செங்கோட்டையன் பெயரை சொல்லாமல்.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை.. அதிர்ந்து போன எடப்பாடி.. அவையில் பரபர
சென்னை: சபாநாயகர் அப்பாவுவிற்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று பேசினார். சட்டசபையில் அவர் அதிமுக மோதல் தொடர்பாக பேசிய விவகாரம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. சபாநாயகரை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் ஆர்பி உதயகுமார்.
35க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்றதால் தீர்மானம் விவாதத்துக்கு ஏற்கப்பட்டது. இந்த விவாதத்தில், சபாநாயகர் பலமுறை ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். "நாங்கள் வெளிநடப்பு செய்தால், சபாநாயகர் அப்பாவு எங்களைப் பார்த்து நகைக்கிறார்.'போங்க போங்க' என கிண்டல் செய்கிறார் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

வாக்கெடுப்பு தோல்வி
இந்த வாக்கெடுப்பில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு செங்கோட்டையன் ஆதரவு தெரிவித்தார். ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஆனாலும் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. 2 முறை நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்த நிலையில், டிவிஷன் முறையில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. ஆனால் இரண்டிலும் தீர்மானம் தோல்வி அடைந்தது.
ஸ்டாலின் பேச்சு
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார், அதில் சபாநாயகர் அப்பாவு ஜனநாயக நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மற்றவர்கள் மனம் வருந்தாத வகையில் தன்னுடைய நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டவர். நேர்மையான கருத்துகளை ஆணித்தரமாக எடுத்துக் கூறக்கூடியவர்.
கனிவானவர், அதே நேரத்தில் கண்டிப்பானவர். இவை இரண்டுமே பேரவைக்குத் தேவை என்பதை ஏற்றுக்கொள்வீர்கள். இவை இல்லாவிட்டால் பேரவை கண்ணியத்தோடு, கட்டுப்பாடோடும் இருக்காது.எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது பற்றோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு. அதிமுக ஆட்சியில் சபாநாயகர்கள் நடந்துகொண்டது போல் தற்போதையை பேரவைத் தலைவர் அப்பாவு நடந்துகொள்வதில்லை.
அரசு மீது குற்றம், குறை கூற முடியாதவர்கள், இவ்வாறு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். எனது தலையீடோ, அமைச்சர்களின் தலையீடோ இல்லாத வகையில்தான் சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார். இந்த அரசின் மீது குற்றம், குறை கூற வாய்ப்பில்லாததால் இப்படி ஒரு தீர்மானமா? உட்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தால், அதை திசைதிருப்ப இப்படி ஒரு தீர்மானமா? என்று சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.
செங்கோட்டையன் எடப்பாடி மோதல்
செங்கோட்டையன் பெயரை குறிப்பிடாமல் ஸ்டாலின் இவ்வாறு பேசினார். அதிமுகவில் எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே சமீபகாலமாக உரசல் அதிகரித்திருந்தது. இருவருக்குமிடையே பேச்சுவார்த்தையும் நின்று போனது. ஆனால், இந்த முறுகல் நிலை தேவையற்றது. தலைவர்களே இப்படி உள்கட்சி பிரச்சனைகள் பொதுவெளியில் விவாதிக்கப்படுகிற அளவுக்கு நடந்து கொள்ள வேண்டுமா? என்று எடப்பாடி மற்றும் செங்கோட்டையனிடம் சீனியர் கள் பேசியிருக்கிறார்கள்.
இதனை செங்கோட்டையன் உணர்ந்தாலும், எடப்பாடி உணர்ந்தமாதிரி தெரியவில்லை. இந்த நிலையில், கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் 82 பேருடன் காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்தினார். இதில் செங்கோட்டையன் கலந்துகொண்டார். ஆலோசனைக் கூட்டத்தில் பலரிடமும் பேசினார் எடப்பாடி. ஆனால், செங்கோட்டையனிடம் எதுவும் பேசவில்லை.
ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளர்களிடமும் எடப்பாடி பேசியது போல செங்கோட்டையனிடமும் எடப்பாடி விவாதித்திருந்தால் செங்கோட்டையன் கூலாகியிருப்பார். எடப்பாடி தன்னிடம் பேசுவார் என்றும், பேசினால் சகஜமாக பேச வேண்டும் என்றும், கொங்கு மண்டல குறிப்பாக ஈரோடு மாவட்ட அரசியல் பற்றி நிறைய விசயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் நினைத்திருந்தார் செங்கோட்டையன். ஆனால் எடப்பாடி அவரிடம் பேசாதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
