35%.. அல்டிமேட் பிளான்.. "அதுக்குள்ளயா".. அம்பை அமித்ஷாவிடம் திருப்பிய எடப்பாடி: சொல்றது யார் பாருங்க
எடப்பாடி பழனிசாமியின் பேட்டி குறித்து தராசு ஷ்யாம் கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போட்டியிட்டு, எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் தமிழகம் தழுவிய தலைவர்களாக தங்களை தாங்களே நிரூபித்து விட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்னமும் தன்னை நிரூபிக்க வேண்டி இருக்கு என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, சென்னைக்கு வரும் போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை தாங்கள் சந்திக்க வேண்டிய அவசியமில்லை.. பாஜக ஒரு தேசியக் கட்சி, அதிமுக என்பது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி.
மோடி, அமித்ஷா கட்சி வேறு, எங்கள் கட்சி பாஜக தேசியக் கட்சி. அதிமுக, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி. 31 ஆண்டுகாலம் தமிழகத்தை சிறப்பாக ஆண்ட கட்சி அதிமுக. இரண்டு கட்சிகளும் வேறு வேறு என்று கூறியுள்ளார். இந்த பேட்டி பல்வேறு அதிர்வலைகளை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.

குஷி சந்தோஷம்
ஒருவேளை எடப்பாடி பழனிசாமி பாஜகவை எதிர்க்க துணிந்துவிட்டாரா? அப்படியானால் தனித்து போட்டியிடவும் முடிவு செய்துவிடுவார்களா? என்ற எதிர்பார்ப்பும் தொண்டர்களிடம் எழுந்துள்ளது.. அதேசமயம், அமித்ஷாவையே இவ்வாறு பேசிவிட்டது, பாஜகவை ஏற்காத எடப்பாடி டீமுக்கு பெரும் குஷியை தந்துள்ளதாகவும் தெரிகிறது.. இந்நிலையில், எடப்பாடி பேச்சு குறித்து, ஒரு டிவி சேனலுக்கு, மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான, தராசு ஷ்யாம் பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் கூறிய கருத்துக்களின் சுருக்கம்தான் இது:

35%
"தனக்கு மட்டுமே அதிமுக, அனைவருக்கும் தனக்கு ஆதரவு தர வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு.. ஒன்றிணைந்த அதிமுக என்பது ஓபிஎஸ்ஸின் நிலைப்பாடு.. கூட்டணியுடன் கூடிய அதிமுக என்பது டிடிவி தினகரனின் நிலைப்பாடு.. இந்த நிலைப்பாடுகள் எல்லாம் சேர்த்தால்தான் 35 சதவிகித ஓட்டுக்கள் கிடைக்கும் என்று பாஜக நம்புகிறது.. ஆனால், அதற்கு எடப்பாடி முட்டுக்கட்டையாக நிற்கிறார்.. 2017-ல் சில வாக்குறுதிகளை தந்துதான் அதிமுகவை ஒற்றுமைப்படுத்தினோம், ஆனால், அந்த வாக்குறுதிகளை எடப்பாடி தரப்பில் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை..

180 + 50
2022-ல் தனித்து போட்டி என்ற நிலையெடுத்தால், தங்களது வாக்குக்கும் மரியாதை இல்லாமல் போய்விடுமே என்பதே அமித்ஷாவின் நிலைப்பாடாக இருக்கிறது.. குஜராத்தில் விரைவில் தேர்தல் நடக்க போகிறது.. இந்த தேர்தலில் பாஜக எளிதில் வெற்றி பெறுமா என்று தெரியாது.. காரணம் அங்கே பல குழப்பங்கள் இருக்கின்றன.. பூசல்கள் இருக்கின்றன... பாஜகவில் டிக்கெட் கிடைக்காவிட்டால், எதிர்த்து போட்டி போடுகிறார்கள்.. மொத்தமே 180 தொகுதிகள்தான் அங்கு இருக்கின்றன.. இதில் 50 தொகுதிகள் போட்டி வேட்பாளர்களாக உள்ளனர்.. இது ஒரு கட்சிக்கு பலம் கிடையாது..

மோசம் தோல்வி
போட்டி வேட்பாளர்கள் அதிகரித்தாலே, ஒரு கட்சி தோல்வியை நோக்கிதான் போகும்.. கடைசியில் 3 ஆயிரம், 5 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில்தான் வெற்றி - தோல்வி என்பது நிர்ணயிக்கப்படும்.. அதனால் குஜராத் தேர்தலில் பாஜக கண்ணை மூடிக்கொண்டு வெற்றி பெறும் என்றெல்லாம் சொல்ல முடியாது. இப்படிப்பட்ட சூழலில், குஜராத் தேர்தலை பாஜக தலைவர்கள் பார்ப்பார்களா? இமாச்சல பிரதேச தேர்தலை பார்ப்பார்களா? கர்நாடக தேர்தலை பார்ப்பார்களா? தெலுங்கானாவில் தேர்தல் முன்கூட்டியே அறிவித்துவிட்டால், அந்த தேர்தலை பார்ப்பார்களா? அதனால்தான், பாஜகவுக்கு எடப்பாடி தரப்பு மீது வெறுப்பு வந்துவிடுகிறது..

