மாதவிடாய் நாட்களில் பெண்கள் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினால் பட்டு போகுமா?
சென்னை: மாதவிடாய் நாட்களில் தண்ணீர் ஊற்றினால் செடிகள் பட்டுப் போகுமா? என்பதை தெரிந்து கொள்ளலாம். அது போல் மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஊறுகாய்களில் கை வைக்கக் கூடாது என்றெல்லாம் பெரியவர்கள் சொல்வார்கள்.
இதுகுறித்து சமூகவலைதள பக்கத்தில் ஆபுத்திரன் என்பவர் கூறியிருப்பதாவது: இது மிகவும் அற்புதமான மற்றும் உன்னதமான கேள்வி.. IAS தேர்வில் கேட்குமளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கேள்விக்கு 'ஆம்' என்று பதில் சொல்பவர்களைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது.

ஏன்.. பொது கழிப்பிட சுவற்றில் தழைத்து வளரும் அரச மரத்தை யாரும் பார்த்ததில்லையா?.. எல்லா கழிவுகளும் கலந்து செல்லும் சாக்கடை நீரில் செழித்து வளரும் வேப்ப மரத்தை யாரும் பார்த்ததில்லையா?.. இறந்த நாயை புதைத்து அதற்கு மேல் வளர்ந்த வில்வ மரத்தை நான் பார்த்திருக்கிறேன். தெருவோர குப்பை கொட்டும் இடத்தில் செழித்து வளரும் செடிகளை நான் பார்த்திருக்கிறேன், தினமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.. அந்த இடத்தில் ஆணுறை முதற்கொண்டு மாதவிடாய் பேட்'களையும் தினமும் கொட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த செயலை அனைத்து மக்களும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
மனித உயிருக்கு இன்றியமையாத ஆக்சிஜனை வெளியேற்றும் அனைத்து மரங்களுமே புனிதமானது தான்.. வேம்பு, அரசு, வில்வ மரங்களும் துளசி செடிகளும் பூஜை மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திற்கு பயன்படுவதால், அந்த காலத்தில் அதை தேவையின்றி வெட்டுவதோ அசுத்தப்படுத்துவதோ கூடாது என்றார்கள் அவ்வளவே.. அரச மரம் மற்றும் வேப்ப மரங்களின் அடிப்பகுதியில் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பவர்கள் யாரும் அழிந்து போய்விடவில்லை..
மனித உயிர் உருவாகும் உன்னதமான கருமுட்டைக் கழிவுகள் வெளியேறும் நாட்களில் பெண்களுக்கு உடல் உபாதைகள் அதிகம்.. TV விளம்பரங்களில் காட்டப்படுவதை போல எந்தப் பெண்ணும் இது போன்ற நாட்களில் முக மலர்ச்சியுடன் இருப்பது கிடையாது. அவர்களுக்கு ஓய்வு வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த மூன்று நாட்கள் கணக்கெல்லாம். அதுவும் அது போன்ற நாட்களில் பெண்களுக்கு பிடித்த உணவு வகைகளை அந்த பெண்ணின் வீட்டார் தயார் செய்து சாப்பிட கொடுப்பார்கள்.
அவ்வளவு ஏன்.. பழந்தமிழர்கள் இந்த மாதவிடாய் இரத்தத்தை ஒரு பாத்திரத்தில் சேமித்து வயல்களில் தெளிப்பார்களாம்.. பயிர் செழித்து வளரும் என்ற நம்பிக்கையில் அப்படிச் செய்வார்களாம். அதுவே காலப்போக்கில் சில அதிமேதாவித்தனத்தால் இப்படி மாறி விட்டது. ஆதி கால கல்வெட்டுகளில் இதற்கு சான்று உள்ளது. சாக்த வழிபாட்டில் மாதவிடாய் ஏற்படும் பெண்களை பூஜிப்பார்களாம்.. இது போன்ற நாட்களில் எரிச்சலும் கோபமுமாக இருக்கும் பெண்களின் மனதை குளிர வைப்பதற்கு சிறப்பு பூஜைகளும் செய்திருக்கிறார்கள்..
மாதவிடாய் அசுத்தம் என்று யார் சொன்னாலும் அதை காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள் சகோதர சகோதரிகளே.. மனித உடலில் ஒரு அவுன்ஸ் மலம் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும்.. அதை வயிற்றில் சுமந்து கொண்டு தான் மக்கள் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று வருகிறார்கள்.
சிறுநீர் மற்றும் மலம் வெளியேறும் உந்துதலை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.. ஆனால் மாதவிடாய் கழிவு வெளியேறும் உந்துதலை எவ்வளவு முயன்றாலும் கட்டுப்படுத்த முடியாது.. அது தானாக பெண்களின் விருப்பு வெறுப்பின்றி வெளியேறும்.. அதனால் தான் பெண்களை அந்த நாட்களில் ஓய்வாக ஒரு இடத்தில் இருக்கச் சொன்னார்கள்.
பெண்களின் மாதவிடாய் தீட்டு என்று பெருவெடிப்பு (Big-Bang) நிகழ்விற்கு காரணமான இயற்கை எங்கும் சொல்லவில்லை. பல கோடி வருடங்களுக்கு முன்னால் தோன்றிய கிரகங்களும் சொல்லவில்லை..
சட்டத்திற்கு புறம்பாக லஞ்சம் வாங்கி சொத்து சேர்க்கும் வீடுகளில் துளசிச் செடி செழித்து வளரும்.. அதிகாரத்தின் துணை கொண்டு அபகரித்த நிலத்தில் வேம்பு, வில்வம், அரசு போன்ற மரங்கள் செழித்து வளரும்.. ஆனால் மாதவிடாய் நாட்களில் தண்ணீர் ஊற்றினால் பட்டு போய் விடுமா?.. அரச மரத்திலும் வேப்ப மரத்திலும் தூக்குப் போட்டு சிலர் இறந்த பின்னும் அந்த மரங்கள் அப்படியே தானே இருக்கின்றன.
இந்த காலத்திலும் மாதவிடாய் தீட்டு என்று சொல்லிக் கொண்டு பல பெண்களே தாம் பெற்ற பெண் குழந்தைகளை பாடாய் படுத்துவதைப் பார்ப்பதற்கு வேதனையாய் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications