பேருந்து தனியார் மருத்துவமனைக்கு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications
