அண்ணாமலையின் ரபேல் வாட்சின் உண்மையான விலை தெரியுமா? அம்மாடி.. இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை தான் அணிந்து இருக்கும் வாட்ச் ரபேல் எடிஷன் வாட்ச் என்று கூறி உள்ளார். அந்த வாட்சின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம். இந்த வாட்ச் இணையம் முழுக்க பல விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை கையில் ஒரு வாட்ச் வைத்து இருக்கிறார். அந்த வாட்சின் விலை 3 - 4 லட்சம் ரூபாய் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதுதான் அவரின் வாட்ச் சர்ச்சைக்கு காரணம் ஆகி உள்ளது.
இத்தனை லட்சம் ரூபாய்க்கு அண்ணாமலை வாட்ச் வாங்கியது எப்படி. வாட்ச் வாங்கவே இவ்வளவு காசு இருக்கிறது என்றால், அவரிடம் எவ்வளவு காசு இருக்கும். இவர்தான் ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவரா? என்ன கதை சொல்கிறாரா? என்று நெட்டிசன்கள், திமுகவினர் பலர் பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர்.

விளக்கம்
இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பதிலில், இந்தியாவிடம் சீனா வாலாட்ட நினைக்கிறது. இதற்கு காரணம் ரபேல் விமானங்கள், ரபேல் விமானங்கள் வந்த பின் நம்முடைய போர் வியூகங்கள் மாறி உள்ளன. நான் கட்டி இருக்கும் வாட்ச் ரப்பில் விமான பாகங்களை வைத்து செய்தது. ரபேல் விமான பாகங்களை வைத்து 500 வாட்சுகளை செய்தார்கள். இது சிறப்புப் பதிப்பு. உலகில் 500 பேரிடம் மட்டுமே இந்த வாட்ச் இருக்கிறது. அதில் ஒன்று என்னிடம் இருக்கிறது. அந்த விமானத்தில் உள்ள பாகங்கள் இதில் இருக்கும்.

என்ன சொன்னார்?
இந்திய ராணுவத்தின் ரபேல் விமானம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதை ஓட்டும் பாக்கியம்தான் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் அதை வைத்து உருவாக்கப்பட்ட வாட்சை அணியும் பாக்கியம் கிடைத்து உள்ளது. எனக்கு இது போதும். நான் தேசியவாதி அதனால் இந்த வாட்சை அணிகிறேன். இதை வைத்து பிரிவினைவாதிகள்தான் சர்ச்சை செய்வார்கள். உலகில் இது போல 500 வாட்ச்கள்தான் உள்ளது. இதில் என்னுடைய வாட்ச் 149ஆவது வாட்ச்சாகும், என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். ஆனால் விவசாய குடும்பத்தில் பிறந்த அண்ணாமலை இவ்வளவு லட்சத்திற்கு வாட்ச் வைத்து இருப்பது இன்னும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

அண்ணாமலை ரபேல்
அண்ணாமலை குறிப்பிட்ட இந்த ரபேல் வாட்ச் பற்றி பார்க்கலாம். ரபேல் என்பது பிரான்ஸ் நாட்டின் போர் விமானம் ஆகும். டஸால்ட் நிறுவனத்தின் இந்த போர் விமானத்தைதான் இந்தியாவும் பயன்படுத்தி வருகிறது. இதற்கான ரபேல் டீலிங்கும் ஊழல் புகார்களை எதிர்கொண்டு பெரிய சர்ச்சையானது. இந்த டஸால்ட் நிறுவனமும் பிரபல வாட்ச் தயாரிப்பு நிறுவனமான பெல் அண்ட் ராஸ் நிறுவனமும் அடிக்கடி இணைந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. டஸால்ட் நிறுவனத்தின் போர் விமானங்களை பறைசாற்றும் விதமாக பெல் அண்ட் ராஸ் நிறுவனம் நிறைய வாட்ச் சீரிஸ்களை வெளியிட்டுள்ளது.

ரபேல் வாட்ச்
அந்த வகையில் பல்கான் போர் விமானத்தை பாராட்டும் விதமாக அதன் 50ம் ஆண்டு விழாவில் பல்கான் போர் விமான மாடல் வாட்சை பெல் அண்ட் ராஸ் நிறுவனம் வெளியிட்டது. அதன்பின் ரபேல் விமானத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக சில வருடங்களுக்கு முன் ரபேல் மாடல் வாட்சுகளை வெளியிட்டது. இந்த மாடல் வாட்சுகள் இந்திய ரூபாயில் அப்போது 4.40 லட்சத்திற்கு விற்பனை ஆனது. இதில் மொத்தம் 500 மாடல்கள் மட்டுமே உலகம் முழுக்க தயாரிக்கப்பட்டது. அப்போதே புக் செய்த 500 பேருக்கு மட்டுமே உலகில் இந்த வாட்ச் கிடைத்தது.

எப்படிப்பட்டது?
இந்த வாட்சைத்தான் அண்ணாமலை பயன்படுத்தி வருகிறார். ஆட்டோமேட்டிக் டைப் வாட்சான இது மிக கடினமான இடங்களில் கூட பயன்படுத்தும் அளவிற்கு மிக வலிமையானது. இதன் கேசிங் செராமிக் மூலம் செய்யப்பட்டது. ரபேல் விமானங்களின் பல்வேறு பாகங்கள் செராமிக் மூலம் உருவாக்கப்பட்டது ஆகும். இது மிகவும் வலிமையாக இருக்கும். அனைத்து விதமான வானிலையையும் தாங்கும். நிறம் குறையாது. ரபேல் விமானத்தின் அதே லைட் கிரே நிறத்தில் இதில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் பேண்ட் மட்டும் ரப்பரில் உருவாக்கப்பட்டது.

ரபேல் விமானம்
உள்ளே இருக்கும் வாட்ச் அப்படியே ரபேல் விமானத்தில் இருக்கும் மீட்டர் போலவே வடிவமைக்கப்பட்டு இருக்கும். முள் கூட ஆரஞ்சு நிறத்தில் வைக்கப்பட்டு இருக்கும். ஏரோஸ்பேஸ் துறையில் செராமிக் மிக முக்கியமான பொருள் என்பதை அதை இதில் பயன்படுத்தி உள்ளனர். ஆசிட் வீச்சை கூட தாங்கும் திறன் கொண்டது ஆகும் இது. இது வாட்டர் ஃப்ரூப் திறன் கொண்டது ஆகும். sapphire கிளாஸ் இதன் கண்ணாடியில் பயன்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி எழுப்பி உள்ள கேள்வியில், அண்ணாமலை கட்டியுள்ள watch விலை 8,00,000 மேல்.அதன் நிறுவனம் ஆடம்பர luxury watch செய்யும் bell and ross என்ற சுவிச்சர்லாந்த் நிறுவனம்! அண்ணாமலை இதில் தேசியவாதி என பெருமை கொள்ள எதுவும் இல்லை. அதன் விலையும் குறைவு இல்லை இதை இவருக்கு யார் பரிசாக கொடுத்தார் என்பது தான் கேள்வி? என்று கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications