‘கண்’ வைத்த சுதீஷ்.. எடப்பாடி ‘டீல்’.. கள்ளக்குறிச்சியை தேமுதிக விட்டுக் கொடுத்ததன் பின்னணி இதுதானா?
சென்னை: கள்ளக்குறிச்சி தொகுதி கட்டாயம் வேண்டும் என முரண்டு பிடித்த தேமுதிக, பின்னர் விட்டுக் கொடுத்தது ஏன் என்பது பற்றிய பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. அதன்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய 5 சீட்கள் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இறங்கி வந்த பிரேமலதா: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதலில் 14 லோக்சபா சீட் + 1 ராஜ்யசபா சீட் தரும் கட்சியுடன் கூட்டணி என கடந்த மாதம் கூறினார். ஆனால், பிரேமலதாவின் இந்த டிமாண்டால் தேமுதிகவை கட்சிகள் நெருங்காத நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வந்தார். தேமுதிகவுக்கு 5 லோக்சபா சீட் + 1 ராஜ்யசபா சீட் என பாஜக, அதிமுகவிடம் டிமாண்ட் வைத்தார் பிரேமலதா.
பாஜகவோ, ராஜ்யசபா சீட் கேட்கும் கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதித்தது. எனினும், அதிமுக தரப்பில் தொடர்ந்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எஸ்பி வேலுமணி உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் பிரேமலதா வீட்டுக்கே நேரில் சென்று அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்.
இழுபறி மேல் இழுபறி: ஆனாலும் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. ஒருபக்கம் பாமக உடனும் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தியது அதிமுக. பாமகவோ, பாஜகவுடனும் பேசி வந்தது. ஒரு கட்டத்தில், பாஜகவிடம் 10 சீட்களை வாங்கிக்கொண்டு கூட்டணியில் இணைந்தது பாமக. இதையடுத்து, தேமுதிகவை தங்கள் கூட்டணியில் இணைத்தாக வேண்டும், பெரிய கட்சியே கூட்டணியில் இல்லாவிட்டால் சிக்கலாகிவிடும் என பிளான் போட்டார் எடப்பாடி பழனிசாமி.
அதைத்தொடர்ந்து, தேமுதிகவுடன் இணக்கமாக பேச்சுவார்த்தையை தொடர்ந்தார். இரு கட்சிகளுக்குமே பரஸ்பரம் கூட்டணி தேவை என்ற நிலையில் பேச்சுவார்த்தை தீவிரமடைந்தது. 4 லோக்சபா சீட்களை ஒதுக்க அதிமுக தயாராக இருந்தது. ஆனால், 5 லோக்சபா சீட் + ஒரு ராஜ்ய சபா என பிடிவாதம் பிடித்தது தேமுதிக.
5 தொகுதி லிஸ்ட்: மேலும், தாங்கள் போட்டியிட விரும்பும் 5 தொகுதிகளின் பட்டியலையும் அதிமுகவிடம் தெரிவித்தது தேமுதிக. மத்திய சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட 5 தொகுதிகளைக் கேட்டது தேமுதிக. ஆனால், தங்கள் கட்சியில் கள்ளக்குறிச்சியில் குமரகுருவுக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதால் தேமுதிகவுக்கு ஒதுக்க முடியாது, வேறு தொகுதியை வாங்கிக் கொள்ளுங்கள் என்றது அதிமுக.
ஆனால், கள்ளக்குறிச்சி தேமுதிகவின் லிஸ்ட்டில் டாப்பில் இருந்தது. கள்ளக்குறிச்சி தொகுதி உருவாக்கப்பட்ட பிறகு நடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் ஆதிசங்கர், பாமக வேட்பாளர் தனராசு ஆகியோரை எதிர்த்து களமிறங்கினார் விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ். அந்தத் தேர்தலில் 1,32,223 வாக்குகளைப் பெற்று மூன்றாமிடம் பிடித்தார்.
கள்ளக்குறிச்சியில் கண் வைத்திருந்த சுதீஷ்: அதேபோல 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் தே.மு.தி.க சார்பாக போட்டியிட்ட ஈஸ்வரன் 1,04,183 ஓட்டுகளைப் பெற்றார். சேலத்தில் போட்டியிட்ட எல்.கே.சுதீஷ், 2 லட்சத்து ஆயிரம் வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் கள்ளக்குறிச்சி தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. தேமுதிக சார்பில் எல்கே சுதீஷ் களமிறங்கினார். இந்த தேர்தலில் 3,21,794 வாக்குகள் பெற்றார் சுதீஷ். திமுகவின் கவுதம சிகாமணி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
அப்போ ராஜ்யசபா கொடுங்க: கள்ளக்குறிச்சியில் மீண்டும் எல்.கே சுதீஷ் களமிறங்க விரும்பினார். கள்ளக்குறிச்சி தர முடியாது என அதிமுக தரப்பு உறுதியாக நின்றது. கள்ளக்குறிச்சி வேண்டும் என்பதற்காக சுதீஷே நேற்று எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு நேரில் சென்று பேசினார். ஆனாலும், குமரகுருவுக்கு சீட் கொடுக்க வேண்டும் என உறுதியாக இருந்துள்ளார் எடப்பாடி.
அப்படியென்றால் சுதீஷை ராஜ்யசபா எம்.பி ஆக்க வேண்டும் என நிர்ப்பந்தித்துள்ளது தேமுதிக தரப்பு. இதையடுத்தே, கள்ளக்குறிச்சி தொகுதியை விட்டுக் கொடுக்கும் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை ஒதுக்க அதிமுக தரப்பு முன்வந்ததாம்.
நிபந்தனை: அதோடு, 2026 சட்டசபை தேர்தலுக்கும் தேமுதிக அதிமுக கூட்டணி தொடர வேண்டும் என நிபந்தனை விதித்ததோடு, ராஜ்யசபா சீட்டையும் 2026ஆம் ஆண்டில் தான் கொடுப்போம் என்றும் கூறியதாம் அதிமுக. இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட பிரேமலதா, அதிமுகவுடன் 5 லோக்சபா தொகுதிகள் உடன்பாட்டில் சம்மதித்து கையெழுத்திட்டாராம்.
ராஜ்யசபா சீட் தர எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டது பற்றி இன்றைய பிரஸ் மீட்டிலும் உறுதி செய்தார் பிரேமலதா விஜயகாந்த். வெற்றிலை பாக்கு மாற்றி உறுதி செய்துவிட்டோம். ராஜ்யசபா எம்.பி சீட் உறுதி. ராஜ்யசபா எம்.பி ஆகப்போவது யார் என்பது அறிவிக்கப்படும். தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் பிரேமலதா.












Click it and Unblock the Notifications