திருமா பெயரை சொன்ன போது.. அப்படியே அமர்ந்திருந்த பிரேமலதா? உண்மையில் என்ன கோபம்? கசிந்த தகவல்
சென்னை: தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து நீங்கள் பிரச்சாரத்துக்குச் செல்லக்கூடாது என தங்கள் தலைவர் திருமாவளவனிடம் விசிக தொண்டர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். திமுக கூட்டணியில் விசிக, தேமுதிக கட்சிகள் இருக்கின்றன.
இரண்டு நாட்களுக்கு முன்பு கடலூரில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் ஸ்டாலின். அந்த மேடையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான திருமாவளவன், பிரேமலதாவும் இருந்தனர். கடலூர் மாவட்டத்திற்குள் வரும் விருத்தாச்சாலம் தொகுதியில் தான் பிரேமலதா போட்டியிடுகிறார். வேட்பாளர் என்ற முறையிலும் தேமுதிக பொதுச்செயலாளர் என்ற முறையிலும் கலந்து கொண்டார் பிரேமலதா.

திருமாவளவன் பேசும் போது ஷாக்
திருமாவளவன் பேசும் போது கடலூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார். ஒவ்வொரு வேட்பாளரின் பெயரை திருமா உச்சரிக்கும் போது, அந்த வேட்பாளர்கள் எழுந்து கூட்டத்தைப் பார்த்து வணங்கினர். திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வமும், நாம் அமைச்சர் என்ற பந்தா எதையும் கட்டாமல், நாற்காலியிலிருந்து எழுந்து மக்களைப் பார்த்து வணங்கினார்.
ஆனால், பிரேமலதாவை திருமா அறிமுகப்படுத்தி அவரது பெயரை உச்சரித்த போது, நாற்காலியில் எந்தவித சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தார் பிரேமலதா. இது, முதல்வர் ஸ்டாலின் உட்பட மேடையிலிருந்த தலைவர்கள் மற்றும் கூட்டத்தின் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த அனைவரையும் ஒருவித அதிர்ச்சியைத் தந்திருக்கிறது.
ஸ்டாலின் ஆச்சர்யம்
அதேசமயம், ஸ்டாலின் பேசும் போது, பிரேமலதாவின் பெயரை சொன்னபோது, உடனே எழுந்து நின்று கூட்டத்தைப் பார்த்து கைக்கூப்பி வணங்கினார். இந்த செய்கையையும் அங்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. பிரேமலதாவின் இத்தகையை வேற்றுமையை உணர்ந்து திருமாவளவன் மிகவும் அப்-செட்டாகி விட்டார்.
பிரச்சாரம் கூட்டம் முடிந்ததும், ஸ்டாலின் கிளம்பும் போது மேடையில் இருந்த தலைவர்கள், வேட்பாளர்கள் அனைவரும் அவருக்கு வணக்கம் சொன்னார்கள். ஸ்டாலின் அருகில் வந்த பிரேமலதா, வணக்கம் வைத்த போது, ''கருத்து வேறுபாடு களை பொதுவெளியில் காட்டாதீர்கள்' என்று கூறியிருக்கிறார். மேலும், திருமாவின் முதுகில் தட்டிக்கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார் ஸ்டாலின்.
பிரேமலதா நடந்து கொண்ட விதம்
இந்த கடலூர் பொதுக்கூட்டத்தில் பிரேமலதா நடந்து கொண்ட விதம், சாதி ரீதியிலான கண்ணோட்டத்தில் அணுகப்படுகிறது. குறிப்பாக, விசிக தொண்டர்கள் பிரேமலதா மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர். அந்த கோபம்தான், திருமாவிடம், ''உங்களை அந்த அம்மையார் சாதி தலைவராக பார்க்கிறார். நீங்கள் சொல்லி நான் எழுந்து வணங்கனுமா? என்கிற சாதி திமிர் அவருக்கு ஏறியிருக்கிறது. இதை நாம் அப்படியே கடந்து செல்ல முடியாது. அதனால், தேமுதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நீங்கள் போகக்கூடாது'' என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
பிரேமலதாவின் அத்தகைய நடவடிக்கை அரசியல் களத்தில் சர்ச்சையாகி வரும் நிலையில், தேமுதிக தரப்பில் விசாரித்தபோது, ''எங்கள் அண்னியாருக்கு சாதிய வேற்றுமையெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது. கடலூர் பொதுக்கூட்டத்தில் நடந்து கொண்டதும் கூட சாதிய கண்ணோட்டத்தில் கிடையாது. திருமா மீது சின்னதாக ஒரு வருத்தம் அண்ணியாருக்கு இருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் அது.
அதாவது, திமுகவிடம் கூடுதல் சீட் கேட்டு திருமா அடம் பிடித்தார். அது அவரது உரிமை. ஆனால், கூட்டணியில் நேற்று வந்த தேமுதிகவுக்கு அதுவும் அரை சதவீத வோட் பேங்க் வைத்துள்ள தேமுதிகவுக்கு அதிக சீட்டுகளை தருவதற்காக விசிகவின் சீட்டுகளை குறைத்துக்கொள்ள திமுக சொல்வது சரியில்லை என்று திமுக தலைமையிடம் சொல்லியுள்ளார் திருமா.

பிரேமலதா கோபம்
இதே கருத்தை பேட்டிகளிலும் சொல்லியுள்ளார். இந்த கருத்து அண்ணியாருக்கு மனவருத்ததை ஏற்படுத்தியது. அதாவது, உங்களுக்கு எத்தனை சீட் வேண்டும் என திமுகவிடம் கேட்டுப்பெறுவது உங்களின் திறமை. அதற்காக, தேமுதிகவை வம்புக்கு இழுக்கக் கூடாது இல்லையா? இதுதான் திருமா மீது அண்ணியாருக்கு வருத்தம். அதுதான் அந்த மேடையில் வெளிப்பட்டது. மற்றபடி, சாதி ரீதியான கண்ணோட்டத்தில் கிடையவே கிடையாது'' என்று சொல்கின்றனர்.
ஆனாலும், தேமுதிக மீது கோபத்தை வரித்துக்கொண்டிருக்கிறது விசிக. இதன் ரியாக்சன் தேர்தல் களத்தில் எப்படி எதிரொலிக்கப்போகிறதோ?
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications