திடீரென கமலாலயத்திற்கு காரை திருப்பிய நிர்மலா! எதிர்பார்க்காத அண்ணாமலை! பக்கத்துல யாரு? என்ன நடந்தது
சென்னை: நேற்று பாஜக தமிழ்நாடு அலுவலகமான கமலாலயத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென வருகை புரிந்தார். இதனால் கமலாலயம் பரபரப்பாக காணப்பட்டது.
தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி மோதல் கடுமையாக நிலவி வருகிறது. தமிழ்நாடு பாஜகவில் சீனியர்களுக்கும் - புதிய நிர்வாகிகளுக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. சீரியலில் காட்டப்படுவது போல.. இவர் அவருடன் மோதல்.. அவர் இவருடன் மோதல் என்று சொல்லும் அளவிற்கு மாறி மாறி நிர்வாகிகள் மோதிக்கொண்டு இருக்கிறார்கள்.
சமீபத்தில் டெய்சி - திருச்சி சூர்யா இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இவர்கள் மாறி மாறி கெட்ட வார்த்தையில் பேசிக்கொண்ட ஆடியோ எல்லாம் வெளியானது. இதில் கடைசியில் சூர்யா பாஜகவில் இருந்து சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.

மோதல் மேல் மோதல்
அதன்பின் பாஜகவில் இருந்தே வெளியேறுவதாக சூர்யா அறிவித்தார். கட்சியை விட்டு வெளியே போன சூர்யா கட்சியில் நடக்கும் கூத்துக்களை எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டினார். கேசவ விநாயகம், எல் முருகன் ஆகியோர் அண்ணாமலையை வேலை செய்ய விடாமல் தடுப்பதாகவும் விமர்சனம் வைத்தார். இந்த விவகாரம் காரணமாக தமிழ்நாடு பாஜகவில் மோதல் உச்சம் பெற்றுள்ளது. இன்னொரு பக்கம் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என்று காயத்ரி ரகுராம் ட்விட்டரில் அண்ணாமலைக்கு எதிராக முறுக்கிக்கொண்டார்.

காயத்ரி ரகுராம்
கட்சியில் ஒருவரின் உத்தரவிற்கு மட்டுமே மதிப்பு இருக்கிறது.. கட்சியில் monopoly இருக்கிறது என்று புகார் வைத்தார். அண்ணாமலைக்கு எதிராக கடுமையான புகார்களை வைத்து.. அடிக்கடி ட்விட் செய்து வந்தார். விளைவு காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அண்ணாமலைக்கு ஆதரவாக ஐடி விங் ஒன்று இயங்குவதாகவும் காயத்ரி பெயரை குறிப்பிடாமல் சொல்லிவிட்டு போனார். தனக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக இவர் டெல்லி வரைதனக்கு நெருக்கமானவர் மூலம் புகார்களை வைத்து இருக்கிறார்.

நிர்மலா சீதாராமன்
இந்த நிலையில்தான் நேற்று பாஜக தமிழ்நாடு அலுவலகமான கமலாலயத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென வருகை புரிந்தார். இதனால் கமலாலயம் பரபரப்பாக காணப்பட்டது. நேற்று சென்னைக்கு வருமான வரித்துறை, சுங்கத்துறை ஊழியர்களுக்கான குடியிருப்பை திறக்க வந்திருந்தார் நிர்மலா சீதாராமன். இதையடுத்து திடீரென என்ன நினைத்தாரோ பாஜக அலுவலகமான கமலாலயம் வருகை புரிந்தார். அவர் வருவது திட்டத்தில் இல்லை. இதனால் அவசர அவசரமாக சென்னையில் இருக்கும் பாஜக நிர்வாகிகள் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

சீனியர்கள்
இதனால் பெரும்பாலான சீனியர்கள் நிர்மலா சீதாராமனை சந்திக்க வர முடியவில்லை. ஏபி முருகானந்தம், நாராயண் திரிப்பாதி ஆகியோர் மட்டுமே வந்தனர். கிறிஸ்துமஸ் விழாவில் இருந்த அண்ணாமலையும் அவசரமாக நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வந்தார். ஆச்சர்யமாக கரு நாகராஜனும் இந்த நிகழ்விற்கு வருகை புரிந்து இருந்தது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. இதன்பின்தான் அண்ணாமலை அங்கே வந்தார். அவரிடம் தமிழ்நாடு பாஜக குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாடு பாஜக எப்படி இருக்கிறது, உட்கட்சி பூசல் எப்படி உள்ளது, கட்சி நிர்வாகிகள் எப்படி செயல்படுகிறார்கள் என்றெல்லாம் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார்.

என்ன சொன்னார்கள்?
இதையடுத்து நிர்மலாவிடம் பேசிய நிர்வாகிகள்.. மத்திய அரசு நிறைய திட்டங்களை கொண்டு வருகிறது. ஆனால் அதற்கெல்லாம் மாநில அரசு பெரிதாக பணிகளை செய்வது இல்லை. மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு மக்களுக்கு கொண்டு செல்வது இல்லை. இது தொடர்பாக நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுகள் அனைத்து மத்திய அரசின் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக சில நிமிடம் பேசிய நிர்மலா எனக்கு ரிப்போர்ட் அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டு.. உட்கட்சி பூசல் குறித்து கேட்டறிந்துவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்று இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