1 + 2 டாப் போஸ்ட்
எத்தனையோ முறை எடப்பாடியிடம் சொல்லிவிட்டோம்.. கடந்த தேர்தலிலும்கூட, ஒருங்கிணைந்த அதிமுக பற்றி சொல்லிவிட்டோம்.. ஆனாலும் கேட்க மறுக்கிறார்களே? 2024 தேர்தலையே பெரிதாக நினைக்காமல் எடப்பாடி உள்ளாரே என்பதுதான் பாஜகவின் கவலையாக உள்ளது.. அமித்ஷாவை பெரிய தலைவராக எடப்பாடி அங்கீகரிக்கவில்லை என தெரிகிறது.. அமித்ஷா என்பவர் பாஜகவின் பெரிய தலைவர்.. மோடியும், அமித்ஷாவும் 1, 2 என்ற அடுத்தடுத்த இடத்தில் உள்ளவர்கள்.. 2009-லிருந்து இவர்களைதான் கட்சி முன்னிலைப்படுத்தி வருகிறது...

ஆண்டிப்பட்டி
ஆனால், எடப்பாடி பழனிசாமி என்பவர் அகில இந்திய தலைவர் கிடையாது.. தமிழகத்திலேயே வேறு ஏதாவது தொகுதியில் நின்று எடப்பாடி ஜெயிப்பாரா? ஆண்டிப்பட்டியில் எடப்பாடி ஜெயிப்பாரா? மதுரை மேற்கில் நின்று ஜெயிப்பாரா? தர்மபுரியில் ஜெயிப்பாரா? அவர் மாவட்டத்தில் மட்டும் தான் அவரால் ஜெயிக்க முடியும்.. காரணம் இவர் பகுதி தலைவர்.. ஓபிஎஸ்ஸுக்கும் இது பொருந்தும்.. அவரும் சேலத்தில் நின்று ஜெயிக்க முடியாது.. ஆக, இவர்கள் எல்லாருமே பகுதி தலைவர்கள்தான்..

கற்பனை
தமிழகம் தழுவிய தலைவர்கள் கிடையாது.. ஆனால், தேசம் தழுவிய தலைவர்களாக தங்களை தாங்களே கற்பனை செய்து கொள்கிறார்கள்.. இதுதான் இவர்களது பிரச்சனையே... ஏர்போர்ட்டில் ஓபிஎஸ்ஸுடன் சமமாக நிற்க வைத்த கோபத்தைதான், அமித்ஷாவிடம் எடப்பாடி இன்று திருப்பி விட்டுள்ளார்.. அமித்ஷாவை எடுத்துக் கொண்டால், குஜராத்தில் நின்றால் நிச்சயம் ஜெயிப்பார்.. ஆனால், தமிழ்நாட்டில் நின்றால் ஜெயிக்க முடியாது.. ஆனாலும் அவர் தேசம் தழுவிய தலைவர்.. காரணம் மத்திய மத்திய உள்துறை அமைச்சராக உள்ளார்..

எம்ஜிஆர்
ஆனால், எடப்பாடி பழனிசாமி என்பவர் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி தலைவர் மட்டுமே, இதுதான் உண்மையான நிலைமை.. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போட்டியிட்டு, எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் தமிழகம் தழுவிய தலைவர்களாக தங்களை தாங்களே நிரூபித்து விட்டனர்.. எடப்பாடி பழனிசாமி இன்னமும் நிரூபிக்க வேண்டி இருக்கு.. ஆனால் அதுக்குள்ளேயே, ஒற்றை தலைமை விவகாரம் எதற்காகவென்று தெரியவில்லை.. அதிமுகவின் பல்லாயிரக்கணக்கான கோடி சொத்துக்காக மட்டுமே என்று நான் நினைக்கிறேன்" என்றார் தராசு ஷ்யாம்.

பாமக + பாஜக
தொடர்ந்து பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொண்டிருக்கும் அந்த மெகா கூட்டணியை அமைப்பதற்கேகூட, பாமகவும் முக்கியம், பாஜகவும் முக்கியம்.. பொதுவாக, பாமக ஓட்டு வங்கி என்பது 5 சதவீதம் என்று வைத்தாலும், குறிப்பிட்ட தொகுதிகளில் அவர்களின் ஓட்டுக்களின் ஓட்டுவங்கி 16 சதவீதம் வந்துவிடும்.. குறைந்தது 10 சதவீதம், அதிகபட்சம் 16 சதவீதம் பாமகவுக்கு உண்டு.. எடப்பாடி சேலத்தில் வெற்றி பெறுவதற்கவே பாமகவின் ஓட்டுக்கள்தான் தேவை அதேபோல தென்காசியில் இருந்து குமரி வரை பாஜக ஓட்டுக்கள் உள்ளன..

30% டூ 50%
கோவை, நீலகிரி, திருப்பூரிலும் பாஜக ஓட்டு வங்கி உள்ளது.. அதனால் ஒட்டுமொத்தமாக சேர்ந்தால்தர்ன, 30 முதல் 50 தொகுதி வரை வெற்றி வாய்ப்புகள் உள்ளது. அப்படி இருக்கும்போது பாமக, பாஜகவை தவிர்த்துவிட்டு செல்ல முடியாது.. அப்படி தனித்து சென்றால் பாமக அதிமுகவுக்குள் வராது.. அவர்கள் கூட்டணியை மாற்றி கொண்டேதான் இருப்பார்கள்.. காரணம், வெற்றி முக்கியம் என்று பாமகவினர் நினைப்பார்கள்.. அப்படி இருக்கும்போது, யாரையுமே சேர்க்க மாட்டேன் என்ற எடப்பாடி ஏன் பிடிவாதம் பிடிக்கிறார்?" என்று ஷ்யாம் கேள்வி எழுப்புகிறார்.












Click it and Unblock the Notifications