6-12க்கு ஒருநாள்.. 1-5க்கு வேறொரு நாள்.. 2 விதமான பள்ளி திறப்பு தேதிகளை ஸ்டாலின் டிக் செய்தது ஏன்?
சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி திறப்பு தேதிகள் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் பள்ளி திறப்பு தேதிகள் தள்ளி வைக்கப்பட்டதற்கு பின் பல முக்கியமான காரணங்கள் உள்ளன.
6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எதிர்பார்க்காத அளவிற்கு வெயில் உச்சம் அடைந்து உள்ளது. தினசரி வெப்பநிலை முதல்நாளை விட அதிகமாக உள்ளது. கோடையில் நிலவும் கடும் வெயில் காரணமாகவும், வெப்ப அலை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பை தள்ளிப்போட வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர்.
பொதுவாக ஜூன் முதல்வாரம் தமிழ்நாட்டில் லேசாக மழை தொடங்கும். மழை இல்லை என்றாலும் வெயில் குறையும். இதனால் மாணவர்கள் பள்ளிகள் செல்ல வசதியாக இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் இந்த முறை வெயில் குறையவில்லை. மாறாக வெயில் அதிகரித்து வருகிறது. முக்கியமாக வட தமிழ்நாட்டில் வெப்பநிலை 43 டிகிரி செல்ஸியஸ் வரை கூட உயர்ந்து உள்ளது.

இதனால் மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு செல்வது சிரமம் ஆகும். இதை கருத்தில் கொண்டே தமிழ்நாட்டில் பள்ளி திறப்பு முன்னதாக 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் வெயில் குறையாத காரணத்தால் தற்போது இரண்டாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை முடிவில் இந்த தேதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
முன்னதாகவே மே 5 அல்லது 7ம் தேதியில் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்ற போது ஜப்பானில் இருந்த முதல்வர் ஸ்டாலின் 7ம் தேதியை தேர்வு செய்தார். வெயிலை கருத்தில் கொண்டு 7ம் தேதியை அவர் தேர்வு செய்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தான் புதிய தேதிகளை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அதிகாரிகள் தீவிர ஆலோசனைக்கு பின் சில தேதிகளை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனையில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிலபஸ் முடிக்க வேண்டும். அதனால் கொஞ்சம் முன்கூட்டியே திறக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார்.
அதனால் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதி திறக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார். அதே சமயம் சிறு குழந்தைகள் வெயிலில் பள்ளிக்கு செல்ல முடியாது என்பதால் அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் தாமதமாக திறக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் , 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் வெயில் 11ம் தேதி வரை உச்சத்தில் இருக்கும், அதன்பின்தான் வெயில் குறையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் உள்ளிட்ட வானிலை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இது போன்ற வல்லுனர்கள் மற்றும் வானிலை அமைப்பின் கருத்தையும் கணக்கில் கொண்டு திறப்பு தேதிகள் 11ம் தேதி பின் 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
வெயில் குறையவில்லை: தமிழ்நாட்டில் மே மாதம் முடிந்தும் இன்னும் வெயில் குறையவில்லை. மாறாக வெயில் இப்போதுதான் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி வெயில் அளவு புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. எதிர்பார்க்காத அளவிற்கு வெயில் உயர்ந்து கொண்டே செல்கிறது.

சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது. சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
சென்னையில் பகல் நேரங்களில் 43 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை கூட பல இடங்களில் நிலவுகிறது. இந்த நிலையில்தான் வெப்பநிலை குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன












Click it and Unblock the Notifications