ஒன்னும் புரியலையே.. இஸ்ரேலை சரமாரியாக தாக்கி.. சட்டென ஈரானை புகழும் டிரம்ப்.. காரணம் என்ன?
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மொத்தமாக மாற்றி உள்ளார். ஈரானை கடுமையாக எதிர்த்து வந்த டிரம்ப் ஈரானுக்கு ஆதரவாக பேச தொடங்கி உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் விவகாரத்தில் தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து மாறி, ஆட்சி மாற்றத்தை தான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, ஈரான் நாட்டில் ஆட்சி மாற்றம் தேவை என்பது போல அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈரான் மீதான தடைகள் நீக்கம்
முக்கியமாக ஈரான் மீதான தடைகளை நீக்க டிரம்ப் ஒரு பக்கம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் ஈரானிடம் எண்ணெய் வாங்க சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுமதி அளிக்கவும் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல் மத்திய கிழக்கில் உள்ள நாடுகளுடனான போரை உடனே நிறுத்துங்கள். இது சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால் அங்கே நடக்கும் போர்களை உடனே நிறுத்துங்கள் என்று இஸ்ரேலுக்கு பிரஷர் கொடுக்க டிரம்ப் முடிவு செய்துள்ளாராம்.

டிரம்ப் கருத்து
நெதர்லாந்தில் நடந்த நேட்டோ மாநாட்டில் கலந்துகொள்ள விமானத்தில் சென்றுகொண்டிருந்த டிரம்ப்பிடம், ஈரான் நாட்டின் தற்போதைய ஆட்சி மாற்றப்பட வேண்டுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிரம்ப், "இல்லை, நான் அப்படி நினைக்கவில்லை. முடிந்தால் எல்லாம் அமைதியாக நடக்கட்டும் என்று விரும்புகிறேன். ஆட்சி மாற்றம் என்பது குழப்பத்தை ஏற்படுத்தும். அதிகப்படியான குழப்பங்கள் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை" என்று கூறினார்.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்திய பிறகு, ஈரான் அரசாங்கத்தை தூக்கியெறிய டிரம்ப் ஆதரவளிப்பது போல் பேசியிருந்தார். இந்த நிலையில், அவரது தற்போதைய கருத்து முரணாக இருப்பதாக கருதப்படுகிறது. அவரின் இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று டிரம்ப் தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியலில், "'ஆட்சி மாற்றம்' என்ற வார்த்தையை பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியல்ல. ஆனால், ஈரான் ஆட்சி 'ஈரானை மீண்டும் பெரிய நாடாக' மாற்றத் தவறிவிட்டால், ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது?" என்று பதிவிட்டிருந்தார்.
டிரம்ப்பின் கருத்துக்கு நட்பு நாடுகளிடையே கலவையான விமர்சனங்கள் எழுந்தன. ஏனெனில், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை ஈரானின் அணு ஆயுத திட்டத்தை சீர்குலைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது என்றும், ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக் கொண்டது அல்ல என்றும் மூத்த அதிகாரிகள் வலியுறுத்தி இருந்தனர். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், "எங்கள் நோக்கம் ஆட்சி மாற்றம் அல்ல" என்று கூறியிருந்தார். அதே கருத்தை துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸும் எதிரொலித்தார். இப்படிப்பட்ட நிலையில்தான் டிரம்ப்பும் தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார்.
இஸ்ரேல் மீது விமர்சனம்
இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் டெஹ்ரானில் வெடி சத்தம் கேட்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கு பதிலடியாக ஈரான் ஏவுகணைகளை ஏவியதாக டெல் அவிவ் குற்றம் சாட்டியது. ஆனால், ஈரான் எந்த ஏவுகணையையும் ஏவவில்லை என்று மறுத்தது. நேட்டோ மாநாட்டிற்கு புறப்படுவதற்கு முன்பு, அமெரிக்க அதிபர் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளையும் போர் நிறுத்தத்தை கேள்விக்குறியாக்கியதற்காக விமர்சித்தார்.
"இஸ்ரேல் குண்டு போட்டிருக்க கூடாது. இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறிவிட்டது. இஸ்ரேல் நிறைய குண்டுகளை போட்டுவிட்டது. ஈரான் செய்தது தவறு என்றால் இஸ்ரேல் செய்ததும் தவறுதான். ஈரான் மற்றும் இஸ்ரேல் நீண்ட காலமாக சண்டையிட்டு கொண்டிருக்கின்றன. என்ன செய்வதென்று அவர்களுக்கே தெரியவில்லை" என்று இஸ்ரேலை கடுமையாக தாக்கி டிரம்ப் பேசியது கவனம் பெற்றுள்ளது .












Click it and Unblock the Notifications