மாணவர்கள் அரசியல் அறிவு பெற்றால் பிழைப்பில் மண் விழும் என்பதால் வந்த தந்திரமே இது.. உதயநிதி கண்டனம்
சென்னை: மதச்சார்பின்மை, குடியுரிமை, கூட்டாட்சி போன்ற பாடங்கள் நீக்கப்பட்டிருப்பதற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால், சில பாடங்கள் குறைக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்தது. இதனடிப்படையில் மதச்சார்பின்மை, குடியுரிமை, கூட்டாட்சி போன்ற பல பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. 11 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் (Political Science) பாடத்தில் இடம்பெற்றிருந்த கூட்டாட்சி (Federalism), குடியுரிமை (Citizenship), தேசியம் (Nationalism), மற்றும் மதச் சார்பின்மை ஆகிய அத்தியாயங்கள் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளன. மேலும், "உள்ளாட்சி அரசு நிர்வாகம் ஏன் வேண்டும்? (Why do we need Local Governments?), இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி (Growth of Local Government in India)" ஆகிய அத்தியாயங்களையும் மத்திய அரசு நீக்கி உள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,
"அப்போது அறவே படிக்காதே என்றவர்கள் இப்போது 11-ம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்தில் இதை இதைப் படிக்காதே என்கிறார்கள். மாணவர்கள் அரசியல் அறிவு பெற்றால் பிழைப்பில் மண் விழும் என்பதால் வந்த தந்திரமே இது. குடியுரிமை, கூட்டாட்சி, மதச்சார்பின்மையோடு, வாய்க்கு வாய் பேசும் தேசியவாதமும் கூடாதாம்.
கல்வியில் அரசியல் வேண்டாம் அரசியலில் கல்வி கற்போம்' என உருட்டும் அமைச்சருக்குக் கூட்டாட்சியும், மதச்சார்பின்மையும்தான் அரசியல் என்பது தெரியாதோ. போலிகளுக்கு எல்லா நேரமும் கட்டைவிரல்கள் கிடைத்திடாது. சமயத்தில் கலைஞர் சொன்னது போல் பட்டை தான் உரியும்". என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications