"விருதுநகர் சம்பவம்".. இரவே டிஜிபிக்கு பறந்த உத்தரவு! மறுநாளே அவையில் தகித்த முதல்வர்.. என்ன காரணம்?
சென்னை: விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் முதல்வர் ஸ்டாலின் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக பிரமுகர் ஹரிஹரன் என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்த சமயங்களை வீடியோவாக எடுத்த ஹரிஹரன் அதை திமுகவில் உறுப்பினராக இருக்கும் ஜீனைத் அகமது என்பவரிடம் காண்பித்து உள்ளார்.
இதையடுத்து அந்த வீடியோவை மேலும் 4 பள்ளி மாணவர்களிடமும் ஹரிஹரன் காட்டி இருக்கிறார். பின்னர் இந்த வீடியோவை வைத்து அந்த பெண்ணை 6 பேரும் மிரட்டி பல மாதங்கள் வன்புணர்வு செய்துள்ளனர்.

மிரட்டி வன்புணர்வு
இந்த விஷயம் தெரிந்த மாடசாமி என்ற பக்கத்து வீட்டு நபரும் அந்த கும்பலோடு சேர்ந்து பெண்ணை வன்புணர்வு செய்துள்ளனர். இந்த நிலையில்தான் அந்த பெண் விருதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஹரிஹரன் உட்பட 7 பேரும் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. கைது செய்யப்பட்டது திமுக நிர்வாகி என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக மீது அவப்பெயர்
இந்த விவகாரத்தில் திமுக நிர்வாகி சம்பந்தப்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆளும் தரப்பிற்கு இதனால் கடும் அவப்பெயர் ஏற்படும் என்றும் கூறப்பட்டது. திமுக எம்பி கனிமொழி ஆகியோரும் கூட இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பொள்ளாச்சி பாலியல் குற்றத்தை திமுக கடுமையாக எதிர்த்த நிலையில், அதே போன்ற குற்றத்தில் திமுக நிர்வாகி சிக்கியதை வைத்து பாஜகவும் விமர்சனம் செய்ய தொடங்கியது.

பாஜக ஸ்கோர்
பொள்ளாச்சியை விட இது பெரிய குற்றம் என்று பாஜகவினர் விமர்சனம் செய்து வந்தனர், பாஜக தலைவர் அண்ணாமலையோ, விருதுநகரில், ஒரு கும்பல் வீடியோ மூலம் பிளாக்மெயில் செய்து, 22 வயது பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்த அவலச் செய்தியறிந்து அதிர்ச்சியும் சோகமும் அடைந்தேன். இதைவிட கூடுதல் அதிர்ச்சியளிக்கும் விஷயம் - இந்த வெட்கக்கேடான செயலுக்கு மூளையாக இருந்தது ஒரு உள்ளூர் திமுக பிரமுகர் . இந்தக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது அவசியமே, ஆனால், தற்போது திமுக அரசில் ஒட்டுமொத்த காவல் துறையை மேம்படுத்துவதே, மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும்.

நெகட்டிவ்
முதல்வர் ஸ்டாலின் தனது கட்சிக்காரர்களின் பிடியிலிருந்து உள்ளூர் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். திமுகவிற்கு எதிராக இது அப்படியே நெகட்டிவாக திரும்பி வந்தது. அதிமுகவினரும் இதை பற்றி கடுமையாக விமர்சனங்களை செய்து வந்தனர். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இதை விமர்சித்து இருந்தார். அதில், விருதுநகரில் இளம் பெண் ஒருவரை திமுக பிரமுகர் உட்பட 8பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரது வாழ்வை சீரழித்துள்ள கொடுஞ்செய்தி கேட்டு பெருவருத்தம் அடைந்தேன், கண்துடைப்பு கைது நடவடிக்கை மட்டுமில்லாமல்,திமுக அரசு இக்குற்றத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் தாங்கள் பெண்களுக்கு அளிக்கும் பாதுக்காப்பா?, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இரவே உத்தரவு
இந்த நிலையில்தான் நேற்றே டிஜிபி சைலேந்திர பாபுவிடம் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக முக்கிய உத்தரவு பிறப்பித்தார். அதில், விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் வேகமாக செயல்பட வேண்டும். நேரடியாகவும், மறைமுகமாகவும் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். அனைத்து குற்றவாளிகளையும் உடனே கைது செய்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அவையில் கடுமை
அதோடு இன்றும் சட்டசபையில் விருதுநகர் பாலியல் சம்பவம் பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசினார். அதில், பொள்ளாச்சி வழக்கு போல் விருதுநகர் வழக்கு இருக்காது. வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்குப்போல் இந்த வழக்கு இருக்காது. விருதுநகர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மிக வேகமாக முடிக்கப்பட்ட வழக்கு என்பதாக இந்த வழக்கு இருக்கும். 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும், என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

வேகமான நடவடிக்கை
பெண்கள் விஷயத்தில் அரசுக்கு நற்பெயர் இருக்கிறது.. ஆனால் இந்த விவாகரம் எந்த வகையிலும் தவறான விமர்சனத்தை அரசு மீது கொடுத்துவிட கூடாது. அரசுக்கு அவதூறு ஏற்பட கூடாது என்பதால் முதல்வர் ஸ்டாலின் வேகமாக இந்த உத்தரவுகளை பிறப்பித்ததாக தெரிகிறது. பொள்ளாச்சி வழக்கு போல இந்த விவகாரம் பெரிதாக கூடாது. குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை கிடைக்க வேண்டும். ஆளும் தரப்பு என்பதால் குற்றவாளிகள் தப்பிக்க கூடாது என்பதால் முதல்வர் ஸ்டாலின் இப்படி வழக்கில் கண்டிப்பு காட்டியதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications