திமுகவுக்கு "முதல் அடி"? திருமாவளவன் ஏன் அப்படி சொன்னார்.. மிரண்டு பார்க்கும் தமிழகம்.. அப்ப அதேதானா
சென்னை: அதிமுக கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், திருமாவளவன் கூறிய கருத்து, மொத்த அரசியல் களத்தின் கவனத்தையும் பெற்றுள்ளது.
விசிக தலைவர் தொல்.திருமாவளவனை பொறுத்தவரை, பாஜகவை தொடர்ந்து சாடிவருபவர்... திமுக கூட்டணியில் இருந்தாலும்கூட, பாஜகவின் அபாயம் குறித்து எடுத்துகூறி, அதிமுகவை எப்போதுமே அலர்ட் செய்தபடியும் இருப்பவர் திருமா.

"ஆதாயத்துக்காக இந்த பாஜகவினர் எந்த எல்லைக்கும் போவார்கள். அதற்குள் நாம் எல்லாரும் ஒன்று சேர வேண்டும்.. தவறவிட்டால், மறுபடியும் 2024-ல் ஆபத்து ஏற்படும்.. அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், அதிமுகவுக்கு மட்டும் பாதிப்பில்லை, தமிழ்நாட்டிற்கே பாதிப்பு. பாஜக இல்லாமல் தேர்தலை சந்திப்பது அதிமுகவுக்கு நல்லது" என்று அதிமுகவுக்கு அட்வைஸ் தந்தபடியே இருந்தார் திருமா.
அலர்ட்: சமீபத்தில் கர்நாடக தேர்தலின்போதுகூட, "கர்நாடகாவில் பாஜக தோல்வியால் அதன் கூட்டணியில் உள்ள அதிமுக மறு பரிசீலனை செய்ய வேண்டும்" என திருமாவளவன் அலர்ட் செய்திருந்தார்.
உடனே இதுகுறித்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள்... அதற்கு அவர், "திமுக கூட்டணியில் நீடிக்க, திருமாவளவனுக்கு விருப்பமில்லை" என்று போகிறபோக்கில் ஒரு பஞ்ச் வைத்துவிட்டு போனார் ஜெயக்குமார்.
ஜெயக்குமார்: அதுமட்டுமல்ல, "திருமாவளவனுக்கு விருப்பம் இல்லாமல்தான் திமுகவில் இருக்கிறார். தமிழகத்தில் தேர்தல் வரும்போது திமுக கூட்டணியில் இருந்து விசிக உள்ளிட்ட பல கட்சிகள் வெளியேறும் என்று மறுபடியும் ஜெயக்குமார், பற்ற வைத்த நெருப்பு, திமுக கூட்டணியில் கொழுந்துவிட்டு எரிந்தது. ஜெயக்குமார் ஏன் இப்படி சொன்னார்? எதற்காக சொன்னார்? என்ற அர்த்தமே விளங்காமல் குழம்பி போனார்கள் தொண்டர்கள்.
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், விசிகவின் கூட்டணி என்பது எப்போதுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடியது.. இன்று தமிழகத்தில் வாக்குகளை தீர்மானிக்கும் மிக முக்கிய சக்தியாக விசிக திகழ்கிறது.. அதற்கான முக்கியத்துவமும் அரசியல் களத்தில் விசிகவுக்கு பெருகி வருகிறது என்றாலும், கூட்டணி விவகாரத்தில் மட்டும் சலசலப்புகள் ஓய்வதில்லை. தற்போது திமுக கூட்டணியில் விசிக உள்ளது என்றாலும், மீண்டும் சலசலப்புகள் வட்டமடித்தவாறே உள்ளன.
கட்சிகள்: இதற்கு காரணம், அதிமுக கூட்டணி உறுதியாகவில்லை.. இதுவரை கூட்டணி தொடர்பாக எந்த கட்சியும், தங்கள் முடிவை வெளிப்படையாக அறிவிக்கவுமில்லை. மேலும், விசிகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவர எடப்பாடி தரப்பு முயன்றதாகவும் செய்திகள் கசிந்தன.
இப்படிப்பட்ட சூழலில்தான், திடீரென வெள்ளை அறிக்கை கேட்டுள்ளார் திருமாவளவன். வெள்ள நிவாரண பணிகளுக்கு செலவிட்ட ரூ.4 ஆயிரம் கோடி தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில் திருமாவும் இதையே கேட்டிருப்பது, பலரையும் கவனிக்க வைத்துள்ளது.
ஆர்எஸ் பாரதி: ஒருவேளை, கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றத்துக்கான அறிகுறியா இது? என்று மறுபடியும் புகைச்சல் கிளம்பியிருக்கிறது. இதுகுறித்து திமுகவின் அமைப்பு செயலாளார் ஆர்எஸ் பாரதியிடமே செய்தியாளர்கள் கேட்டனர்..
அதற்கு அவர், "வெள்ளை அறிக்கை அவசியம் என்றால் வெளியிடுவதில் தவறில்லை என திருமாவளவன் கூறியிருக்கிறார். ஒவ்வொரு கட்சியும் தங்கள் எதிர் கருத்துகளை சொல்வார்கள். எல்லோரும் ஒரே கட்சி இல்லையே. அவர்களுக்கென தனி கொள்கை இருக்கிறது. மக்களவை தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலை விசிகவுடன் இணைந்தே சந்தித்து உள்ளோம். எங்களின் கூட்டணி வலுவாக இருக்கிறது" என்றார்.
திருமாவளவன்: ஒருமுறை செய்தியாளர் ஒருவர் திருமாவளவனிடம் "திமுககாரர் போலவே பேசறீங்களே" என்று கேட்டார்.. அப்போது ஆவேசத்தில் கொந்தளித்த திருமா, "நான் திமுககாரனா? திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறதாலேயே இப்படி நீங்கள் அநாகரீகமாக பேசக்கூடாது.. திமுகவை எதிர்த்து எங்களை மாதிரி போராட்டங்களை யாரும் நடத்தவில்லை.. தலித்துகள் பிரச்சனைகளுக்காக இந்த 2 ஆண்டுகளில் 10 போராட்டங்களை நடத்தி உள்ளோம்" என்று சீறியிருந்தார்.
ஆக, ஒரே கூட்டணியிலே இருந்தாலும்கூட, ஆளும்தரப்பை விமர்சிக்க விசிக தயங்குவதில்லை என்பதை மறுக்க முடியாது.. அந்தவகையில், இந்த வெள்ளை அறிக்கையையும் திருமாவளவன் கேட்டிருக்கலாம் என்றே கருதப்படுகிறது.. எனினும், திருமா கேட்ட இந்த வெள்ளை அறிக்கையானது, அரசியல் களத்தையே திகைக்க வைத்துவிட்டது என்பதையும் மறுக்க முடியாது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications