வீழ்ந்தாலும் வீரன் யார்? ஆண்டாலும் துரோகி யார்? மறக்க முடியாத கருணாநிதியின் மேடைப் பேச்சு!
சென்னை: தனது அலங்கார வார்த்தைகளால் தொண்டர்களின் அடிமனம் வரைப் போய் சேர்ந்தவர் மு.கருணாநிதி. அவர் மறைந்தாலும் அவரது பேச்சுகள் இன்னும் அவரது தொண்டர்களின் நெஞ்சத்தை விட்டு மறையாமல் இருந்து வருகிறது. அவர் பேசிய பேச்சுகளில் இன்று வரை ஹைலைட் ஆக இருக்கும் இரண்டு பேச்சுகள் இருந்து வருகின்றன. அந்தப் பேச்சுகள் எவை? ஏன்?
திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி மறைந்து 6 ஆண்டுகளாகிவிட்டது. தமிழக அரசியல் வரலாற்றில் மறக்கவே முடியாத பல பேச்சாளர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியை தங்களின் பேச்சில் கடைப்பிடித்தார்கள். அதைக் கேட்ட அவர்களது தொண்டர்கள் உற்சாக வெள்ளத்தில் தத்தளித்திருக்கிறார்கள். அண்ணாதுரை, தனது தொண்டர்களை 'தம்பி' என உரிமையோடு அழைத்தார். அதற்கு முன்பாக தொண்டர்களை உறவு முறை வைத்து அழைத்த வேறு தலைவர் ஒருவர் இருந்ததில்லை.

காமராஜர் பேச்சில் பெரிய அலங்காரம் இருக்காது. ஆம், இல்லை என்பது போல வெட்டு ஒன்று துண்டு இரண்டு என அவர் பேசுவார். மேடைக்காக இல்லாமல் யதார்த்தம் அவரது பேச்சில் அதிகம் வெளிப்பட்டது. காங்கிரஸ் கட்சியிலிருந்த சத்திய மூர்த்தியைப் பலரும் இன்றைக்கு அறிந்திருப்பார்களா எனத் தெரியவில்லை. அவர் சீரான நடையில் தெளிவாகப் பேசுவார் என்று பலர் எழுதி இருக்கிறார்கள்.
அதேபோல திராவிட இயக்க தலைவர்களில் ஈவெகி சம்பத். தென்றல் தழுவும் இவரது பேச்சில் இனிமை இருக்கும். கடும் சொற்கள் இருக்காது. நாகரீகமான பேச்சாளர் எனப் பெயர் எடுத்தவர் அவர். கண்ணதாசன் பேச்சு எப்போதும் நகைச்சுவை அதிகம் இருக்கும். கூடவே உவமைகளை அள்ளி அடுக்குவார்.
பெரிய அளவு பழமைவாத சிந்தனையை நடுவீதியில் போட்டு உடைத்த பேச்சாளர் ஈ.வெ.ராமசாமி என்ற பெரியார். அவர் மக்கள் மொழியில் எந்த மாற்றமும் இல்லாமல் பேசினார். ஆனால், இந்த வரிசைகளில் எந்தவித சாயலும் இல்லாமல் தனக்கென தனி பாணியைக் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றவர் கலைஞர் மு கருணாநிதி. சொல்லப் போனால் திமுகவை தன் குரல் வளத்தால் வளர்த்தவர். அவரது பிரச்சார உரைகளை அண்ணாதுரையே அடிக்கோடு போட்டுப் பாராட்டி இருக்கிறார்.
அவர், உள்ளத்தில் அழியாத ஓவியமாக நிலைத்துவிட்ட என் உயிரினும் மேலான உடன்பிறப்புகள்' என்று முதல் வார்த்தையை மேடையில் உச்சரித்தால் அந்தக் காலத்தில் கூடிய நின்ற அவரது தொண்டர்கள் உற்சாகக் கடலில் தத்தளிப்பார்கள். அவர் கவிதை அரங்கங்களில் கலந்து கொண்டு கவிதை படித்தால் விசில் சத்தம் விண்ணைப் பிளக்கும். அவர் கலைவாணர் அரங்கத்தில் கலந்து கொண்டு படித்த கவிதை வரிகள் பலரது மனதில் இன்று மறக்க முடியாத பேச்சாக இருக்கிறது. அந்த விழாவில், 'காதில் விழுகிறது சிலர் பேரின் கேலி சிரிப்பு. கவியரங்கம் ஒருகேடா கழகத்திற்கு..? விழா நடத்தச் சிறிதேனும் வெட்கம் இல்லையோ இவர்களுக்கு? வெற்றி பெற்ற நாமிங்கே வீர வாள் சுழற்றி நிற்க, வீணர்களுக்கு என்ன முப்பெரும் விழா வேண்டிக் கிடக்குதென.. ஆணவ குரலொன்று கேட்கிறது அங்கே? விளக்கமொன்று அவர்களுக்கும் உங்களுக்கும் சொல்வேன் நான்.. விளக்கை அணைத்துவிட்டு வீட்டிற்குப் புகுந்த திருடன், அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு அகப்படாமல் ஓடியதைப் போல்.. அருப்புக்கோட்டை, நெல்லை தொகுதிகளை வென்றுவிட்டார். இதற்குத்தான் நான் முன்பே சொன்னேன்.. இந்த இடைத்தேர்தல் எண்ணம் எள்முனையும் வேண்டாம் என்று.
இருந்தாலும் போர்க் களத்தில் விழுப்புண் பெறுவதே வீரமென்று இனிய உடன்பிறப்புக்கள் எல்லோரும் இருகருத்துக்கு இடமின்றி காரணத்தால், பணநாயகப் படையை எதிர்த்து நமது ஜனநாயகப் படை மோதிற்று. மறைந்து நின்று மாவீரன் வாலியை வீழ்த்திய மாண்புமிகு ராமச்சந்திரனை மாவீரன் என்று போற்ற மகாகவி கம்பனே தயங்கினால் என்றால்..? மாண்டாலும் வெற்றி வாலிக்கு தானே? ஆண்டாலும் அவன் தம்பி சுக்ரீவன் துரோகிதானே?" என்று கருணாநிதி கிண்டலாக எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடந்த இடைத்தேர்தல் குறித்து மறைமுகமாக இடித்துரைத்துப் பாடிய கவிதை பேச்சு இன்றுவரை அவரது தொண்டர்களை உற்சாக வெள்ளத்தில் மூழ்கடித்து வருகிறது.
1986-ம் ஆண்டு அருப்புக்கோட்டை, நெல்லை ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத் தேர்தல்கள் நடைபெற்றன. இத்தேர்தலில் திமுகவின் இன்றைக்கு திமுக எம்பியாக இருக்கும் தமிழச்சியின் அப்பா தங்கபாண்டியன் மற்றும் ஏ.எல்.எஸ் ஆகியோர் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினர். அந்தத் தோல்வி திமுகவினரை உற்சாகம் இழக்கச் செய்திருந்தது. அரசியல் களத்தில் கருணாநிதியால் வீழ்த்த முடியாத தலைவராக எம்ஜிஆர் தொடர்ந்து வந்தார். திமுக தொண்டர்களின் சோர்வுக்கு மருந்திட்டு அவர்களை தன் பக்கம் தக்கவைக்கக் கருணாநிதிக்கு கை வந்த கலையாக இருந்த ஒரே ஆயுதம் பேச்சுதான்.
ஆகவே இடைத்தேர்தல் தோல்வியை அடுத்து 1986ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் எம்.ஜி,ஆர் பெற்ற வெற்றியை பணநாயக வெற்றி என்றும் வாலிதான் வீரன் ராமச்சந்திரன் அல்ல என்று சிலேடையாக எம்.ஜி.ஆரை விமர்சித்து கருணாநிதி கவிதை பாடினார். அந்த ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டு அவரது தொண்டர்கள் மன மகிழ்ந்து வீடு திரும்பினர்.
இதே ஆண்டு கருணாநிதி கும்பகோணத்தில் ஒரு தனியார் மருத்துவமனையைத் திறந்து வைத்துப் பேசினார். அந்தப் பேச்சும் இன்றுவரை அவரது தொண்டர்களால் நினைவுகூரப்பட்டு வருகிறது. அந்தக் காலத்தில் எம்ஜிஆரை அவரது தொண்டர்கள் 'இதய தெய்வம்' என்று அழைத்து வந்தனர். அதைத் தொடர்ந்து கருணாநிதியையும் அப்படி கடவுளுக்கு இணையாக வைத்து திமுகவினர் பேசத் தொடங்கினர். அதைக் கருணாநிதி இந்த விழாவில் கண்டித்தார். தான் ஒரு சாதாரண மனிதன் என்று சொன்னார்.
பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் தனக்கு இரண்டு நாட்களாகக் காய்ச்சல் என்று சொன்ன அவர், கடவுளுக்குக் காய்ச்சல் வருமா என்றார்? கடவுளுக்கு கிட்னி trouble வருமா? ஹார்ட் problem வருமா? என்றார். ஆகவே தன்னை கடவுள் அளவுக்குப் புகழ வேண்டாம் என்றும் அப்படிப் புகழ்ந்து தன்னையும் கடவுளையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம் என்றும் கிண்டலாகப் பகுத்தறிவு பிரச்சாரத்தை தன் பேச்சின் இடையே இழைய விட்டார் கருணாநிதி.
இப்படி இறுதிக் காலம் வரை கருணாநிதி தன் பேச்சாற்றலால் மக்களை வசீகரித்தார். தனது பேச்சில் ஒரு பகுத்தறிவு கருத்து, கிண்டல், நையாண்டியை இடையே இடையே விளையாட விட்டார். அவரது பாணியில் பேசுவதற்கு இப்போது அவரது கட்சியில் ஒருவரும் இல்லை என்பதே அவரது தனித்துவத்திற்குக் கிடைத்த வெற்றி!
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications