Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் பதவியையே துறந்து தமிழிசை களமிறக்கப்பட்டுள்ளாரே.. நிர்மலா, ஜெய்சங்கர் ஏன் போட்டியிடவில்லை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் எல்.முருகன், சிட்டிங் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை தேர்தலில் களமிறக்கி விட்டுள்ள பாஜக தலைமை, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் போன்றோரை ஏன் தமிழ்நாட்டில் போட்டியிட வைக்கவில்லை என்ற விமர்சனங்கள் அரசியல் களத்தில் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டில் வாக்கு வங்கியை அதிகரிக்கும் நோக்கத்தில் தான் ஆளுநராக இருந்த தமிழிசை உட்பட பெரும் தலைகளை களத்தில் இறக்கியுள்ளது பாஜக தலைமை. ஆனால், தேசிய அளவில் தமிழ்நாட்டின் முகங்களாக இருக்கும் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோரை லோக்சபா தேர்தலில் போட்டியிட வைத்து பாஜகவின் வாக்கு வங்கியை இன்னும் உயர்த்தாமல், ஸ்ட்ரைட்டாக அவர்களை ராஜ்யசபா மூலமாகவே அமைச்சரவையில் வைத்துக் கொள்வது ஏன் என்பது பலரது கேள்வியாக இருக்கிறது.

Why BJP did not field Nirmala Sitharaman and Jaishankar in Lok sabha election


முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்: கடந்த நான்கரை ஆண்டு காலமாக தெலுங்கானா மாநில ஆளுநராகவும், 3 ஆண்டுகளாக புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பும் வகித்து வந்தார் தமிழிசை. இந்நிலையில், கடந்த மார்ச் 18ஆம் தேதி தமிழிசை தான் வகித்து வந்த இரு மாநில ஆளுநர் பதவிகளையும் ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமா ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

இதையடுத்து தமிழிசை சௌந்தரராஜன் தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து தொகுதி முழுக்க வீதி வீதியாகச் சுற்றி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் தமிழிசை. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே தமிழிசை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தேர்தலில் களம் காண இறங்கியுள்ளார்.

2 மாநிலங்களில் ஆளுநராக கோலோச்சியவர் தமிழிசை சௌந்தரராஜன். இப்போது அரசியல் களத்திற்கு வந்துள்ள தமிழிசை, கடும் வெயிலில் நடந்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். கடை கடையாக ஏறி இறங்கி வாக்கு சேகரித்து வருகிறார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன்: மத்திய இணை அமைச்சர் எல். முருகன், கடந்த 2021 சட்டசபைத் தேர்தலின்போது மாநில பாஜக தலைவராக பதவி வகித்தார். அப்போது தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன், வெற்றி வாய்ப்பை இழந்தார். இதைத் தொடர்ந்து அவர் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி. ஆனார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மற்றும் மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையும் நிலையில், மீண்டும் அவர் ராஜ்யசபா வேட்பாளராக, மத்தியப் பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நீலகிரி (தனி) தொகுதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

எல்.முருகனின் ராஜ்யசபா உறுப்பினர் பதவி இன்னும் 6 ஆண்டுகள் உள்ள நிலையில், மீண்டும் லோக்சபா தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார் எல்.முருகன். மத்திய அமைச்சராக இருக்கும் எல்.முருகன், நீலகிரி முழுக்க அலைந்து திரிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன்: ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுகவில் இருந்து விலகிய நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். பாஜகவின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் அவர் இருந்து வருகிறார்.

நயினார் நாகேந்திரனின் எம்.எல்.ஏ பதவி காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் முழுமையாக உள்ள நிலையில், நெல்லை தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் நயினார் நாகேந்திரனையே வரும் மக்களவைத் தேர்தலில் நெல்லை லோக்சபா தொகுதியில் களமிறக்கியுள்ளது பாஜக. ஏற்கனவே எம்.எல்.ஏ பதவியில் இருக்கும் நயினார் நாகேந்திரன் மீண்டும் தேர்தல் பணிகளில் ஊண் உறக்கம் இன்றி உழைத்து வருகிறார்.

மாநில தலைவர் அண்ணாமலை: பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்து வரும் அண்ணாமலை, லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன் என தொடர்ந்து கூறி வந்தார். தமிழ்நாட்டில் கட்சியை வளர்ப்பதற்காகத்தான் நான் வந்துள்ளேன், டெல்லிக்கு செல்லும் திட்டம் இல்லை எனக் கூறி வந்தார் அண்ணாமலை.

2026 சட்டமன்றத் தேர்தல் தான் தனது இலக்கு என்ற போக்கில் சென்று கொண்டிருந்தவரை இந்த லோக்சபா தேர்தலில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் களம் இறக்கியுள்ளது பாஜக தலைமை. கோவையில் கடும் போட்டி நிலவும் நிலையில் எஸ்பி வேலுமணி ஆதரவு பெற்ற அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனையும், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரையும் எதிர்கொள்வதில் திணறி வருகிறார் அண்ணாமலை.

மிகப்பெரிய 'ரிஸ்க்’.. “வந்தா மலை”.. பெரும் தலைகளை 'பணயம்’ வைக்கும் பாஜக தலைமை! பிளானே இதுதான்!

தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் நோக்கத்தில் ஆளுநராக இருந்த தமிழிசை, சிட்டிங் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை தேர்தலில் களமிறக்கி விட்டுள்ள பாஜக தலைமை, தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோரை தேர்தலில் நிறுத்தாதது விமர்சனங்களைக் கிளப்பி விட்டுள்ளது.

ஹெவி வெயிட்கள் சிலர் மிஸ்ஸிங்: பாஜக தங்கள் வளர்ச்சியை காட்டவே 'ஹெவி வெயிட்’களுக்கு தமிழ்நாட்டில் சீட் கொடுத்துள்ளது. மத்திய அமைச்சர்களாக இருக்கும் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் போன்றோரையும் தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்களாக ஆக்கியிருந்தால், இன்னும் பாஜகவின் மவுசு அதிகரித்திருக்கக் கூடுமே என்பது பாஜக அடிமட்டத் தொண்டர்களின் கேள்வியாக உள்ளது.

எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரடியாக போட்டியிட வைக்கப்பட்டு அவர்கள் இந்த வேகாத வெயிலில் வியர்வை சிந்தி பிரச்சாரம் செய்து அலைகிறார்கள். ஆனால், ஜெய் சங்கர், நிர்மலா சீதாராமன் ஆகியோர் ஈஸியாக ராஜ்யசபா உறுப்பினராகி அமைச்சர்களாக உள்ளார்களே என்ற கேள்வி பாஜக தொண்டர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+