கட்சி ஓபிஎஸ் கையை விட்டுப் போக, முக்கியமான அடி இதுதான்.. எடப்பாடியின் ராஜதந்திரம் எங்கு தொடங்கியது?
அதிமுக என்ற கட்சி ஓ பன்னீர்செல்வத்தின் கையைவிட்டு போவதற்கு முக்கியமான அடியே கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் எடுக்கப்பட்ட சில முடிவுகள் தான் என்கிறார்கள்
சென்னை: அதிமுக என்ற கட்சி ஓ பன்னீர்செல்வத்தின் கையைவிட்டு போவதற்கு முக்கியமான அடியே கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் எடுக்கப்பட்ட சில முடிவுகள் தான் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். அப்போது எடுத்த முடிவு எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய ஆதரவையும், அதேநேரம் ஓ பன்னீர்செல்வத்திற்கு பெரிய சரிவையும் ஒன்றாக கொண்டு வந்தது என்கிறார்கள்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தின் கடைசி நாள்களில் இந்த மிகப்பிற்படுத்தப்பட்டோர் தொகுப்புக்கான இட ஒதுக்கீட்டில் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்த வன்னியர்களுக்கான தனி உள் ஒதுக்கீடு தென்மாவட்டங்களில் உள்ள சீர்மரபினரிடையே கோபத்தை ஏற்படுத்தியது.
இதனால் ஓ.பன்னீர்செல்வத்துக்கான வாக்குத் தளமான தென் மாவட்டங்களில் அதிமுகவின் நிலைமையை மோசமாக்கியது. அதேநேரம் மேற்கு மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெறுவதற்கு இந்த உத்தி நன்றாக கைகொடுத்தாக சொல்கிறார்கள். அதேநேரம் இந்த கடைசி நேர உத்தி வடமாவட்டங்களில் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

மேற்கு மாவட்டங்கள்
இதனிடையே எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சியை இழக்க இந்த நடவடிக்கையே முக்கியமான காரணம் என்று அப்போது பெரிதாக பேசப்பட்டது. ஏனெனில் இந்த உத்தியால் அதிமுகவில் ஓ.பி.எஸ் மற்றும் தென்மாவட்ட வேட்பாளர்களுக்கு தோல்வியையும், எடப்பாடி வாக்குத் தளமான மேற்கு மாவட்டங்களில் கட்சிக்கு பெரும் ஆதரவும் வந்தது. இதனால் மேற்கு மாவட்டங்களில் பெரிய அளவில் அதிமுக வெற்றி பெற்று செல்வாக்கை கட்சியில் அதிகப்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி.

கைவிட்டு போனது
ஆனால் ஓ பன்னீர்செல்வமோ தனது சொந்தமாவட்டமான தேனியிலேயே பெரிய அளவில் சவாலை எதிர்க்கொண்டார். தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பத்தில் அதிமுக தோல்வியை தழுவியது. ஏன் போடி தொகுதியில் அவரே கடும் போராட்டத்தை சந்தித்தே வெற்றி பெற்றார். தென் மாவட்டங்களில் வெற்றி பெற்ற சில வேட்பாளர்களும் சொந்த செல்வாக்கு மற்றும் கடும் சவாலை கடந்தே வென்றனர். இப்படியான சம்பவத்தால் கட்சிக்குள் ஓபிஎஸ்சுக்கு பிடி ஏதும் இல்லாமல் போனது. அதிமுக என்ற கட்சி ஓ.பி.எஸ். கையை விட்டுப் போவதற்கான முக்கியமான அடி அதுதான் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். இந்த விஷயத்தில் எடப்பாடி செய்தது மிக சாதுர்யமான நடவடிக்கை என்றும் சொல்கிறார்கள் மூத்த பத்திரிக்கையாளர்கள். ஓபிஎஸ் போன வெற்றிடத்தை தென்மாவட்டத்தில் உதயகுமார், செல்லூர் ராஜுவை வைத்து சரிகட்ட எடப்பாடி பழனிசாமி முயன்றுள்ளார் என்றும் பத்திரிக்கையாளர்கள் சொல்கிறார்கள்,

தவறவிட்ட ஓபிஎஸ்
இதனிடையே மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் அதிமுக குறித்து கூறுகையில், "2017ல் முதல்வராக ஓ பன்னீர்செல்வம், சசிகலாவிற்காக விட்டுக்கொடுத்துவிட்டு அமைதியாக இருந்திருந்தால் அடுத்த சில நாட்களில் அவரே மீண்டும் முதல்வராக வாய்ப்பு இருந்திருக்கும். மாறாக யாரோ சொல் பேச்சு கேட்டு தர்ம யுத்தம் தொடங்கியதால், பன்னீர்செல்வத்திற்கு போக வேண்டிய முதல்வர் பதவி எடப்பாடி பழனிசாமிக்கு சென்றதாகவும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அவர் அடித்து ஆடுகிறார்.

ஆதரவாளர்கள் அதிகரிப்பு
சரியாக காய் நகர்த்தி டிடிவி தினகரனை ஒதுக்கிய எடப்பாடி பழனிசாமி,அடுத்தாக சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவையும் சேர்த்துக் கொள்ளாமல் கட்சியை கட்டுப்பாட்டில் வைத்தார். எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்கள் எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுத்து கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு சென்றார் ஆனால் அந்த சமயத்தில் துணை முதல்வராக பொறுப்பு பெற்ற ஓ பன்னீர்செல்வம் தன்னை பற்றி மட்டும் யோசித்து ஆதரவாளர்களை கைவிட்டுவிட்டதாக அப்போதே புகார் எழுந்தது. இதனால் ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்கள் என்று பிரிந்து இருந்த அதிமுகவில், மெல்ல மெல்ல எடப்பாடி ஆதரவு அணி அதிகமாகிக்கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் எடப்பாடி பக்கமே 90 சதவீதம் நிர்வாகிகள் வந்தனர்.

எதிர்க்கட்சி தலைவர்
இதையடுத்து சட்டசபை தேர்தலின் போது, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த பெரும்பான்மை நிர்வாகிகள் முன்னிறுத்திய போது, ஓ பன்னீர்செல்வத்தால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அவர் அப்போது விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை வந்தது. அப்போது வேட்பாளர்கள் தேர்விலும் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருந்தது. இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் பதவி விவகாரத்திலும் எடப்பாடியின் கையே ஓங்கியது.

ஒற்றை தலைமை
ஒரு கட்டத்தில் இரட்டை தலைமையால் தோற்றம் என்ற கருத்து அதிமுகவில் அதிகம் பரவியது. ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிரான விமர்சனங்களும் வந்தது. இதையடுத்து அவரை மாற்றவேண்டும் என்று போர்க்கொடி உயர்ந்தது. இதை சரியாக பயன்படுத்திக்கொண்ட எடப்பாடி ஒற்றை தலைமையாக உருவெடுக்க விரும்பினார். அதற்கான வியூகத்தை வகுத்தவர் அதில் தற்போது அதில் நீதிமன்ற தீர்ப்பு மூலம் ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டார். ஆனால் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவுவட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்த நிலையில் மக்கள் மன்றத்தில் சென்று நீதி கேட்கப்போவதாக கூறியிருக்கிறார். இது எந்த அளவிற்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" இவ்வாறு மூத்த பத்தரிக்கையாளர் ஒருவர் கூறினார்.












Click it and Unblock the Notifications