ஹிந்தி படித்தால் பானிபூரிதான் விற்கனும்.. இஷ்டம் இருந்தால் படித்துக்கொள்ளுங்கள்.. பொன்முடி பொளேர்!
சென்னை: ‛‛ஹிந்தி படித்தால் தமிழகத்தில் வேலை கிடைக்குமா, பானிபூரி தான் விற்க வேண்டும்'' என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
தமிழகத்தில் காலம் காலமாக ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பில் தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தொடர்ச்சியாக திமுக குற்றம்சாட்டி வருகிறது.
இதற்கு ஒரு தரப்பும் ஆதரவும், இன்னொரு தரப்பு எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக பல விவாதங்கள் நடப்பதோடு, சமூக வலைதளங்களில் அடிக்கடி இந்தி மொழிக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகள் தெரிவித்து டிரெண்ட் செய்யப்படுவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது.

திமுக எதிர்ப்பு
இதற்கிடையே தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் எனும் இருமொழி கொள்கை தான் வேண்டும். தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழி கொள்கை வேண்டாம் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக அடிக்கடி தமிழகத்தில் திமுக, பாஜக தலைவர்கள் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.

அமைச்சர் பொன்முடி
இந்நிலையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி சென்னை ராயப்பேட்டையில் நடந்தது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்ற னர். அமைச்சர் பொன்முடி பேசினார். அதன்பிறகு நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பானிபூரி தான் விற்கனும்
உக்ரைன் நாட்டில் இன்ஜினியரிங் சேர்ந்து படிப்பு முடிக்காத மாணவர்கள் தமிழகத்தில் படிப்பை துவங்கலாம். அதாவது தமிழகத்தில் காலியாக உள்ள இடங்களில் இவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். உலகளாவிய தொடர்புக்கு தமிழ், கூடுதலாக ஆங்கில மொழி அறிவு இருந்தால் போதுமானது. இந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழகத்தில் பானிபூரிதான் விற்கிறார்கள்.

படிக்க வேண்டாம்
தமிழகத்தில் இந்தி படிக்க வேண்டாம் என எப்போதும் நாங்கள் கூறவில்லை. மூன்றாவது மொழியாக எந்த மொழி வேண்டுமானாலும் படிக்கலாம் தவறில்லை. ஆனால் மூன்றாவது மொழியாக இந்தி மொழியை திணிப்பதைதான் நாங்கள் எதிர்க்கிறோம். தமிழகத்தில் இந்தி படித்தால் என்ன வேலை கிடைக்கும்?'' என்றார்.

பாஜக மோதல்
தமிழகத்தில் இந்தியை ஏன் எதிர்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு அமைச்சர் பொன்முடியின் இந்த பதில் தற்போது விவாதமாகி உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் மொழிகளை நுழைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்தி மொழி, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் திமுக, பாஜக இடையேயான மோதல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications